Ad Space Available here

புலமைப் பரிசில் பரீட்சை எனும் போர்க்களத்திற்கு தயார்படுத்தப்படும் குழந்தைப் போராளிகள்.


சஞ்சீவ பெர்னாண்டோ (டெயிலி மிரர்)
தமிழில்: ஹஸன் இக்பால் 
இம்மாதம் முதலாம் திகதி உலக
சிறுவர் தினம் அனைத்துச் சிறுவர்களுக்குமாக கொண்டாடப்பட்டது.
அதற்குச் சில நாட்கள் கழித்து ஆண்டு ஐந்து புலமைப் பரிசில்  எனும் போர்க்களத்தில் போராடி வெட்டுப்புள்ளிகள் எனும் வெற்றிவாகையை சூடிக் கொண்ட போராளிகளான சித்தியெய்திய மாணவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட அதேவேளை, குறித்த போர்க்களத்தில் காயப்பட்டு, சறுக்கி விழுந்து குருதி வழிந்தோடும் நிலைக்குள்ளான வெட்டுப்புள்ளியைத் தொட்டுத்தடவ தவறிய ஆயிரக்கணக்கான மாணவப் போராளிகள் கண்டுகொள்ளப்படாது விடப்பட்டுள்ளனர்.  


ஏமாற்றம், சங்கடமான நிலை, தன்னம்பிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் தாக்குதல் என்பனவற்றை எதிர்கொள்வதற்கு சித்தியெய்தத் தவறிய இந்த இளம்பிஞ்சுகளின் மனதில் கனதி இருக்குமா என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இதுவாகும். பாரியளவு அனுகூலங்களை விளைவிக்க வல்லமையற்ற இப்போர்க்களத்தில் போராடுவதற்கென பல மாதங்களாக சிலபோது பல வருடங்களாக மாணவப் போராளிகள் கடினமாக பயிற்றுவிக்கப்பட்டு தயார்படுத்தப்படுகின்றனர். 
வடக்கில் பயங்கரவாத விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கென சிறுவர் படையணிகளை வைத்திருந்த வகையில் இலங்கை நாடானது சர்வதேசம் மத்தியில் இன்றும் தலைகுனிவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், தெற்கிலோ சிறுவர் போராளிப் படைகளின் வயது ஒன்பது அல்லது பத்து. பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் எல்லை கடந்த பேராசைக் கனவை நனவாக்கவென பல்வேறு கட்டுப்பாட்டுகள், வேலைத்திட்டங்கள், பயிற்சிப் பாசறைகள் மூலம் குதிரைச் சவாரியில் கடிவாளமிட்டு கட்டுப்படுத்தப்படும் குதிரைகளைப் போல இச்சிறுவர் படையணி போட்டிப் பரீட்சைக்கு தயார்படுத்தப்படுகிறது.   


அழுத்தமிகு பரீட்சையின் எதிர்விளைவுகள் 
இளம் பிஞ்சுகளின் மனதில்  உயர் அழுத்தங்களைப் பிரயோகித்து உள ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தவல்ல ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஏற்படுத்தும் எதிர்மறையான பாதிப்புக்களை இடித்துரைப்பதில் கல்வியியலாளர்கள், சிறுவர் நடத்தை நிபுணர்கள் மற்றும் உளவள நிபுணர்கள் ஆகியோர் ஏகோபித்த கருத்தையே கொண்டுள்ளனர். 


எனினும், பத்து வயது பிஞ்சு மைதானத்தில் கலகலப்பாக விளையாடி மகிழ வேண்டும்; பொம்மைகள் வைத்து வீடுகட்டி களிப்புற வேண்டும்; ஓய்வாகவும் உள அழுத்தங்கள் இன்றியும் சிரித்துப் பேசி தம் சிறுபராயத்தை இன்புறக் கழிக்க வேண்டுமே தவிர கேள்விகளையும் பதில்களையும் மனப்பாடம் செய்து பிரத்தியேக வகுப்புக்கள் என பல மணித்துளிகளை செலவழித்து, தகவல்கள் மூச்சு முட்டுமளவுக்கு வலிந்து திணிக்கப்பட்டு நசுக்கப்படக் கூடாது என்பதை புரிந்து கொள்ள ஒருவர் உளவள நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. 


