Ad Space Available here

சீதனமில்லா என் தேசம்!


வார்த்தைகளுக்குட்பட்டது வசனம்!
வரையரைகளுக்குட்பட்டது வாழ்க்கை!

பிறப்பு முதல் இறப்பு வரை இருக்கின்ற தூரத்தை

வாழ்ந்து முடித்தல் பற்றி வரையரைகள் அமைத்து அவ்வப்போது எழுகின்ற அத்தனை முரண்களுக்குமான தீர்வுப்பொதியையும் எமக்களித்து செழுமையான வாழ்வொன்றை  செப்பனிட்டுக்கொள்ள அத்தனை கதவுகளையும் திறந்து கொடுத்திருக்கிறது எம் சத்திய மார்க்கம் இஸ்லாம்.

வாழ்வியலின் அத்தனை அங்களிலும் நின்று பேசும் இஸ்லாம்,
வாலிபம் பற்றியும் அதனோடு இணைந்த திருமணம் பற்றியும் தெளிவாக பறைசாற்றுகிறது.

‘எவரொருவர் தாம்பத்தியம் நடாத்த சக்தி பெறுகிறாரோ அவர் மணந்து கொள்ளட்டும்’ என்பது எம் உம்மி நபி எமக்குச் சொல்லிந்தந்த பாடமாகும்.

வாலிப பருவத்தில் பொதுவாகவே ஆட்கொள்கிற இச்சைகளையும் அதன் மூலமாக நிகழ்ந்து விடக்கூடிய பாவங்களையும் கட்டுப்படுத்தவே எம்மார்க்கம் திருமணத்தை இளம் வயதிலேயே கடமையாக்கியிருக்கிறது.

ஆனால், எம் மார்க்கம் எமக்கு காட்டித்தந்த திருமணத்திற்குள் எமக்கு வசதிக்காக மார்க்கம் காட்டித்தராத விடயங்களை புகுத்தி எமது மார்க்கத்தையும் எமது சமூகத்தையும் அந்நிய சந்தைகளில் கூவி விற்க எம்மில் சிலர் தலைப்பட்டிருக்கிறோம்.

ஆம், திருமணம் என்கின்ற பாலுக்குள் சீதனம் என்கின்ற விஷம் எப்போது கலக்க துவங்கியதோ அன்றிலிருந்தே எம் சமூகம் மாசுபட தொடங்கிவிட்டது.

கண்ணியமாக அணுகப்பட்ட பெண்ணியம் கலங்கப்பட்டுக்கொண்டது.

“திருமணம் முடிக்கப்பட்டு ஒருநாள் கூட வாழாமல் கணவன் மரணித்துப்போனால் கூட  கணவனின் சொத்தில் ஒரு பகுதி மனைவிக்கு வந்து சேர வேண்டும். அது கோடான கோடியாக இருந்தாலென்ன? ஒரு பிடி தானியமாக இருந்தாலென்ன?” என்று பெண்கள் விடயத்தில் தீர்க்கமாக இருக்கும் எம்மார்க்கத்தில் இப்படியான பித்னாக்கள் அரங்கேறுவது எமக்கே அவமானமாகும்.

சீதனம் கொடுப்பதோ வாங்குவதோ மட்டுமல்லாமல் சீதனம் என்கின்ற ஒரு வார்த்தை பிரயோகம் கூட இஸ்லாம் சொல்லும் முஸ்லிம் திருமணத்தில் இல்லவே இல்லை.

பளிங்கு பதித்த வீடு முதல் களிம்பு தடாவிய கார் வரை பின்கதவால் சீதனப் பிச்சையாக பெற்றுவிட்டு இஸ்லாமிய திருமணமாக மக்கள் மன்றத்தில் காட்டி நடாத்தப்படுகின்ற திருமணங்கள் செல்லுபடியாகுமா?  என்கின்ற மிகப்பெரிய கேள்வி எம் மத்தியில் உள்ளது!

“உங்களுக்கு பிடித்தமான பெண்ணுக்கு நிறைவான மஹரை அளித்து அப் பெண்ணுக்கு நீதம் செய்யாமலே அன்றி நீங்கள் மணமுடித்துக் கொள்ள வேண்டாம்” என இஸ்லாம் வன்மையாக திருமணம் குறித்து தோலுரித்துக்காட்டும்போது,

எம் மார்க்கம் ஒரு போதும் அனுமதியாத சீதனம் என்கின்ற பித்அத் ஐ புகுத்தி பாவிகளாக தம்மை முத்திரை குத்திக் கொண்டு மணமுடிக்க தம்மை தயார்படுத்தி இருக்கும் மணமக்களை எண்ணும் போது மிகுந்த வேதனையாயிருக்கிறது.

துளியும் வெட்கமின்றி, ‘சீதனம் தந்தால் தான் உங்கள் மகளை மணப்பேன்’ என்று அழுக்கு தேடி அலையும் ஒரு நாய்க்கு ஒப்பாக நடந்து எம் மார்க்கத்தின் புனிதத்தை குழி தோண்டி புதைக்க புறப்பட்டிருக்கும் இந்த முதுகெலும்பற்ற வாலிபர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டும்.

உடுக்க ஆடையிருந்தும், படுக்க பாய் இருந்தும், அகம் நிறைய அன்பிருந்தும், முகம் நிறைய அழகிருந்தும் இந்த சீதன பிச்சை தேடி நித்தம் அலையும் புத்தி கெட்ட கும்பல்களால் எம்பெண்கள் வாழாவெட்டியாக வாழ்ந்து தொலைக்கும் அசிங்கங்கள் அரங்கேறுகின்றன.

மழலையாக மண்ணை முத்தமிட்டது முதல் எமக்கும் மரணத்திற்குமான போராட்டம் துவங்கி விடுகிறது. எந்த நொடியிலும் எம்மை மரணம் சூழ்ந்து கொள்ளலாம் என்கின்ற படியால் எப்போதும் நாம் வபாத்துக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அழுத்திப் பேசும் எம் சத்திய மார்க்கத்தில் இருந்து கொண்டு தமக்கு தாமே மண்ணள்ளி வீசி நாச காரியங்களில் ஈடுபடும் வாலிபர்கள் ஒரு கணமேனும் மரணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்!

சீதனமில்லாத எம் தேசம் எவ்வளவு சுகமாக இருக்கும் என்பதை ஒவ்வொரு ஆண்மகனும் சிந்திக்க வேண்டும்!

எத்தனையோ எம் சகோதரிகள் சீதனத்தால் சிதையுன்டு போகிறார்கள் என்ற கள யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்!

சின்னஞ்சிறு விடயங்களுக்காக எம்மை முழுமையாக மாற்றிக்கொள்ளும் நாம் இந்த சீதனத்தை பூண்டோடு அழிக்க அணி திரள எவ்வளவு நேரமாகி விட போகிறது!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒருபோதும் திருட்டை ஒழிக்க முடியாது!

எனவே, எம் சமூக மேம்பாட்டை முன்னிறுத்தி எம் மார்க்கம் அடியோடு வெறுக்கும் இந்த சீர்கெட்ட சீதனத்தை ஒழித்து சீதனமில்லாத எம் அழகிய தேசத்தை கட்டியெழுப்ப அல்லாஹ்வின் அருள் கொண்டு எல்லோரும் கைகோர்ப்போமாக!

-சல்மான் லாபீர்
பொத்துவில்.
சீதனமில்லா என் தேசம்! சீதனமில்லா என் தேசம்! Reviewed by Madawala News on 10/22/2017 08:39:00 AM Rating: 5