Kidny

Kidny

தசாப்தங்களாய் விளையாடும் பொத்துவிலின் கல்வி.


ஒரு உயிரோட்டமான சமூகத்தின் அடிப்படை உரிமையும் தேவையும் தடையில்லாத கல்வியாகும்.
ஆனால் அந்த உரிமையை கூட பூரணமாக துய்க்க முடியாமல் அச்சமூகம் போராடுகின்றது என்றால் அது  மிக வேதனைக்குரியது.

அப்படியான ஒரு வேதனையை தான் பொத்துவில் கல்வி நாளுக்கு நாள் அனுபவித்து வருகிறது. அடிப்படை கல்வி உரிமை மழுங்கடிக்கப்பட்ட நிலையில் தினம் தினம் அதை மீட்க பொத்துவில் சமூகம் உருகி உருகி போராடுகின்றது.

பொத்துவில் கல்வி பிரச்சினை இன்று நேற்று வந்த ஒரு பிரச்சினை அல்ல. மூன்று தசாப்தங்களாக மாறி மாறி வருகின்ற தலைமுறையினர்களால் போராடும் ஒரு பிரச்சினை.

ஒவ்வொரு கால நேரத்திலும் பொத்துவில் கல்வி ஆசிரியர் பற்றாக்குறையினால் தவித்து வந்திருக்கிறது.

கல்முனை வலயத்திலிருந்து அக்கரைப்பற்று கல்வி வலயம் பிரிந்ததிலிருந்து, அதன் கீழ் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று,பொத்துவில் கோட்டங்கள் இயங்குகின்றன.
இங்கு பிரச்சினைக்குரிய கோட்டமே பொத்துவில் கோட்டம் தான். அன்று தொட்டு இன்று வரை பொத்துவிலுக்கான முழுமையான ஆசிரியர் வளம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு நேரத்திலும் இதுபற்றி பிரச்சினை எழுகின்ற போது வாக்குறுதிகள் தந்து பிரச்சினையின் வெப்பத்தை தணித்தார்களே தவிர வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை கோட்டங்களில் மிகையான ஆசிரியர்கள் இருக்கின்ற அதே நேரத்தில் தான் பொத்துவிலில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அக்கரைப்பற்று வலயம் நினைத்தால் ஆசிரியர் சமநிலையை ஏற்படுத்தி பிரச்சினையை ஓரளவேனும் தீர்க்கலாம்.ஆனால் அதைக்கூட செய்ய பல வருடங்களாக தயங்குகிறார்கள்.

இப்போதைய பொத்துவில் கல்வி கள நிலவரம் படுமோசமாக இருக்கின்றது. பொத்துவிலில் மொத்தம் 21 பாடசாலைகள் இருக்கின்றன.2016 கல்வி நிருவாக சுற்றுநிரூபத்தின் படி 460 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பதோ வெறும் 285 ஆசிரியர்கள். சுமார் 175 ஆசிரியர் பற்றாக்குறையோடு பொத்துவில் கோட்டம் தத்தளிக்கிறது. 175 ஆசிரியர்கள் இன்றி ஒரு கோட்டம் இயங்குவதென்பது கற்பனைக்கும் அசாத்தியமானது. ஆனால் அப்படி ஒரு நிலையில்தான் பொத்துவில் கல்வி வாழுகின்றது.

ஏற்கனவே 175 ஆசிரியர்கள் இன்றி  குற்றுயிரும் குறை உயிருமாய் பொத்துவில் பாடசாலைகளும் மாணவர்களும் தவித்து நிற்கும் போது இரவோடிரவாக இன்னும் 39 பேரை பொத்துவிலிருந்து இடமாற்றம் வழங்கி அக்கரைப்பற்றுக்கும் அட்டாளைச்சேனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படியாக அக்கரைப்பற்று வலயம் ஒரு பொறுப்பில்லாமல் கண்மூடித்தனமாக நடந்து கொண்ட விடயத்தை பொத்துவில் சமூகம் வன்மையாக எதிர்க்கின்றது.

இப்படியான கண்கட்டி வித்தைகள்
தொடர்ச்சியாக இடம்பெறுவதால் தான் பல
வருடங்களுக்கு முன்னர் பொத்துவிலுக்கான தனிவலயம் அதிகாரிகளாலும் ஆட்சியாளர்களாலும் உணரப்பட்டு அந்த வலயத்தை பெற்று தருவதாக பலமுறை பல
கோணங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டு
ஈற்றில் இன்னும் ஏமாற்றிக்
கொண்டிருக்கிறார்கள்.மக்கள் இன்னும்
போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வை பெறுவதற்காகத்தான் மக்கள் களம் குதித்திருக்கின்றனர். தீர்வு கிட்டும் வரை போராடப்போவதாகவும் இன்னுமின்னும் பொய் வாக்குறுதிகள் அளிக்கப்படுமிடத்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்கள்.

பொத்துவிலில் கடந்த நான்கு நாட்களாக பாடசாலைகள் யாவும் மாணவர்கள் செல்லாததால் வெறிச்சோடிப்போய் கிடக்கின்றன. மாணவர்கள் எவரையும் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை. ஆசிரியர்கள் இல்லா பாடசாலைகளுக்கு எதற்காக மாணவர்களை அனுப்ப வேண்டும் என்அங்கலாய்க்கிறார்கள்.

மூன்றாந்தவணை பரீட்சை எங்கள் பிள்ளைகள் எழுதாவிட்டாலும் பரவாயில்லை எங்கள் பிள்ளைகள் அடுத்தவருடமாவது பூரண ஆசிரியர்களோடு படிக்க வேண்டும் என தெரிவிக்கிறார்கள். இந்த தொடர்ச்சியான போராட்டத்தின் ஓரங்கமாக தான் நேற்று (25.10.2017) அன்று மாபெரும் கண்டணப்பேரணி நடாத்தப்பட்டது.

எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து போராடவும் கடைகள் அடைத்து ஹர்த்தால் அனுஷ்டிக்கவும் மக்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.மிகுந்த ஆதங்கத்தோடு இருக்கிறார்கள்.

கிழக்கின் முதல் ஆசிரியர், முதல் வைத்தியர், முதல் பொறியியலாளர் எனவும் பல்வேறு சர்வதேச,தேசிய சாதனையாளர்களை கொண்ட பொத்துவில் பிரதேசத்தின் கல்வி அஸ்தமித்து போவது இதய சுத்தி உள்ள எவருக்கும் வேதனையாய் தான் இருக்கும்.

ஆகவே, பிரச்சினைகளின் கோரம் இன்னும் கூட முதல் அழுதுகொண்டிருக்கும் பொத்துவில் கல்வி பிரச்சினைகளை தீர்த்து தர அத்தனை அதிகார வர்க்கமும் உதவி நல்க வேண்டும் என கேட்கின்றோம்.

-சல்மான் லாபீர்-
தசாப்தங்களாய் விளையாடும் பொத்துவிலின் கல்வி. தசாப்தங்களாய் விளையாடும் பொத்துவிலின் கல்வி. Reviewed by Madawala News on 10/26/2017 06:03:00 PM Rating: 5