தமது ‘குதிரைகள்’ ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு பெற்றோர்கள் வரம்பு மீறி எந்தவொரு எல்லைக்கும் செல்லக் கூடிய நிலைமைகளை நாம் அவதானித்து வருகிறோம்.  


முறையற்ற வளப் பங்கீடுகள், சமத்துவமற்ற வாய்ப்புக்கள் என்பவற்றை எமது கல்விமுறைமை கொண்டிருப்பதன் காரணமாகவே தமது பிள்ளைகளை அனைத்து கல்வி வளங்களும் நிரம்பப் பெற்ற பிரபல பாடசாலையில் இணைப்பதற்காக வேண்டி பெற்றோர் எத்தனிக்கும் முயற்சியாகவும் இதனை நியாயப்படுத்த சிலபோது முடிகிறது. சமூக அடுக்குகளின் உட்புகுத்தப்பட்ட கற்பிதங்களுக்கு மத்தியில் வாழும் பல்வேறு குடும்பங்கள் இதனை கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ளும் பரீட்சையாக கருதியே தமது சிறார்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் நிலைமையும் காணக் கூடியதாகவுள்ளது. 

வலிந்து திணிக்கும் கடின முயற்சிகளுடன் கூடிய பெற்றோர்களின் இத்தயார்படுத்தல்கள் பல சிறுவர்களின் உடல், உள ரீதியான இயலுமைகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்து விடுகின்றன.  
தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வந்துபோகும் அதியுயர் சித்திகளைப் பெற்ற ஒரு சில மாணவர்களின் பேட்டிகளும் கண்கவர் புகைப்படங்களும், வெட்டுப்புள்ளியை தொடத் தவறிய பல்லாயிரக்கணக்கான மாணவப் பிஞ்சுகளின் உள்ளங்களில் ஏமாற்றங்களை ஏற்படுத்தும் வடுக்களாக, அவர்களின் தன்னம்பிக்கையின் மீது வீழும் பலத்த அடியாக மாறிப் போய்விடுகின்றது. விளைவில் விரக்தியுற்ற பிஞ்சுகளின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் பின்னடைவை எதிர்கொள்கின்றன. 

ஒன்பது அல்லது பத்து வயதுடைய பிள்ளைகளின் இக்கட்டான நிலையோ பரிதாபம் எனும் போது அதை விடக் குறைந்த வயதுடைய பிஞ்சுகளை பரீட்சைக்கென கடினமாக பயிற்றுவித்தல் எவ்வளவு கொடூரம்! புலமைப் பரிசில் பரீட்சை காலப்பகுதியில் அறுப்புக்குத் தாயாராக்கும் வகையில், பாலர் வகுப்புக்களில் இருந்தே பிஞ்சுகள் புரொயிலர் கோழிகளைப் போல பாரிய கட்டுப்பாடுகள், வரையறைகளுக்கு மத்தியில் வார்த்தெடுக்கப்படுகின்றனர். 
வளர்ந்து வரும் பிஞ்சுகள் எண்கள் மற்றும் ஆங்கில, தமிழ் அகரவரிசைகளில் தேர்ச்சி பெறுவதற்கு முன்னதாக  முதலில் தமது கைவிரல்களின் ஒருங்கிணைப்பு தொடர்பிலும் கைகளின் பாவனை, இடைத் தொடர்பாடல்கள் பற்றியுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும். 


