Ad Space Available here

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!


இஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன் படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி செய்கின்றன.

இன்று நாங்கள் இஸ்லாம் அல்லாத நாகரீக கலாச்சார பண்பாட்டு ஆதிக்க சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், குறிப்பாக வேகமாக ஊடுருவிச் செல்வாக்கு செலுத்துகின்ற ஊடகங்கள்,இணைய பாவனை, செல்லிட தொலைபேசிகள், சமூக வலைத்தளங்கள், முகநூல் வட்ஸ்-அப்,வைபர், டுவீட்டார் போன்ற சமூக ஊடகங்கள் என்பன புதிய தலைமுறையினரை கலாச்சார பூகோளமயமாக்களின் கீழ் வேகமாக உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன.

குடும்ப நிறுவனத்தின் அஸ்திவாரங்களை, கட்டுக் கோப்புக்களை ஆட்டங்காணச் செய்கின்ற சினிமாத்தனமான காதல் கலாச்சாரம், கலாச்சார பண்பாட்டு சமூக கட்டுக் கோப்பு விழுமியங்களை சிதைக்கின்ற தொலைக் காட்சி தொடர் நாடகங்கள், விளம்பரங்கள் இவ்வாறு இன்னொரன்ன கலாச்சார பூகோளமயமாக்கலின் ஊடுருவல்கள் எமது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்கள் இன்னுமொரு வகையான போதையை, மதிமயக்கத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது.

ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.

இப்பொழுது ஆன்மீக நம்பிக்க்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில்  மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.

அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.

போதை வஸ்துக்கள், அபாயகரமான  போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.

இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.

இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.

மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.

எனது வீடும், விட்டுச் சூழலும்   மாசின்றி தூய்மையாக இருக்கின்றது என்பதில் திருப்திப் பட்டுக் கொள்ளாதீர்கள், மரணத்தை விளைவிக்கும் நுளம்பு அண்டை அயலவர் வீடுகளில் இருந்து உங்களை நாடி வரும்.

அதே போன்றுதான் எல்லா விதமான சீர்கேடுகளும் நாளை உங்கள் வீட்டிற்குள் குடி புகுந்து குடும்பம் நடத்தும்.

எனது குடும்பம், எனது சமூகம் எனது இனம் என்றில்லாது நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற பணிகளில் கூட்டுப் பொறுப்புடன் தேசத்திற்கான பங்களிப்பினைச் செய்வதில் தான் "கிலாபாத்" பணி இருக்கிறது.

இவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய சமூக மத்திய நிலையங்களான பள்ளி வாயல்கள் காலத்திற்கேற்ப காத்திரமான பங்களிப்பினை செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றன, பாரம்பரிய மரபு வழிகளுடன் குத்பாக்கள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன.

இளம் தலைமுறையினரை மஸ்ஜிதுகளின் பக்கம் கவர்ந்திழுக்கின்ற நிகழ்ச்சிகளை கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்களை ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகளோடு வழங்குகின்ற முற்போக்கான திட்டங்களை மஸ்ஜிதுகள் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு மஹல்லாவிலும் புதிய தலைமுறையினரை அதிகமதிகம் மையப்படுத்தி மேற்கொள்வதில் சமூகம் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும், முஸ்லிம் சமூக பெண்பிள்ளைகள் மாத்திரமன்றி ஆண் சிறார்களையும் இஸ்லாமிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு வழிநடத்துகின்ற பாரிய பொறுப்பினை மஸ்ஜிதுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் பழைய மாணவர் அமைப்புக்கள்,அஹதிய்ய சம்மேளனங்கள் உலமாக்கள் கல்விமான்கள் வர்த்தக சமூகத்தினர்,இளைஞர் மாதர் அமைப்புக்கள் இந்த விவகாரத்தில் பங்களிப்புச் செய்வதற்குரிய வழிவகைகளை கண்டறிந்து அமுலுக்கு கொண்டுவரல் வேண்டும்.

ஒவ்வொரு  மனிதனும் அல்லாஹ்வின் பிரதிநிதி கலீபா ஆவான்.

-இனாமுல்லாஹ் மஸிஹுதீன் -
கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..! கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..! Reviewed by Madawala News on 9/11/2017 08:41:00 AM Rating: 5