Kidny

Kidny

இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கோர் எச்சரிக்கை மணியும்- பாகம் 5



வை எல் எஸ் ஹமீட்
ஒருமித்த நாடு/ ஏகிய ராஜ்ய என்பதற்கு இடைக்கால அறிக்கையில் பிரேரிக்கப்பட்டுள்ள வியாக்கியானம்



Aekiya rajyaya/ orumiththa nadu means a state which is undivided and indivisible.................

இங்கு அந்த வியாக்கியானத்தின் முதற்பகுதி ஆராயப்படுகிறது. அடுத்த பகுதி மேலோட்டமாக பாகம் 2 இல் பார்கப்பட்டிருக்கின்றது. இப்பகுதியில் " as provided in this Constitution " என்ற சொற்றொடர் ஆராயப்படவில்லை. பொருத்தமானால் இத்தொடரில் அல்லது " அரசியலமைப்புச்சட்ட மாற்றம்" என்ற  ஆழமான விடயங்கள் ஆராயப்படுகின்ற அத்தொடரில் அது ஆராயப்படும்.

இங்கு தரப்பட்டிருக்கின்ற இரண்டு பிரதான சொற்கள்
Undivided- பிரிபடாத அல்லது பிரிக்கப்படாத
Indivisible-  பிரிக்கப்பட முடியாத

அதாவது ' ஏக்கிய ராஜ்ய/ ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு ஆகும்". என்று கூறப்பட்டுள்ளது.

இப்பொழுது ஆய்வுக்கு வருவோம்.

ஒருமித்த நாடு எவ்வாறு பிரிபடாத/ பிரிக்கப்படாத நாடாக இருக்க முடியும். பிரிபடாத/ பிரிக்கப்படாத நாடு என்றால் அது ஒரு நாடாகும். ஒரு நாடு எவ்வாறு ஒருமித்த நாடாகும். " ஒருமித்த" என்ற சொல்லே ஏக்கனவே பிரிந்திருந்தை ஒன்றுபடுத்தியதைத்தானே குறிக்கின்றது. எனவே, இங்கு ஒரு " சூட்சுமம்" இருப்பதை நாங்கள் புரிந்துகொள்ளலாம்.

அடுத்த சொல்- பிரக்கப்படமுடியாத: இதில் முரண்பாடு இல்லை; ஏனெனில் எதிர்காலத்தில் பிரிக்கப்படமுடியாத தன்மையை அது குறிக்கின்றது; ஒரு நாடாக இருந்தாலென்ன? பல கூறுகள் ஒன்றுசேர்ந்து உருவான நாடாக இருந்தால் என்ன?

இப்பொழுது சிங்களப் பதத்திற்கு வருவோம்

'ஒருமித்த' என்ற கருத்தைக் குறிக்கும் சிங்கள சொல் ' எக்சத் ராஜ்ய' என்பதாகும். ஆனால் அந்த சொல்லைப் பாவித்தால் சிங்களவர்க்கு இவர்களின் சூட்சுமம் புரிந்துவிடும், என்பதால் அந்த சொல்லைத் தவிர்த்து ஏக்கனவே யாப்பில் இருக்கின்ற ' ஏக்கிய ராஜ்ய  (ஒற்றையாட்சி நாடு) என்ற பதம் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப்பதத்தின் பொருள் ' ஒரேயொரு அரசாங்கம் உள்ள ஒரு நாடு' அதாவது ஒரு நாடு, ஒரு அரசாங்கம் என்பதாகும். எனவே மேற்படி இரு சொற்களுடனும் ( பிரிபடாத undivided மற்றும் பிரிக்கப்படமுடியாத indivisible) இந்த சிங்களப் பதம் முரண்படவில்லை.

ஏன் தமிழில் ஒருவிதமாகவும் சிங்களத்தில் ஒருவிதமாகவும் எழுதியிருக்கின்றார்கள்.
----------------------------------------
சிங்களவர்களைப் பொறுத்தவரை சமஷ்டி என்றால் 'நாடு பிரிதல்' என்றுதான் பொதுவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். அன்று முதல் இன்றுவரை எதிர்க்கட்சிகள் அவ்வாறுதான் சிங்கள மக்களுக்கு சொல்லி வந்திருக்கின்றார்கள். அப்பொழுதுதான் சமஷ்டியை மூர்க்கத்தனமாக எதிர்ப்பார்கள் என்பதற்காக.

சிங்கள மக்களின் நாடியோட்டத்தைத் தெரிந்ததனால் அரசும் பிரிவினைக்கெதிரான சொற்களை அழுத்தமாக பிரயோகித்து சமஷ்டியை நாசூக்காக நுழைக்க முனைகிறது.

சமஷ்டி பிரவினைக்கு இட்டுச்செல்லுமா?
------------------------------------

இதுதொடர்பாக சர்வதேச அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவைதொடர்பாக ' அரசியலமைப்புச் சட்டமாற்றம்' என்ற தொடர்கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால் சமஷ்டியின் அடிப்படைத்தன்மை, மத்திய அரசுக்கு சமமாக மத்திய அரசினால் எந்த விடயத்தையும் தட்டிக்கேட்க முடியாத சுதந்திரமான அதிகாரத்தைக் கொண்டிருப்பதாகும்.

அதாவது முஸ்லிம்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட சுதந்திரமான எட்டு அல்லது ஒன்பது மாகாண அரசால் ஆளப்படப்போகிறார்கள்; என்பதாகும். எனவே, இந்த இடைக்கால அறிக்கையின் ஆழ அகலத்தைப்புரிந்தால் முஸ்லிம்களுக்கு " அடிமைச் சாசனம்" எழுதுவதற்குரிய ஏற்பாடுகள் இந்த இடைக்கால அறிக்கைக்குள் பொதிந்து கிடப்பதைக் காணலாம்.