இவற்றைத் திறம்பட அறிந்து நடைமுறைப்படுத்தி வரும் சிறுவர் உளவியலில் தேர்ச்சி பெற்ற சில பாலர் வகுப்பு ஆசிரியர்கள் துரதிர்ஷ்டவசமாக பெற்றோர்களின் வெறுப்பையே சம்பாதித்துக் கொள்கின்றனர். பாலர் வகுப்பு பிஞ்சுகள் எண்களிலும் தமிழ்,ஆங்கில நெடுங்கணக்குகளிலும் தேர்ச்சி பெறவேண்டும் எனக்கருதி பாலர் வகுப்புக்களிலேயே பரீட்சைகளை நடாத்துமாறு பல பெற்றோர் பாலர் வகுப்பு ஆசிரியைகளை வற்புறுத்தவும் செய்கின்றனர். இவ்வாறாக குறும்பு நிறைந்த அச்சிறுவயதினிலேயே பரீட்சைகள் எனும் வெடிகுண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பிஞ்சுப் போராளிகளாக பிள்ளைகளை மாற்ற முனைகின்றனர்.  


விளையாட்டு, கேளிக்கை, ஓய்வு என்பவற்றுடன் கூடிய மகிழ்வான, சிரமமற்ற சூழலில் இப்பிஞ்சுகளிடத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய இயற்கையான வளர்ச்சிக் கட்டங்கள் மற்றும் அடிப்படை வாழ்க்கை செயற்பாடுகள், இடைத்தொடர்பாடல் திறன்கள் என்பன பொருட்படுத்தப்படாது திராபையாக ஒதுக்கப்படுகின்றன; பிஞ்சுப் பருவத்திலும் கூட எழுத்துப் பரீட்சைகளுக்கே அதிகூடிய முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன.


தற்கால வாழ்க்கைச் சூழல் அதிபயங்கர போட்டி நிறைந்தது எனவும், மனித இடைத்தொடர்பாடல் உறவுகள், பரஸ்பர சார்புடைமை, கருணை, காருண்யம், பரஸ்பர அந்நியோன்யம் என்பன வெற்றுப் பேச்சுக்களாக மதிப்பிழந்து போயுள்ளதாக குற்றம் சாட்டுகிறோம்; சின்னஞ்சிறு வயதிலேயே பிஞ்சுகளுக்கு மத்தியில் போட்டா போட்டி மனப்பான்மையை வலிந்து திணிக்கும் கல்வி முறைமையை ஆதரித்து விட்டு இவ்வகையான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க நாம் தகுதியானவர்கள்தானா என்பதை அனைவரும் ஒருமுறை சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
தனித்துவமானதும் சமத்துவமானதுமான படிமுறைக் கல்வியை தமது பிரஜைகளுக்கு வழங்கி வரும் உலகின் சில நாடுகளின் முன்னேற்றகரமான கல்வி முறைமைகளுடன் ஒப்பிடுகையில், எம்மிடம் திணிக்கப்பட்டிருப்பது ‘கல்வி முறைமை’ அல்ல; மாறாக, ‘பரீட்சை தயார்படுத்தல்கள்’ என்பதை உணர்ந்தாக வேண்டும். 


தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையானது சிறார்களின் இயலுமைக்கு அப்பாற்பட்டது மற்றும் சுமையானது என சிறுவர் உளவியல் நிபுணர்கள், புத்திஜீவிகள் வழங்கிய விதந்துரைப்புக்களின் பிரகாரம் எதிர்காலங்களில் புலமைப் பரிசில் பரீட்சை வேண்டாம் எனக் கோரி 2014 இல் பாரிய திட்டமிடல்களுடன் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் எவ்வித முன்னேற்றகர தீர்மானங்களுமின்றி மறைந்தே போனது. 


சீருடை மாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதை விடுத்து இன்றைய அரசாங்கம் மேற்கூறிய தீர்மானங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்து தீர்க்கமான முடிவுகளைப் பெறுவது சாலப் சிறந்ததாகும்.
பிஞ்சுகள் மனதில் உயர் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் இவ்வகையான போட்டிப் பரீட்சைகளுக்கு நிகராக  சில பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் நடாத்தும் சிறுவர் நேரடி போட்டி நிகழ்ச்சிகள்  விளைவிக்கும் பாதக விளைவுகளும் ஏராளம். பார்வையாளர்களைக் கவர்வதற்காக நடாத்தப்படும் அவ்வகையான போட்டி நிகழ்ச்சிகள் சிலபோது சிறுவர் துஷ்பிரயோகமாகவும் பிஞ்சுகள் மனதில் தாங்கமுடியா ஆற்றாமையை விதைப்பவையாகவும் அமைந்து விடுகின்றன.


