Ad Space Available here

மர்ஹும் அஸ்ரப் எதனை விரும்பினார்..!


1987ம் ஆண்டு வடக்கும் கிழக்கும் முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாறாக  இணைக்கப்பட்டதை
அஸ்ரப் அவர்கள் கடுமையாக எதிர்த்து நின்றார்.

இதே காரணத்துக்காக வடகிழக்கு ஒப்பந்தத்தையே எதிர்த்து வந்த அஸ்ரப் அவர்கள்  1989ல் நடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்

(இந்த தேர்தலில் போட்டியிட்டால் நமது தலையிலே நாமலே மண்ணை அள்ளிப்போடுவதற்கு சமம் என்று கூறிய அஸ்ரப் திடீரென அந்த தேர்தலில் போட்டியிட்டதன் மர்மம் இன்றும் தெளிவு படுத்தப்படவில்லை).

அதன் பிற்பாடு இனிமேல் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படமாட்டாது என்ற நிலை வந்தபோது, வடகிழக்கு இணைந்ததனால் கிழக்குவாழ் முஸ்லிம்களின் அரசியல் பலம் குறைக்கப்படுகின்றது என்ற காரணத்தைக் கூறி அதற்கு பதிலாக தென்கிழக்கு அலகு ஒன்றை தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசிவந்தார்.

அந்த கோரிக்கையை தமிழ் தரப்போ அல்லது அரசாங்க தரப்போ கண்டுகொள்ளவில்லை, இது சம்பந்தமாக பேசுவதற்கு முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாககூட இருதரப்பும் ஒத்துக்கொள்ளவும் இல்லை.

தமிழ் தரப்பு இந்த விடயத்தில் எம்மை அலட்சியப்படுத்தியதற்கு காரணம், அவர்களுக்கு தேவையான கிழக்குமாகாணம் வடக்கோடு இணைக்கப்பட்டுவிட்டது, இனிமேல் முஸ்லிம்களின் தயவு எமக்கு தேவைபடாது என்ற காரணமேயாகும்.

இந்த நிலையில்தான் 2000ம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் அஸ்ரப் அவர்களின் பங்களிப்புடன் ஒரு தீர்வு திட்டமொன்று முன்வைக்கப்படுகின்றது, அந்த தீர்வு திட்டத்தை தனக்கு கிடைத்த சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைத்த அஸ்ரப் அவர்கள், அவருடைய உள்மனதிலே இருந்த என்னமான வடக்கிலிருந்து கிழக்கை பிரித்துவிட வேண்டும் என்ற என்னத்துக்கு உயிர் கொடுக்க நினைத்தார்.

அதன் காரணமாக அந்த ஒப்பந்தத்திலே தென்கிழக்கு அலகைப்பற்றி ஒன்றுமே கூறாமல், அதிலே இப்படி கூறியிருந்தார்.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு அமுழுக்கு வரும் காலத்திலிருந்து பத்துவருடங்களுக்கு வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக வழமைபோன்று இணைந்தேயிருக்கும் என்றும், பத்துவருடங்கள் முடிவதற்கு மூன்று மாதகாலத்துக்கு முன் கிழக்கு மக்களிடம், தொடர்ந்தும் வடக்கோடு இணைந்திருப்பதா அல்லது பிரியவேண்டுமா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், ஏதோ காரணத்தினால் அந்த வாக்கெடுப்பு உரிய காலத்துக்குள் நடத்தமுடியாது போனால், பத்துவருடங்கள் பூர்த்தியானதன் பின் இயல்பாகவே வடக்கும் கிழக்கும் பிரிந்துவிடும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதனை அஸ்ரப்தான் வடிவமைத்தும் இருந்தார்.

இதனூடாக தலைவர் அஸ்ரப் அவர்கள் எதனைச் சாதிக்க முற்பட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. கிழக்கு மாகாணம் பிரிந்தாலே போதும் வேறொன்றும் தேவையில்லை என்பதுதான் அவருடைய என்னமாகும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

ஆனால் இந்த தீர்வு திட்டம் ஏதோ காரணத்தினால் நடைமுறைக்கு வரவில்லை, இந்தக் காலப்பகுதியில் அஸ்ரப் அவர்களும் அகாலமரணமடைந்து விட்டார்.

அதன் பிறகு மஹிந்தவுடை ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பின் படி வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு 2009ல் ஆயுத போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. இதன் பின் வெளிநாட்டு அழுத்தங்கள் காரணமாக தமிழர்களுக்கு ஏதோ ஒரு தீர்வை முன்வைத்தேயாக வேண்டும் என்ற நிலைக்கு  இப்போது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

எங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து தரவேண்டும், அதேநேரம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்து போராடிவரும் தமிழ் தரப்பினர், இதற்காக முஸ்லிம் மக்களின் சம்மதத்தையும் கோரி நிற்கின்றனர்

இந்த நிலைமை வடக்கும் கிழக்கும் இணைந்திருந்தால் அவர்களுக்கு ஏற்படபோவதில்லை, மாறாக கிழக்கு பிரிந்ததன் காரணமாகவே முஸ்லிம்களின் சம்மதம் அவர்களுக்கு தேவைபடுகின்றது.

இப்போது முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு எங்களுக்கு கிழக்கு கிழக்காகவே இருக்கவேண்டும், எக்காரணம் கொண்டும் இணையவே கூடாது என்பதாகும். இதனை எல்லா முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றபோதும், மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மட்டும் எந்தவிதமான கருத்தையும் தெறிவிக்காமல் நழுவல்போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.

அண்மையில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு சில விட்டுக்கொடுப்புக்களுடன் நான் பேசத்தயார் என்றும், அதற்காக  உழுத்துப்போன தென்கிழக்கு அலகு பற்றி பேசுவோம் என்கின்றார். இதன் நண்மைதீமைகளைப் பற்றி அவர் யாரிடமும் இதுவரை பகிரங்கமாக பேசவும் கதைக்கவும் முன்வரவில்லை.

இதன் உள்நோக்கம் என்னவென்பதை யாரும் அறிந்ததாகவும் தெறியவில்லை, ஆகவே முன்னால் தலைவர் அஸ்ரப் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தென்கிழக்கை விட கிழக்குமாகாணம் தனியாக இருப்பதையே விரும்பியிருப்பார் என்பதே அவருடைய கடந்தகால செயல்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இதற்கு மாற்றமாக யார் நடக்கமுற்றபட்டாலும், அவர்கள் சமூகத்தின் துரோகியாகவே பார்க்கப்படுவார்கள் என்பதே உண்மையாகும்.

மர்ஹும் அஸ்ரப் எதனை விரும்பினார்..!  மர்ஹும் அஸ்ரப் எதனை விரும்பினார்..! Reviewed by Madawala News on 10/05/2017 11:44:00 PM Rating: 5