Kidny

Kidny

இலங்கையின் கடன்களை மீளச் செலுத்துவதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் 3 இலட்சத்து 489 கோடி ரூபா தேவைப்படும்..

இலங்கையின் கடன்களை மீளச் செலுத்துவதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் 3 இலட்சத்து 489 கோடி ரூபா தேவைப்படும் எனத் தெரிவித்த
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி ரீதியாக நாடு எதிர்கொள்ளும் சாவாலிலிருந்து மீள்வதற்கு சிறந்த கடன் மேலாண்மை திட்டமொன்றை கடைப்பிடிக்கவிருப்பதாகவும் கூறினார்.

வேலைவாய்ப்பு, திறமை மற்றும் பலம் நிறைந்த முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்புக்களால் முன்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பொருளாதார கொள்கை அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மூன்றாவது வருடமாகவும் பிரதமர் இந்த பொருளாதார கொள்கை அறிக்கையை முன்வைத்தார்.

சுகாதார சேவை, களியாட்டம், சுற்றுலாத்துறை, கல்வி, துறைமுகம் மற்றும் கப்பற்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, தகவல் தொழில்நுட்பம், மின்சக்தி போன்ற துறைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு அரச தனியார் பங்குடமை செயற்றிட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2015ஆம் ஆண்டு ஆட்சியைப் பெறுப்பேற்றபோது மிகவும் வீழ்ச்சி கண்டிருந்த பொருளாதாரமே நாட்டில் காணப்பட்டது. கடந்த காலத்தின் மீது பலி சுமத்திக் கொண்டிருப்பதால் கிடைக்கப் போகும் பலன் எதுவும் கிடையாது. கடந்த கால தவறுகளை சரிப்படுத்திக் கொண்டு முன்செல்வதற்கே நாம் முயற்சிக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் அரசின் மொத்த வருமானத்தில் 90.6 சதவீதம் கடன் சேவைகளுக்காகவே செலவிடப்பட்ட்து. 2016 ஆம் ஆண்டில் அது 80 சதவீதமாக இருந்தது. உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம் வருமானத்தை உருவாக்குதன் ஊடாக நிதி ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் செயற்பாடொன்றுக்கு அடித்தளமிட்டுள்ளதுடன், தற்போது அதன்மூலம் சாதகமான பிரதிபலன்கள் தென்பட ஆரம்பித்துள்ளன.

அரச நிதி வலுவடைந்துள்ளதுடன் கடந்த இரு வருடங்களில் வருமானமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியிலான விகிதத்தின் பிராகரம் அதிகரிப்பொன்றை காட்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் 11.6 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருமானத்துக்கு இடையிலான விகிதமானது 2016 ஆம் ஆண்டில் 14.2 சதவீதமாக அதிகரித்திருந்தது

2017 ஆம் ஆண்டில் முதல் 6 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வருமானத்துக்கு இடையிலான விகிதம் 6.7 சதவீதமாக பதிவாகியிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டில் முதலாவது அரையாண்டில் அந்த விகிதம் 6 சதவீதமாக மட்டுமே இருந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 79.3 சதவீதமாக இருக்கும் கடன் சுமையை 2020 ஆம் ஆண்டாகும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்க்கிறோம்

அதன்போது வரவு-செலவுத்திட்ட பாற்றாகுறையை 3.5 சதவீதத்துக்கும் குறைவாக வைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கிறோம். நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி நிதி முகாமைத்துவ பொறுப்பு சட்டமூலத்தை நாம் பலப்படுத்துவோம்.

இவை அனைத்திற்கும் மத்தியில் 2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரச கடன் முகாமைத்துவம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பலப்படுத்துவது சம்பந்தமாக எம் முன்னிலையில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமாகும் போது இருக்கும் கடன் தொகைக்கு அமைய பார்க்கும் போது 2018 ஆம் ஆண்டில் நாம் ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 400 கோடி (1974 பில்லியன்) ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல், 2019 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 500 கோடி (1515 பில்லியன்) ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும். 2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 3 இலட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக தொகையை நாம் கடனாக செலுத்த வேண்டியிருக்கும்.