இவ்வகையான நிகழ்ச்சிகள் தம் ஆதாயத்துக்காக சிறுவர்களின் உரிமைகளை சுரண்டிப் பிழைக்கின்றவையாகவும் துன்புறுத்தலாகவுமே கருதப்பட வேண்டியுள்ளது.இவை சட்டத்தின் பார்வையில் குற்றங்களாக நிறுவப்பட முடியும். 


புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகள் என்பன சிறார்களின் உள்ளங்களில் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உளவளர்ச்சியை சிதைக்கின்றன என்பதை ஆய்வுகளின் அடிப்படையில் நிறுவி சட்ட ரீதியான முறையில் தடுத்து நிறுத்த முடியும். எனினும், இவை தொடர்பில் சட்ட ரீதியாக போராடி காத்திரமான முடிவுகளைப் பெற எவருக்கும் ஆர்வமிருப்பதாக தெரியவில்லை. 


சிறுவர் நலன் தொடர்பில் தம்மை காவலர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இவ்வகையான செயற்பாடுகள் சிறுவர்களின் உளவளர்ச்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துவதோ அல்லது சிறுவர் துஷ்பிரயோகமாக திகழ்வதோ தென்படவில்லை போலும். துஷ்பிரயோகம், துன்புறுத்தல்  எனும் பதங்கள் உடலியல் மற்றும் பாலியல் ரீதியானவை மாத்திரமே என அவர்கள் வரையறுத்துக் கொண்டுள்ளார்கள் என தோன்றுகிறது. 


சிறுவர்களை சிறுவர்களாக கருதும் மனோபாவம் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும்; வளர்ந்தோரை போலன்றி சிறுவர்கள் தொடர்புபடும் அத்தனை விடயங்களிலும் அதியுச்ச கரிசனை செலுத்தப்பட வேண்டும். இதனையே சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பான விழுமியங்களும் உடன்படிக்கைகளும் வலியுறுத்தி நிற்கின்றன. 


மாவட்ட நீதிமன்றங்களே சிறுவர் நலன் காவலர்களாக செயற்பட வேண்டும். சிறுவர்கள் தொடர்புபடும் அத்தனை விடயங்களிலும் சிறுவர் நலன் உச்சமாக பேணப்படுகின்றனவா என்பதை தீர்மானிக்கும் மற்றும் தேவையேற்படின் கட்டுப்பாடுகளை விதிக்கும்  சட்ட அதிகாரங்கள்  மாவட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சைகளின் தயார்படுத்தல்களுக்காக பிஞ்சுகள் தமது கேளிக்கை மற்றும் ஓய்வு நேரம் என்பவற்றை தியாகம் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களின் இயற்கையான உள வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றவகையில் சிறுவர் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தின் 31 ஆவது விதிமுறை மீறப்படுவதால் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட முடியும். 


 யுத்த காலப்பகுதியில் சிறுவர் போராளிகளாக எமது சிறார்கள் துன்புற்றது போதும்; இன்னும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் போட்டிப் பரீட்சை எனும் போர்க்களத்திற்கு பயிற்றுவிக்கப்படும் போராளிச் சிறுவர்களாக, தயார்படுத்தல்களின் போர்வையில் அவர்களை துன்புறுத்த முனைதல் ஏற்புடையதல்ல.

(விடிவெள்ளி 23.10.2017)

புலமைப் பரிசில் பரீட்சை எனும் போர்க்களத்திற்கு தயார்படுத்தப்படும் குழந்தைப் போராளிகள். புலமைப் பரிசில் பரீட்சை எனும் போர்க்களத்திற்கு தயார்படுத்தப்படும் குழந்தைப் போராளிகள். Reviewed by Madawala News on 10/24/2017 03:13:00 PM Rating: 5