Ad Space Available here

அமையவிருக்கின்ற அக்குறணை பிரதேச சபையின் தீர்மான சக்தியாக இருப்பதற்கான வாய்ப்பை சமூகம் பயன்படுத்திக் கொள்ளுமா?


அக்குறணையில் அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுமே
அக்குறணை அரசியலில் கால்பதித்திருந்தன. இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரிரு ஆசனங்களைக் கொண்டிருந்து.

கடந்த அக்குறணைப் பிரதேச சபைத் தேர்தலில், சுயேற்சையாகக் களமிறங்க முன்வந்த அக்குறணையிலுள்ள சில சமூக நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய PMJD யுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைகோர்த்தது. அத்தேர்தலில் UPFA 7 ஆசனங்களையும், UNP 3 ஆசனங்களையும், SLMC 3 ஆசனங்களையும் கைப்பற்றியது. SLMCல் 2,3,4ம் இடங்களை PMJD பெற்றுக்கொண்டு, முஸ்லிம் காங்கிரசிற்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.


இடைப்பட்ட காலப்பகுதியில், SLMCல் முதலிடத்தில் தெரிவான முஃசின் ஹாஜியார் காலமானார். அவ்வெற்றிடத்திற்கு பட்டியலில் அடுத்தபடியாக இருந்த PMJD உறுப்பினர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், SLMC தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதனை வழங்காது, பின்வரிசையில் தோல்யடைந்த தனது கட்சிக்காரர் ஒருவரை நியமித்தது. இது கடந்த பிரதேச சபைத் தேர்தல் பற்றிய சுருக்கம்.


இன்று, புதிய முறையின் பிரகாரம் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்குறணை பிரதேச சபையில் 18 ஆசனங்களுடன், போனஸ் 12மாக மொத்தம் 30 ஆசனங்கள் அமையவுள்ளன. இதற்காக, UPFA, UNP, PMJD, SLMC, SLPP, ACMC போன்ற பல குழுக்கள் களமிறங்கக் காத்திருக்கின்றன.


அக்குறணை தொகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் 10 ஆசனங்களில் முஸ்லிம்களும், 8 இடங்களில் சிங்களவர்களும் தெரிவாகவுள்ளனர். சிங்களவர்கள் பெரும்பான்மையாகவுள்ள பகுதிகளில் SLPP ற்கு வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாகவே தெரிகின்றது. முஸ்லிம் பகுதிகளுக்குறிய 10 பகுதிகளுக்கும் போட்டிகள் பலமாக இருக்கப் போகின்றன.


கடந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது, 3 முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்தது. இதேயளவு செல்வாக்கை (அன்றிருந்த நீதயமைச்சர் ரவூப் ஹகீம் நீதியாக நடந்திருந்தால்) 3 அங்கத்தவர்களுடன் PMJD கொண்டிருந்தது. UPFA ஒருவரை மாத்திரமே கொண்டிருந்தது (அவர்தான் சபையின் தலைவராகவுமிருந்தார்).


அக்குறணையில் அமையவிருக்கின்ற மெகா பிரதேச சபையில் ஒரு தனிக்கட்சி வெற்றியை உறுதி செய்வதற்கு 16 ஆசனங்களைப் பெற வேண்டும். இன்றுள்ள களநிலவரங்களை ஆராய்கின்றபோது, 16 ஆசனங்களை எந்தக் கட்சியும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே, 3வது வருகின்ற கட்சி சபையினைத் தீர்மானிக்கின்ற சக்தியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ஏனெனில், புதிய தேர்தல் முறையில் ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவரின், கூட்டினைந்தே சபையை அமைக்க வேண்டியுள்ளது.


வெளிவாரியாகப் பணக்கார ஊர் என அக்குறணை சொல்லபட்டாலும், உள்வாரியாகப் பல்வேறு பிரச்சினைகளையும், சவால்களையும் அக்குறணை எதிர்கொண்டுள்ளது. டெங்கு போன்ற சுகாதாரத்தோடு சம்பந்தப்பட்ட நோய்கள், கல்வி, வறுமை, திட்டமிடப்படாத நகர விருத்தி, இடப் பற்றாக்குறை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், அக்குறணை நகரில் அடிக்கடி ஏற்படுகின்ற வெள்ளம், இளைஞர்களை ஆட்கொண்டிருக்கின்ற போதைப் பொருள் பாவனை எனப் பல பிரச்சினைகளை அக்குறணை எதிர்கொண்டுள்ளது.


UPFAற்கு இரண்டு சமூகங்களின் மத்தியிலும் செல்வாக்கிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கிடைத்திருக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி ஊரின் 3வது தீர்மான சக்தியாக வந்து, அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கிழக்கில் சாதித்ததுபோன்று, அக்குறணையின் அடிப்படைத் தேவைகளை, ஓரணியில் நின்று சாதித்துக் கொள்வதற்கு கிடைத்திருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை அக்குறணை நலனில் கரிசணைகொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் முன்வருவார்களா? அல்லது வழமை போன்று கண்டும் காணாததுபோல விட்டுவிடுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


புதிய தேர்தல் விதிகளின்படி பார்க்கின்றபோது, கட்சிகளின் செல்வாக்கு என்பதற்கு அப்பால், களமிறக்கப்படுபவர்களின் செல்வாக்கு மிக முக்கியமானது. குறிப்பாக, அந்த வாக்குகள்தான் விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் தீர்மானிக்கவுள்ளது. அத்துடன், கடந்த காலங்களில் கட்சியை மையப்படுத்தியே அதிகமானவர்கள் சிந்தித்தனர். ஆனால், புதிய தலைமுறையினர் அவ்வாறான போக்கில் இல்லை என்பது கடந்த அக்குறணை பிரதேச சபை முடிவுகளை அவதானிக்கின்ற போது தெளிவாகின்றது.

AKURANA NAZLAN
அமையவிருக்கின்ற அக்குறணை பிரதேச சபையின் தீர்மான சக்தியாக இருப்பதற்கான வாய்ப்பை சமூகம் பயன்படுத்திக் கொள்ளுமா? அமையவிருக்கின்ற அக்குறணை பிரதேச சபையின் தீர்மான சக்தியாக இருப்பதற்கான வாய்ப்பை சமூகம் பயன்படுத்திக் கொள்ளுமா? Reviewed by Madawala News on 10/20/2017 03:04:00 PM Rating: 5