Yahya

கோவை ருக்ஸானா எம்மிடம் சொல்வது என்ன?


கோவையில் கல்லூரியில் படித்து வந்த கோவை ருக்சானா என்ற முஸ்லிம் பெண்மனி கடத்தப்பட்டு தனது காதலனால்
 கோரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவ்வப்போது இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது முஸ்லிம் சமூகம் நிறைய அறிவுரைகளை தஙகளது வாட்சாப், முகநூல் என அனைத்து பகுதியிலும் வரிந்து கொட்டும். அந்த பெண் புர்கா அணிந்திருந்தால்?. அந்த பெண் குர் ஆன் ஓதியிருந்தால்?.. அந்த பெண் மதரசா சென்றிருந்தால்?.. அந்த பெண் கல்லூரி செல்லாமல் இருந்திருந்தால்?.. இதெல்லாம் நடந்திருக்குமா என கேள்விகள் என்ற பெயரில் வாட்சாப் முகநூல் மற்றும் சில ஜும்மா மேடைகளையும் சுற்றி வரும்.

முஸ்லிம் சமூகத்தினர் வீட்டில் கற்றுத்தரப்படுவதென்ன?..
மற்ற சமூகத்தை சார்ந்தவர்களை விட முஸ்லிம் சமூகத்தில் அதிகளவு பெண்ணின் உடலியல் மாற்றம் பற்றி ஆன்மிக ரீதியாக சிறிய வயதிலிருந்தே சொல்லித்தரப்படுகிறது. மாதாவிடாய் காலத்தில் செய்ய வேண்டிய வழிமுறை என பல்வேறாக இன்னும் நிறைய உடல்ரீதியாக ஆன்மிகத்தின் வழியில் போதிக்கப்படுகிறது. ஆனால் அதே சமூகத்தில் பலர் வெளியில் ஒரு உலகம் இருக்கிறது அதை காட்டாமல் பெண்களை வளர்த்து விடலாம் என நினைத்து தங்களை தாங்களே முட்டாள்களாக்கிக் கொள்கின்றனர்.


செல்போன் கொடுக்க கூடாது, பேஸ்புக் கூடாது, வாட்சாப் கூடாது என எல்லாவற்றையும் தடுத்து விட்டு அதெல்லாம் அவர்களை போய்ச்சேராது என்று தங்களை தேற்றிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே 24 மணி நேர காவல் போட்டால் கூட ஒரு பரவலாக்கப்பட்ட கலாச்சாரத்தை வீட்டினுள் இருந்து தள்ளி வைத்திட முடியாது என்பதனை உணர மறுக்கிறார்கள்.

பெண்களுக்கு மார்க்கம் கற்றுக் கொடுத்துட்டா போதும் எல்லாம் சரியாயிரும்னு சொல்லக்கூடியவர்களின் பெண் பிள்ளைகளும், மதரசா, ஆலிம் பட்டம் என வாங்கி அரபியில் பாண்டித்தியத்தை பெற்றுள்ள பெண்களும் தடம் மாறி செல்லும் கதைகள் எல்லாம் இன்று முஸ்லிம் தெருக்களில் பிரசித்தம். அப்படியென்றால் மார்க்கம் சொல்லி தந்தாலும் இதுதான் நிலையா என்று கேட்டால்! சொல்லித்தரப்படுவது மட்டும் மார்க்கம் இல்லை என்பதே பதில்.

மார்க்கம் என்ற பெயரில் பெண்களுக்கு இன்று சொல்லித்தரப்படுவதெல்லாம் ஹிஜாப், கணவனுக்கு பணிவிடை, மாற்றான் கண் படாமல் நடந்து கொள்வது என்பன போன்றே...

ஆனால் உண்மையில் இஸ்லாம் இதனை மட்டும் சொல்லித்தருவதில்லை.
இதற்கு மேலேயும் பல படித்தரங்கள் இருக்கிறது அதனையும் சேர்த்தே சொல்கிறது. அதில், பெண்களுக்கான பாதுகாப்பை அவர்களே முடிவு செய்வது, அதிகார மையப்படுத்துதலை நோக்கி நகர அவர்களின் பங்கு, அவர்களின் அறிவுத்தேவையை உணர வைப்பது, எல்லாவற்றிற்கும் மேல் அவர்களுக்கு எதிராக இருக்கும் தடைகளை பற்றியும் உடல், மன ரீதியாக அவர்களை தடம் பிறழ வைக்க எப்படியெல்லாம் உலகம் முயற்சிக்கும் என்ற அறிவை கற்றுத் தருவதையும் தான் மார்க்கம் முன்வைக்கிறது.


