Kidny

Kidny

வெற்றிடத்தை நோக்கி ....


-எஸ்.றிபான்-
இலங்கை முஸ்லிம்களின் அரசியலைப் பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தை வெற்றிடத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகவே இருக்கின்றது. முஸ்லிம்களிடையே பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இவைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக மக்கள் செல்வாக்கைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. இதனால், முஸ்லிம்களின் அரசியல் பலம் வெற்றிடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதனை தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இக்கட்சியின் தலைமைக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கின்றது.

நல்லாட்சியும், முஸ்லிம்களும்

இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுவதற்கு முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய இடத்தினை வகித்தது. கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் குறைந்துள்ளன. ஆயினும், அன்றைய ஆட்சியில் ஏற்பட்ட இழப்புக்கள் இன்னும் நிபர்த்தி செய்யப்படவில்லை. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முதல் காணி, மீள்குடியேற்றம் என பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றிக்கு தீர்வுகளை வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகத் தெரியவில்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

 முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் வசைபாடும் புலவர்களாக இருக்கின்றார்கள். தங்களின் பேச்சுக்களில் நாகரிகத்தை வெளிப்படுத்திய கட்சித் தலைவர்களும் அநாகரிகமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை எடுத்துக் கூறாது. தமது கட்சியின் முரண்பாட்டாளர்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருப்பதனைக் காண்கின்றோம்.

இந்நிலையில் அரசாங்கத்தின் நகர்வுகள் உள்ளுராட்சி தேர்தலை நோக்கியதாக இருக்கின்றது. சில வேளைகளில் கிழக்கு, வடமத்தி, சப்பிரகமுவ ஆகிய மாகாணங்களில் தேர்தல்கள் நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதலால், எப்படியும் ஒரு தேர்தல் விரைவில் வருவதற்குரிய சாத்தியங்கள் உள்ளன. இதனால், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்கு அடிக்கடி விஜயம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

நல்லாட்சியில் முஸ்லிம்களின் எந்த உரிமையும் மீட்கப்படவில்லை. ஆயினும், முஸ்லிம் கட்சிகள் யாவும் நல்லாட்சியில் பங்குதாரிகள் என்ற பட்டத்தைச் சுமந்துள்ளன. அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளார்கள். தமது அமைச்சின் மூலமான நிதி ஒதுக்கீட்டில் சுமார் 80வீதமானவற்றை தமது மாவட்டத்திற்கு மாத்திரம் ஒதுக்கி அபிவிருத்தி வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தின் வெற்றியை உறுதி செய்து கொள்வதற்கு பதிலாக தமது வெற்றியை உறுதி செய்து கொள்வதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், தங்களை முஸ்லிம்களின் தேசிய தலைவர் என்று அழைத்துக் கொள்வதில் எல்லா முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் பெரிதும் ஆசை வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்விதமாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலும், கடந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற எதிர்வினைகளைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்கள். இவர்களின் இந்நிலைப்பாடு கடந்த தேர்தல்களில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் தாக்கப்படுகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். இத்தீய செயல்களுக்கு இந்த இயக்கம் துணை போகாது என்று மேடைகளில் மனோகரா படத்தில் சிவாஜி கணேசன் வசனம் பேசியதனைப் போன்று கர்ச்சித்ததையை நினைவுபடுத்துவதாக உள்ளது. தேர்லொன்று வருமென்பதற்காக முஸ்லிம்களின் உரிமைகளையும், அபிலாசைகளையும் தூசி தட்டத் தொடங்கியுள்ளார்கள்.

முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக புத்தர் சிலையை எல்லைக் கற்களாக போடுவதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது. மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை வைத்து எம்மை வேண்டுமென்று வம்புக்கு இழுக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பொறுமையுடன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற விடயங்களை இல்லாமல் செய்வதற்கு திரைமறைவில் நாங்கள் அரசாங்கத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றோம் என்றெல்லாம் முஸ்லிம்கள் மத்தியில் அம்புலி மாமா கதை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நல்லாட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்ற உண்மையைத் தவிர ஆட்சி மாற்றம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்களில் குறைந்த பட்சத்தில் கூட நிறைவேற்றப்படவில்லை.