ஒருமித்த நாடு எதைக்குறிக்கிறது
--------------------------------
ஒருமித்த நாட்டின் பிரதான (இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற) தன்மையைப் பார்த்தோம். அதுதான் பிரிவினைக் கெதிரான தன்மையாகும். அதே நேரம் இந்த ஒருமித்த நாடு எதனைக் குறிக்கின்றது; என்றும் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ....ஏகியராஜ்ய/ ஒருமித்த நாடு, consisting of the institutions of the centre and of the Provinces which shall exercise power as laid down in the Constitution.

இங்கு இருபகுதிகள் இருக்கின்றன. முதலாவதுபகுதியின்படி, " இந்த ஒருமித்த நாடு என்பது மத்தியினதும் மாகாணங்களினதும் கட்டமைப்புகளை அல்லது நிறுவனங்களக் கொண்டதாகும்." இதன்படி இலங்கையின் அடிப்படைக்கட்டமைப்பு மாற்றப்படுகின்றது.

இலங்கை ஒரே அரசாங்கத்தைக்கொண்ட ஒரு நாடு அல்ல. பல அரசாங்கங்களைக் கொண்டநாடாகும். இங்கு அரசாங்கம் என்ற சொல்லுக்குப் பதிலாக  மத்தியினதும் மாகாணங்களினதும் நிறுவனங்கள்; என்ற சொற்றொடர் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு ஒரு கேள்வி எழலாம்:

தற்போதும் மத்தியினதும் மாகாணங்களினதும் கட்டமைப்புகள் இருக்கின்றனதானே! அதைத்தானே இடைக்கால அறிக்கையிலும் கூறப்பட்டிருக்கின்றது. இதில் என்ன பிரச்சினை? என்று. அந்தக் கேள்வி நியாயமானதே!

இதற்குரிய பதில்.

தற்போது அரசின்தன்மையானது ஒற்றையாட்சியாகும். அதாவது ஒன்றுதான் அரசாங்கம். ஏனையவை அந்த அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்ட உப ஆட்சிக் கட்டமைப்பாகும். எனவே, மத்திய அரசின்பிடி அதன்மேல் எப்போதும் இருக்கும்.  ( இது subsidiarity Principle - அதாவது உப அதிகாரமாக்கற் கோட்பாடு( புரிதலுக்காகவே இத்தமிழ்ப்பதம், தமிழ் மொழியிலான இடைக்கால அறிக்கையில் ' துணையாக்கக் கோட்பாடு' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது), ஆனால் இடைக்கால அறிக்கையில் அந்தநிலை மாற்றப்பட்டு அரசின்தன்மையானது மத்திய மாகாண நிறுவனங்களைக் கொண்டதாகும்; என்று குறிப்பிடுவதன் மூலம் மாகாண அரசுகளின் அந்தஸ்த்தை மத்திய அரசுக்கு சமாந்திரமாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இது இடைக்கால அறிக்கையில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது அதிகாரப்பங்கீடு தொடர்பான பாகத்தில் இந்த subsidiarity Principle இன்கீழ் உள்ளூராட்சிசபைகள் தொடர்பாக பேசப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகள் அத்தலைப்பின்கீழ் உள்வாங்கப்படவில்லை. இவைகள் புதிய யாப்பு சமஷ்டியை நோக்கியதாக இருக்கப்போவதற்கு கட்டியம் கூறுகின்றன.

ஒற்றையாட்சித் தன்மையின் பிரதான அம்சம் மத்திய பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தையும் நிதி அதிகாரத்தையும் ( financial autonomy) யாருடனும் பங்குபோட்டுக்கொள்ளாது. சமஷ்டி இதற்கு நேர்மாறானது.

இங்கு எமக்கு இருக்கின்ற ஆறுதல்
----------------------------------
ஒரு நாட்டின் தன்மை ( nature of the state) அதாவது ஒற்றையாட்சியா? சமஷ்டியா என்பது இரண்டு வகையில் வெளிப்படுத்தப்படும். 1) form- வடிவம்.
2) substance: உள்ளடக்கம்


நாம் இதுவரை பார்த்தது வடிவத்தோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை. அவை சமஷ்டியையே சுட்டிக்காட்டி நிற்கின்றன.

உள்ளடக்கம் என்பது குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்துகின்ற விதிகளோடு ( amending procedure) சம்பந்தப்பட்டது. அது இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது சமஷ்டியை உறுதிப்படுத்துவதாக வருமா? அல்லது சமஷ்டியை பலவீனப்படுத்தி ஒற்றையாட்சியை நோக்கியதாக இருக்குமா? என்பது அரசியலமைப்புச் சட்டவரைபு மேற்கொள்ளப்படும்போதுதான் தெரியவரும்.  அதேநேரம் சம்பந்தன் ஐயா, அரசு சமஷ்டிக்கு உத்தரவாதம் தந்திருப்பதாக கூறியிருப்பதையும் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும்.

இங்குதான் நாம் நமது கண்களை அகலத்திறந்து வைத்திருக்க வேண்டும்.

( தொடரும்)
இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கோர் எச்சரிக்கை மணியும்- பாகம் 5  இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கோர் எச்சரிக்கை மணியும்- பாகம் 5 Reviewed by Madawala News on 10/19/2017 10:27:00 PM Rating: 5