tg travels

திஸார பெரேரா அதிரடி சரவெடி... பாகிஸ்தானை வீழ்த்தியது உலக பதினொருவர் அணி.

- Hassim Mohamed Naleem-

உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சுதந்திர கிண்ண T20 போட்டி தொடரின் 2வது போட்டி லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற்றது. 

பரபரப்பான இப்போட்டியில் திஸார பெரேரா 19 பந்துகளில் விளாசிய 47 ஓட்டங்களின் உதவியுடன் உலக பதினொருவர் அணி திறில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸ் அஹமெட் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.

சொஹைப் மாலிக் 39 ஓட்டங்களையும், அஹமெட் ஷேஷாத் 43 ஓட்டங்களையும், பாபர் அசாம் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர், பந்துவீச்சில் இலங்கையின் திசார பெரேரா 3  ஓவர்களில் 23 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணிக்கு ஹசீம் அம்லா சிறப்பான தொடக்கம் கொடுத்தார். மறுமுனையில் விக்கெட்டுக்கள் சாய்ந்த போதிலும் ஐந்தாவதாக களமிறங்கிய திஸார பெரேராவுடன் இணைந்து இலக்கை நோக்கி நகர்த்தினார் அம்லா. மறுமுனையில் திஸார பெரேரா தாண்டவமாடி ஓட்டங்களைக் குவித்தார். இரண்டு ஓவர்களில் 33 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் திஸார பெரேரா சிக்ஸரை விளாசி அதிரடியைத் தொடர்ந்தார். 29 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் திஸார பெரேராவின் பிடியை மலிக் தவறவிட சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய திஸார பெரேரா அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசினார். இரண்டு பந்துகளில் ஆறு ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்தார். 

இறுதியில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்த உலக பதினொருவர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியை தனதாக்கியது. மூன்று போட்டிகள் கொண்ட சுதந்திரக்கிண்ணத் தொடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. இறுதிப்போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

ஹசீம் அம்லா ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களைப் பெற, திஸார பெரேரா 5 இமாலய சிக்ஸர்களுடன் 19 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசினார். ஆட்டநாயகனாகவும் திஸார பெரேராவே தெரிவானார்.


 
திஸார பெரேரா அதிரடி சரவெடி... பாகிஸ்தானை வீழ்த்தியது உலக பதினொருவர் அணி. திஸார பெரேரா அதிரடி சரவெடி... பாகிஸ்தானை வீழ்த்தியது உலக பதினொருவர் அணி. Reviewed by Madawala News on 9/14/2017 12:26:00 AM Rating: 5