முஸ்லிம்களுக்கு பாதகம்

நல்லாட்சி அரசாங்கம் தனியே தமிழர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் கொள்கையை கொண்டுள்ளதாகவே உள்ளது. அரசியல் யாப்பு மாற்றம், தேர்தல் மாற்றம், உள்ளுராட்சி வட்டாரங்களின் பிரிப்பு, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, அபிவிருத்தி என எல்லா வகையிலும் தமிழர் தரப்பை திருப்திபடுத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தட்டிக் கழித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியல் பலத்தை மேலும் சிதைக்கும் வகையில் நல்லாட்சி அரசாங்கம் மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. இதனையிட்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கவனத்தை செலுத்துவதில்லை.

முஸ்லிம்களின் உரிமைகள் கிடப்பில் போடப்பட்டுள்ள இன்றைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் எல்லா முஸ்லிம் பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு கல்நாட்டும் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதனை யாரும் குறைகாண முடியாது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால், இந்த அபிவிருத்திகளோடு முஸ்லிம்களின் காணிகளும், ஏனைய உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளையும் ரவூப் ஹக்கீம் எடுக்க வேண்டும். ஏனைய முஸ்லிம் கட்சிகளை விடவும் முஸ்லிம் காங்கிரஸ்தான் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் தமக்குள்ள அந்தஸ்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உரிமைகளில்லாத அபிவிருத்திகள் சமூகத்தை அடிமைத்தனமாக்கிவிடும். இன்று முஸ்லிம் அரசியல் கட்சிகள் யாவும் அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் அனைத்து மாற்று நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே இருக்கின்றன. இந்நிலை நீடித்துக் கொண்டிருப்பதனையும் காண முடிகின்றது. ஆதலால், முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் முஸ்லிம்கள் வெற்றிடத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாகவே உள்ளது.

தேர்தல் முறையில் மாற்றமும், உள்ளுராட்சி சபைகளின் வட்டார எல்லைகளும் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைவடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைவரும் இதனையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும், அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு ஆதரவாகவும் உள்ளார்கள். மக்கள் மத்தியில் ஒரு பேச்சும், ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர்களுடன் ஒரு பேச்சும், அமைச்சரவையில் ஒரு பேச்சுமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உறுதியாக செயற்படுவதற்கு பதிலாக எல்லா இடங்களிலும் அரசாங்கத்தின் தலைவர்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு முயற்சிகளை எடுக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இடத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்நாடகத்தினால் முஸ்லிம் சமூகம் அதிகம் இழந்துள்ளது. ஒரு சமூகத்தின் இழப்புக்கள் ஈடுசெய்யப்படாத வரை அச்சசமூகத்தினால் தலை நிமிர்ந்து வாழ முடியாது.

தமிழர் தரப்பின் நகர்வு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் தமிழ் மக்களுக்குரிய தீர்வைவினை நோக்கியதாக இருக்கின்றது. தமிழர்கள் எதிர் பார்க்கின்ற தீர்வுகள் கிடைக்காது போனாலும் அவர்களின் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்ற விடயங்கள் யாவும் தமிழர்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றும் வகையில்தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பலவீனமான இன்றைய நல்லாட்சியின் காலத்தில் தமிழர்களுக்கு அதிக பட்சம் எதனைப் பெற்றுக் கொடுக்க முடியுமோ அதனைப் பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாகவும், அதன் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தாலும் அக்கட்சி அரசாங்கத் தரப்பாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக பலரும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்றைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுத்து அரசாங்கத்தை கலைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆட்சியாளர்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் உள்ள பலவீனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இவ்வாறு நடந்து கொண்டிருக்கின்ற அதே வேளை, அரசாங்கத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவற்றை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டுமென்று அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் அரசாங்கம் அரசியல் அதிகாரம் பற்றிய விடயத்தில் தமிழர்களை ஏமாற்றும் போக்கைக் கொண்டிருப்பதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உணர்ந்துள்ளது. இதனால், தாங்கள் மஹிந்தராஜபக்ஷவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் தயார் என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆட்சியின் பங்காளர் என்ற பெயரை இது வரைக்கும் பெற்றுக் கொள்ள விரும்பாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மஹிந்தவுடன் ஆட்சியாளராக மாறுவதற்கும் தயார் நிலையில் உள்ளோம் என்ற செய்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எச்சரிக்கையாகும். பலவீன நிலையில உள்ள அரசாங்கத்தினர் தமது கைகளில் உள்ள ஆட்சியை மஹிந்தவின் கைகளுக்கு மாறுவதனை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக எதனையும் செய்வதற்கும் தயங்க மாட்டார்கள்.

