Ad Space Available here

' அடேய்' வடகொரியா.. நிறுத்துடா. ( ஒரு சுவாரஸ்ய அரசியல் ஆய்வு)


-ஸபர் அஹ்மத் - 

வடகொரியாவை ஆளும் பையனுக்கும் மைத்ரிபால சிரிசேனாவுக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தம் என்று தெரியவில்லை.

பையன் சில நாட்களுக்கு முன்பு ஜப்பானுக்கு மேலால் பறந்து போய் பசுபிக் கடலில் விழுமாறு ஒரு ஏவுகணைப் பரிசோதனை செய்து தனக்குத் தானே கைதட்டி அகமகிழ அந்த அதிகாலை வேளையில் ஜப்பானியர்கள் அரண்டு போனார்கள்.உடனே வரிசைக் கிரமமாக உலக பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஜாம்பவான் தேசங்கள் எல்லாம் பெரு முதலாளி அமெரிக்காவுடன் சேர்ந்து வடகொரியாவுக்கு எதிராக கோரஸ் பாடின..

ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக எமது சார்பாக மைத்திரிபால சிரிசேனாவும் சாரத்தை மடித்து முழங்காலுக்கு மேலே கட்டி ' அடேய்' என்று  சொல்லி இருப்பது தான் இந்த வார ஹாட் டாபிக்..இரண்டு மாதங்களுக்கு முன்பு வடகொரியா ஏவுகணைப் பரிசோதனை செய்த போதும் இலங்கை வெளிநாட்டமைச்சு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது.உடனே ஊடகங்கள் ஏதோ கேட்கக் கூடாத நகைச்சுவையைக் கேட்டது போல தூக்கிப் பிடிக்க பதறிப் போன அரசாங்கம் அறிக்கை விட்டது 'நான் அல்ல,அவன்' என்று ஆளாளுக்கு கைநீட்டித் தப்பிக் கொண்டது.ஆனால் யார் தந்த தைரியமோ இம்முறை நிஜமாகவே அறிக்கைவிட்டு காலரை உயர்த்திக் கொண்டு நிற்கிறது.

உலகத்தில் எத்தனையோ பேரவலங்கள் நடந்து கொண்டு இருக்க உப்புப் பெறாத வடகொரியா மேட்டரில் கைவைப்பது அமெரிக்காவையும் அதன் அடிவருடி தேசங்களையும் திருப்திப்படுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.பணமும் அதிகாரமும் படைத்த மனிதர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு வால்பிடித்துத் தக்கண பிழைக்கும் குணம் சமூகத்தில் அடித்தட்டு மக்களிடம் மட்டுமல்ல தேசத்தை ஆளும் ஆட்சியாளர்களிடமும் காணப்படுகிறது என்பதற்கு இதைவிட்டால் வேறு நல்ல உதாரணம் இல்லை..

இது ரணில் ப்ளஸ் மைத்திரி அரசாங்கம்..ரணில் அமெரிக்காவில் பிறக்காத அமெரிக்கர்.மைத்திரிக்கு ஆட்சியை நடாத்திச் செல்ல அமெரிக்கா ஆதரவு வேஷம் போட வேண்டும்..விஜய் அண்ணா பாஷையில் சொன்னால் முதலாமவர் பிறந்ததில் இருந்தே ரவுடி.மற்றவர் பொழப்புக்கு ரவுடி...மைத்திரி, அமெரிக்கா டெனிமுக்கு மேலால் பெளத்த இலட்சணை பொருந்திய டீசேர்ட்டையும் போட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில்  இருக்கிறார்.சர்வதேச ரீதியில் பெரும் கவனயீர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மியான்மரில் நடக்கும் படுகொலைகள் தொடர்பாக இந்த அரசு குரல் கொடுக்க வேண்டும் என்று யார் யாரோ எதிர்பார்த்தார்கள்..

ஆனால் அதெல்லாம் இந்த ஜென்மத்தில் சாத்தியம் இல்லை.மியான்மரில் 87 வீதம் பெளத்தர்கள் இருக்கிறார்கள்.அமெரிக்கா மியான்மருக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இலங்கை வாய்பூட்டி இருக்க வேண்டிய முரண் இது தான்..

ஏதோ கொஞ்ச நஞ்ச மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு ஆட்சியாளர்கள் சுயாதீனமாய் தீர்மானம் எடுக்க முயன்றாலும் இந்த பெளத்த தேரர்கள் என்ற வர்க்கம் விடமாட்டாது போல இருக்கிறது.எல்லா முக்கிய பிரச்னைகளிலும் ஓடி வந்து பாய் போட்டு படுத்துக் கொள்கிறார்கள்.லேட்டஸ்டாக மியான்மர் ஆதரவு கோஷம் எழுப்புகிறார்கள்.

பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் என்ற பேரில் தேரர்கள் சகிதம் யார் யாரோ போய் மியன்மார் தூதரைச் சந்திக்கிறார்கள்.

இதெல்லாம் அறிந்தும் இந்த அரசு கள்ள மெளனம் சாதிக்கிறது.பெளத்த தேரர்களின் மகிமை தெரிந்ததாலோயோ என்னவோ கண்டி கிரிக்கட் மைதானத்தில் முத்தையா முரளிதரனின் பெயர் நீக்கப்பட்டு இருக்கும் அவலத்தை அவரது தந்தை நீதி கேட்டு நெடும் பயணம் ஏதும் போகாமல் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டுப் புலம்புகிறார்.

இப்படியே போனால் இந்த நாட்டில் பாராளுமன்றம் தேவையில்லை.

பாராளுமன்றத்தை இழுத்து மூடி சாவியை  எடுத்து வந்து கோட்டே சந்தியில் யாராவது திறப்பு வெட்டுபவனிடம் கொடுத்து ஐந்து சாவிகளை வெட்டி எடுத்து மூன்றை முக்கிய மூன்று பெளத்த பீடங்களின் தலைவர்களுக்கும் மற்ற இரண்டை பொதுபல சேனாவுக்கும் ராவணபலயுவுக்கும் கொடுத்துவிட்டால் உத்தமம் என்று எண்ணத் தோன்றுகிறது.மாஸ்டர் கீயை மைத்திரி வைத்திருக்கட்டும்...
' அடேய்' வடகொரியா.. நிறுத்துடா. ( ஒரு சுவாரஸ்ய அரசியல் ஆய்வு) ' அடேய்'  வடகொரியா.. நிறுத்துடா. ( ஒரு சுவாரஸ்ய அரசியல் ஆய்வு) Reviewed by Madawala News on 9/14/2017 04:50:00 PM Rating: 5