இதற்கு முன்னர் இருந்திராத இந்த சவால்களை வெற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் மீண்டும் கடன் முகாமைத்துவ உபாயமொன்றை ஆரம்பித்துள்ளது. புதிய உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழ் எம்மால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களானது சர்வதேச சமூகத்தினரை போன்றே உள்நாட்டு பொருளாதார பிரதிநிதிகளினதும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

2025 ஆம் ஆண்டாகும் போது இலங்கையை செழுமைமிக்க நாடாக்குவதே எமது இலக்காகும். இந்த நோக்கை நடைமுறை சாத்தியமாக்கிக் கொள்வதென்றால் எமது செயற்பாடுகளில் வெளியுலகத்துடனும் கைக்கோர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரித்துக் கொள்வதற்கு தனியார் துறையினருக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமான காலமாக நாம் அரசதுறை மீது நம்பிக்கை வைத்து தனியார் முதலீடுகளை கணக்கிலெடுக்காமல் விட்டுவிட்டோம். தேவைக்கு அதிகமான காலமாக தெளிவற்ற கொள்கை மற்றும் சிக்கலான நடைமுறைகளை உபயோகத்தில் கொண்டு தனியார் முதலீடுகளை விரட்டியடித்து விட்டோம்

துரிதமானதும் துரநோக்கு கொண்டதுமான தனியார்துறையினால் கொண்டு நடத்தப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீடுகளை வலுவான வகையில் அடிப்படையாக் கொண்ட பொருளாதாரமொன்றை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.

3 வருட பொருளாதார பயன் வேலைத்திட்டம்
இந்த மாற்றத்துக்கு வேகமாக ஆரம்பமொன்றை வழங்குவதற்காக நாம் அடுத்த 3 வருடங்களுக்கு முழுமையான பொருளாதார உபாயமொன்றை செயற்படுத்துவோம்.

இதன்மூலம், நாம் வருடாந்த தனிநபர் வருமானத்தை 5 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அதேபோல், 10 இலட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் நாம் உத்தேசித்துள்ளோம். வருடாந்த நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அளவை 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிப்பதே எமது இலக்காகும். வருடாந்த ஏற்றுமதியை இருமடங்காக்கி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கொண்டு செல்வதற்கு நாம் திட்டமிடுவோம்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எம்மால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான பிரதிபலன்கள் கிடைத்துள்ளன. ஆகையால், அதிக பெறுமதியிலானதும் பல்வகை மிக்கதுமான பொருட்கள் மற்றும் சேவைகளுடன் கூடிய விநியோகங்களின் ஊடான ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி உபாயங்கள் மற்றும் கொள்கை தொடர்பிலேயே நாம் தற்போது கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

உலகம் முழுவதும் பங்காளி நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதே இந்த கொள்கையின் பிரதான அம்சமாக இருக்கிறது. சிங்கப்பூர், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் சாதகமான பலன்மிக்கதான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளும் செயற்பாடுகளில் கணிசமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் எமது பொருளாதாரத்துக்கு பாரிய உந்துதலொன்று கிடைக்கும் என்பதுடன், உள்நாட்டு பொறுப்பு முயற்சிகளுக்கும் பாரியளவிலான சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.