மறுபுறத்தில் மஹிந்தவுடன் இணைந்து ஆட்;சி அமைப்போம் என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புகளை ஏற்படுத்தும் என்பதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நன்கு தெரியும். தமிழர்கள் மஹிந்தராஜபக்ஷவை ஒரு போதும் விரும்பமாட்டார்கள். இறுதிக்கட்ட யுத்தத்தின் வடு அவர்களின் மனங்களில் இன்னும் நிலையாகவே உள்ளன. இந்நிலையில் கூட தமிழர்களின் எண்ணங்களை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களோடு நாங்கள் இணைந்து செயற்படுவோம் என்பதாகவே அக்கட்சியின் முடிவு உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் ஆட்சியில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதல்ல. மாறாக ஆட்சி அமைப்பதற்கு துணை செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்வதாகும். ஆனால், முஸ்லிம் கட்சிகளினதும், தலைவர்களினதும் நிலைப்பாடு இதிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கின்றது. முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாது போனாலும் கவலையில்லை. அரசாங்கம் கலையக் கூடாது. அமைச்சர் பதவிகளுக்காகவே அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மடித்துக் கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள். இதனால், முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகளும் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்.

ஆட்சி மாற்றம்

காலத்திற்கு காலம் ஆட்சி மாறிய போதிலும் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கையில் உறுதியாகவே உள்ளார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் எல்லா அரசாங்கத்தின் காலத்திலும் ஆட்சியின் பங்காளிகளாக இருந்துள்ளன. தேர்தல் காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவார்கள். தேர்தல் முடிந்ததும் அரசாங்கத்தைப் பாராட்டுவார்கள். அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள். தமக்கு அமைச்சர் பதவி கிடைக்குமாக இருந்தால் அதற்காக சமூகத்தை காட்டிக் கொடுக்கவும், விற்றுக் கொடுக்கவும், சமூகத்தை விட்டு விலகி நிற்கவும் துணிவார்கள். மர்ஹும் அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் இவ்விதமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால், முஸ்லிம்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. காணிகள் களவாடப்படுகின்றன. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த பாதக செயல்களுக்கு முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக செயற்படுகின்றன.

மேலும், முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே முஸ்லிம் சமூகம் பற்றிய ஆய்வு ரீதியான புள்ளி விபரங்களோ, அரசியல் தீர்வு குறித்த யோசனைகள் அடங்கிய முன்மொழிவுகளோ, முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், அரசியல் பற்றியதொரு எதிர்கால சிந்தனைகளும், முன்னெடுப்புக்களும் கிடையாது. ஒரு சமூகத்திற்குரிய அனைத்துக் கட்டமைப்பிலும் குறைபாடுகளைக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளும், தலைவர்களும்தான் முஸ்லிம்களின் அரசியலை பொறுப்பு எடுத்துள்ளார்கள். இதன் மூலமாக அவர்கள் தங்களின் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வருமான அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவைகளுக்கு விலையாக முஸ்லிம் சமூகம் தேய்வடைந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்கள், கட்சிகள் ஆகியவற்றினை இனியும் சரியென்று நம்பக் கூடாது. முஸ்லிம்களின் அரசியல் இவ்வாறு தொடர்ந்தும் சென்று கொண்டிருக்குமாயின், அவர்களின் வழக்கமான கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்குமாயின் பயணத்தின் முடிவு வெற்றிடமாகவே இருக்கும். ஆதலால், முஸ்லிம் சமூகம் தங்களை சுதாகரித்துக் கொண்டு இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டும்.

நன்றி - விடிவெள்ளி 08.09.2017
வெற்றிடத்தை நோக்கி .... வெற்றிடத்தை நோக்கி .... Reviewed by Madawala News on 9/09/2017 08:04:00 PM Rating: 5