Kidny

Kidny

அகதிகள் மீது மிளகாய்த்தூள் தெளிக்கும் அவலமும் ஆங் சாங் சூகியின் பதிலும் மோடியின் சதியும் .


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

இனச் சுத்திகரிப்பு' என்ற பெயரில் மியான்மரின் ரோஹிங்கியா இன மக்கள் அந்த நாட்டு ராணுவத்தால் அழிக்கப்பட்டு வருவதை அடுத்து, அந்த மக்கள் அங்கிருந்து பங்களாதேஷ் மற்றும் இந்திய எல்லைகளுக்கு விரைந்து வருகின்றனர். 2012-ல் இதுபோல ஏற்பட்டதொரு வன்முறையை அடுத்து, ஏற்கெனவே சுமார் 40,000 அகதிகள் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தனர். 'ரோஹிங்கியாக்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் இருக்கிறது' என்று உளவுத்துறை அறிவித்ததையடுத்து, ''இந்த நாற்பதாயிரம் பேரையும் நாடுகடத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளது'' என அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மியான்மர் நாட்டில், வன்முறைகளிலிருந்து தப்பித்து பங்களாதேஷ் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ரோஹிங்கியா மக்களை, 'ஆபத்தானவர்கள்’ என்கிற அடிப்படையில் விரட்டியடிப்பதற்கான முயற்சியை எல்லை ராணுவப் படை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், அவர்கள்மீது மிளகாய்த்தூள் கலந்த புகை குண்டுகளை வீசி விரட்டியடிக்கின்றனர்.

இதுகுறித்து எல்லைக் காவற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த அகதிகளை நாங்கள் கைதுசெய்ய விரும்பவில்லை. அதே சமயம், நூற்றுக்கணக்கில் இந்திய மண்ணில் நுழையும் அவர்களை எங்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர்களைக் காயப்படுத்தாமல் விரட்டியடிக்க இது மட்டும்தான் வழி’' என்றார்.

இதுபோன்ற ராணுவச் செயல்பாடுகள், ஊடகங்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டே நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி அண்மையில் மியான்மர் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவில் இருக்கும் ரோஹிங்கியா அகதிகள் பற்றி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சாங் சூகியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. இங்கே ஏற்கெனவே தஞ்சம் புகுந்திருக்கும் அகதிகளைப் பற்றியதான முடிவுகளும் அப்போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு எல்லை தாண்டிவரும் ரோஹிங்கியா இன மக்களும் விரட்டியடிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 4,20,000 ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷ் சென்று தஞ்சம் புகுந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் பேசிய அந்த நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா,  “இனச் சுத்திகரிப்பு என்கிற பெயரில் தனது மக்களைக் கொல்லுவதை மியான்மர் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்” என்று கூறியுள்ளார். இதுவரையில் 8,00,000 ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள். அவர்களில் பாதி பேர் கடந்த மூன்று வாரங்களில் அங்கே தஞ்சம் அடைந்தவர்கள். இது ஒருபக்கம் இருக்க... மறுபக்கம், குறைந்தபட்சமாக 400 பேர்வரை மியான்மர் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா மனித உரிமை கமிஷன் கூறியுள்ளது. இதை, 'இனப்படுகொலைக்கான பாடநூல் உதாரணம்’ என்று, அது தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சாங் சூகி இருக்கும் அதே நாட்டில்தான் இந்த இன அழிப்பு அநீதியும் நடந்துவருகிறது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆங் சாங் சூகி-யிடம் கேள்வி எழுப்பியபோது அவரிடமிருந்து விநோதமான பதில் கிடைத்தது, “ரோஹிங்கியா, இஸ்லாமியர்கள். அவர்கள் இருக்கும் பகுதியான ரக்கைன் நிலப்பரப்பைவிட்டு ஏன் மற்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்றே தெரியவில்லை? அது விசாரிக்கப்பட வேண்டியது” என்றார்.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒருவருக்குத் தன்னாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றுகுவிக்கப்படுவதுகூடத் தெரியாமல் இருக்கிறது என்பது சற்று விநோதமான நிலைதான்.
அகதிகள் மீது மிளகாய்த்தூள் தெளிக்கும் அவலமும் ஆங் சாங் சூகியின் பதிலும் மோடியின் சதியும் . அகதிகள் மீது மிளகாய்த்தூள் தெளிக்கும் அவலமும் ஆங் சாங் சூகியின் பதிலும் மோடியின் சதியும் . Reviewed by Madawala News on 9/25/2017 03:16:00 PM Rating: 5