நிறுவன மறுகட்டமைப்பு மாற்றத்தை சுமுகமாக மேற்கொள்ளும் பொருட்டு அரசினால் வர்த்தக சீரமைவு பொதியொன்று அறிமுகப்படுத்தப்படும். தற்போது உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மற்றும் அந்நிய செலாவணி சட்டமூலம் ஆகிவற்றை நிறைவேற்றியதன் மூலம் நாம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதேபோல், நாம் புதிய தேசிய ஏற்றுமதி மூலோபாயங்கள் மற்றும் புதிய தேசிய வர்த்தக கொள்கையொன்றையும் தயாரித்து வருகிறோம்

வர்த்தக வசதிகளை வழங்குவதன் நிமித்தம் தேசிய கேந்திர நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அபிவிருத்தி நிதியிடலின் நிமித்தம் ஏற்றுமதி, இறக்குமதி வசதிகளுடுன் கூடிய புதிய அபிவிருத்தி வங்கியொன்றையும் உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

ஏற்றுமதி நோக்கிய எமது பொருளாதார மூலோபாயம் வெற்றியளிக்க வேண்டுமெனில் உயர் பெறுமதிகளுடன் கூடிய உற்பத்திகளுக்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நேரடி தனியார் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்துக்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான அரச நிறுவனங்களுடன் செயற்படும் போது முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் தடங்கல்கள் மற்றும் இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலொன்றும் அதேபோல், செயற்பாட்டு முன்னேற்றத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கும் நிறுவனமொன்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு விட்டன.

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொள்வது எமது இலக்காகும்.

சலுகை வட்டியின் கீழ் வீட்டு கடன்களை வழங்குவதற்கு நாம் தேசிய சேமிப்பு வங்கிக்கு 75 பில்லியன் ரூபா ஒதுக்கி கொடுத்துள்ளோம். அதேபோல், நகர மீள் உருவாக்க நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஏனைய வீட்டு திட்டங்களுக்காக மேலும் 75 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், மின்சாரம், வீதி மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற சமூக பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிரந்தர முதலீடுகள் அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த முதலீட்டு சந்தர்ப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கு அரச-தனியார் ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொள்வது எமது நோக்கமாகும். ஆகவே, தனியார் துறையினரை கவர்வதற்கு தேவையான ஆற்றல்களை கொண்டதான தெளிவான சட்ட ரீதியான அடிப்படை மற்றும் ஒழுங்குப்படுத்தல் மற்றும் கூட்டிணைப்பு கட்டமைப்புடன் கூடிய தெளிவான அரச-தனியார் ஒத்துழைப்பு கொள்கையொன்றை நாம் தயாரிப்போம்.

அரச-தனியார் ஒத்துழைப்பானது சுகாதார சேவை, களியாட்டம், சுற்றுலாத்துறை, கல்வி, துறைமுகம் மற்றும் கப்பற்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, தகவல் தொழில்நுட்பம், மின்சக்தி போன்ற துறைகளுடாக மேற்கொள்ளப்படும். அரச-தனியார் ஒத்துழைப்பின் நிமித்தம் மாற்று நிதி வசதிகளை வழங்கும் முறைமைகளுக்கு நாம் முன்னுரிமையளிப்போம்.

விவசாயத்துறையின் செயற்றிறன் மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்காகவும் அரச-தனியார் ஒத்துழைப்பின் வலுவை பலப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்என்று தெரிவித்தார்.

இதேநேரம், பலமிக்க பொருளாதார இலக்குகளின் கீழ், அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுக கூட்டு முயற்சி, மத்தள சர்வதேச விமானநிலைய கூட்டுமுயற்சி, கொழும்பு துறைமுக நகரத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த பயணத்தை விரைவுப்படுத்தும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டமானது அடுத்த மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்துக்கு மட்டுப்பட்டிருந்த அபிவிருத்தியானது தெற்கு, வடமேல், மத்திய என நாட்டின் சகல மாகாணங்களுக்கும் பகிர்ந்து செல்லும் முறைமையொன்று வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
மகேஸ்வரன் பிரசாத்
இலங்கையின் கடன்களை மீளச் செலுத்துவதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் 3 இலட்சத்து 489 கோடி ரூபா தேவைப்படும்..  இலங்கையின் கடன்களை மீளச் செலுத்துவதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் 3 இலட்சத்து 489 கோடி ரூபா தேவைப்படும்.. Reviewed by Madawala News on 10/22/2017 02:54:00 PM Rating: 5