குழந்தைகளுக்கு Good Touch க்கும் Bad Touchக்குமான வித்தியாசத்தை கற்றுத் தருவதை போல் பெண்களுக்கு எது சரியான உறவு எது தவறான உறவு என தெரிந்து கொள்ளும் அறிவை கற்றுத் தருவது அவசியம். இந்த அறிவை எந்த புத்தகத்திலிருந்தும் கற்றுத் தந்திட முடியாது. சாலையில் உடன் செல்லும் போது, டிவியில் படம் பார்க்கும் போது, இது போன்ற கோரமான சம்பவங்களை பற்றி வீட்டில் உரையாடிக் கொள்ளும் போது தீயவைகளை பற்றி அவர்களுக்கு புரிய வைக்கும் முயற்சிகளிலேயே இவையெல்லாம் சரி செய்ய முடியும்.
என்ன தான் செய்றது?..

நம் குழந்தைகளுக்கு நாம் தான் மிக நெருங்கிய நண்பர்களாக இருக்க வேண்டும். அதிகாரம் கலந்த ஓர் அன்பை எந்நேரமும் அவர்களுக்கு கொடுக்க நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நல்லவைகள் என்னவெல்லாம் நாம் சொல்கிறமோ அதே அளவு அந்த வயதிற்கேற்றவாறு தீயவைகள் என்ன அதனால் என்னவெல்லாம் நடக்கக் கூடும் என்ற உரையாடல்களை அடிக்கடி உருவாக்கிக் கொள்ள வேண்டும்.டெக்னாலஜிகளை முற்றிலும் ஒதுக்கும் வீண் முயற்சியை தவிர்த்து விட்டு டெக்னாலஜிக்குள் இருக்கும் சாதகமான முறைகளை அவர்களுக்கு கற்றுத் தரலாம்.

இறுதியாக, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக முஸ்லிம்கள் என்பதினால் மட்டும் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுக்கு புரிய வைப்பது. இராமகோபாலன் போன்ற ஆட்கள் முஸ்லிம் பெண்களின் வயிற்றினுள் இந்துக்களின் விந்து செலுத்த வேண்டும் என கூறிய காணொளி, முஸ்லிம் பெண்களை காதலித்து திருமணம் செய்தால் ஒரு இலட்சம் என இந்துத்துவ அமைப்பினர் பேசிய காணொளி, வடமாநிலங்களில் முஸ்லிம் பெண்களை கற்பழித்து கொல்லுங்கள் என இந்துத்துவ சாமியார்கள் பொது மேடைகளில் பேசிய காணொளி, காஷ்மீரில் முஸ்லிம் பெண்கள் மீது இராணுவத்தினர் செய்த அட்டூழியஙகளை அந்த பெண்களே ஊடகங்களில் பேட்டியளித்தது என முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பேசப்படும் விஷக்கருத்துகளை அவர்கள் காதுக்கு கொடுத்து விட வேண்டும்.

எனக்கு தெரிந்த முஸ்லிம் சகோதரிகளுக்கு நான் இந்துத்துவவாதிகள் நடத்தும் விஜயபாரத பத்திரிக்கையை படிக்க கொடுப்பது வழக்கம். விஜயபாரதத்தின் கருத்துக்களை படிக்கும் போதே, அதில் புர்கா பற்றி முஸ்லிம் பெண்களை பற்றி அவர்கள் விமர்சித்திருக்கும் வார்த்தைகளைக் கொண்டே தங்களுக்கு எதிராக வெளியே ஒரு கெட்டதை மட்டும் சிந்திக்கும் ஒரு உலகம் இருக்கிறது என அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

இந்த அறிவை அவர்களுக்கு வழங்கி விடுதல் ஒன்றே அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் திறனை இயல்பாக வழங்கி விடும். சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர்களது தேவை இருக்கிறது என்பதையும் உணர வைக்கும்.

-அபூ சித்திக் - 
கோவை ருக்ஸானா எம்மிடம் சொல்வது என்ன? கோவை ருக்ஸானா எம்மிடம்  சொல்வது என்ன? Reviewed by Madawala News on 10/27/2017 02:54:00 PM Rating: 5