Kidny

Kidny

எல்லை நிர்ணய விடயத்தில் முஸ்லிம்களையும்,முஸ்லிம் தலைமைகளையும் நன்றாகவே ஏமாற்றிய நல்லாட்சி..

















மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்று பாராளுமன்றத்திலே முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத் தரப்புக்குமிடையில் கடும் இழுபரி நிலை ஏற்பட்டதாகவும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களால் பிரதமர் ரணிலிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கடைசிநேரத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக நாங்கள் அதற்கு ஆதரித்து வாக்களித்தோம் என்று எமது முஸ்லிம் தலைவர்கள் கூறியிருந்தார்கள்.

அந்த கோரிக்கை என்னவென்றால்

மாகாணசபை எல்லை நிர்ணய விடயத்தில் எங்கள் சமூகத்துக்கு ஏதாவது அநியாயம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த விடயத்தை , பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பாண்மை மூலம் நிறைவேற்றவேண்டும் என்றும்,அதன்படி பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட முடியாது போனால்,பிரதமர் தலைமையில் மீழாய்வு குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின் ஜனாதிபதி அவர்கள் பிரகடனத்தின் மூலம் வெளியிடவேண்டும் என்பதேயாகும்.

முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இப்படி கூறியதற்கு காரணம்,எல்லை நிர்ணய விடயத்தில் சிறுபாண்மையினர்களுக்கு அநியாயம் நடந்தால் அதனை சட்டமாக்குவதற்கு எமது உதவியும் தேவைப்படும், அந்த நேரம் நமது எதிர்ப்பை காட்டி காரியத்தை சாதித்துவிடலாம் என்ற என்னத்தின் காரணமேயாகும்.

ஆனால் மாகாண தேர்தல் சட்டதிருத்தத்தில் அப்படியொன்றும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மையாகும்.இந்த சட்ட ஏற்பாட்டை முழுமையாக வாசித்துப் பார்ப்பீர்களானால் உங்களுக்கு இந்த உண்மை தெரியவரும்.


(7) குழுவானது, அது நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து நான்கு(4) மாதங்களினுள் இப்பிரிவின் (2)ஆம்,(3)ஆம்,(4)ஆம், (5)ஆம் உட்பிரிவுகளின் நியதிகளின்படி அதன் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுதல் வேண்டுமென்பதுடன், அதன் பின்னர் அதன் அறிக்கையை அமைச்சருக்குச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(8) குழுவுக்கு பொறுப்பிக்கப்பட்ட கருமங்களை முடிவு செய்வதில் குழுவானது கருத்தொற்றுமையை அடைவதற்கு முயற்சித்தல் வேண்டும்.

(9) குழுவானது, அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைமுறையை முடிவு செய்தல் வேண்டும்.

(10) குழுவானது, இப்பிரிவின் நியதியின்படி அதன் கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கத்துக்காக, அவசியமாகக்கூடியவாறான அத்தகைய அலுவலர்களையும், நிபுணர்களையும், தொழில்நுட்பக் குழுக்களையும், உப குழுக்களையும் நியமித்தல் வேண்டும்.

(11) குழுவானது, அதன் அறிக்கையை அமைச்சருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்; அவர், அத்தகைய அறிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து இரண்டு வாரங்களினுள் ( சமூகமளிக்காதோர் உட்பட) பாராளுமன்ற உறுப்பினர்களினது முழு எண்ணிக்கையினரும் அதன் சார்பாக வாக்களித்து அவர்களினால் அது அங்கீகரிக்கப்படுவதற்காகப் பாராளுமன்றத்தில் இடுதல் வேண்டும்.

(12) அறிக்கை பாராளுமன்றத்தில் இடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தினுள் பாராளுமன்றம் (11)ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி அத்தகைய அறிக்கையை அங்கீகரிக்காதவிடத்து, அப்போது , சபாநாயகர், பிரதான சமூகங்களைப் பிரதிநிதித்துகின்ற ஐந்தாட்களைக் கொண்டதும் பிரதம அமைச்சரின் தலைமையின் கீழானதுமான மீளாய்வுக் குழுவொன்றை நியமித்தல் வேண்டும்.

(13) மீளாய்வுக் குழு, ஏதேனும் தேர்தற்தொகுதியின் பெயர்கள், எண்ணிக்கைகள் மற்றும் எல்லைகளுக்கான ஏதேனும் மாற்றம் செய்யப்படுவதனைச் செய்வித்தல் வேண்டும்.

(14) மீளாய்வுக்குழு , அதனால் கவனத்துட்கொள்ளப்படுவதற்கான அறிக்கையை அமைச்சர் ஆற்றுப்படுத்தலிலிருந்து இரண்டு (2) மாதங்களினுள் (13) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி அதன் பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றுதல் வேண்டுமென்பதுடன் , அதன்பின்னர் அதன் அறிக்கையைச் சனாதிபதிக்குச் சமர்ப்பித்தலும் வேண்டும்.

(15) மீளாய்வுக் குழுவின் அறிக்கையைப் பெற்றதன்மேல், சனாதிபதி, பிரகடனத்தின்மூலம், மீளாய்வுக் குழுவினாற் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின்மீது அவ்வாறு உருவாக்கப்பட்ட தேர்தற் றொகுதியின் புதிய எண்ணிக்கை, ஒவ்வொரு தேர்தற்றொகுதியினதும் எல்லைகள், அதற்குக் குறித்தளிக்கப்பட்ட பெயர்கள் என்பவற்றை உடனடியாக வெளியிடுதல் வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரகாரம், நமது முஸ்லிம் தலைவர்கள் சொன்ன சட்டபாதுகாப்பு ஏதாவது இங்கே சொல்லப்பட்டுள்ளதா என்று நாம் பார்க்கவேண்டும்.

(11) பிரிவின் மூலம் எல்லை நிர்ணய சட்டமூலம் 2/3 பெரும்பாண்மையாக நிறைவேற்றுவதற்கு பதிலாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் சபாநாயரைத் தவிர மற்ற 224 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை கவணித்துப்பார்த்தால் புரியும் இந்த சட்டமூலம் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்பது, ஏனென்றால் 224 பாராளுமன்ற உறுப்பினர்களும் மொத்தமாக வாக்களிக்கமாட்டார்கள் என்பது.

இதன் மூலம் என்ன விளங்குகின்றது, இந்த சட்டமூலம் நிராகரிக்கப்படும் என்பதேயாகும், இதன் மூலம் முஸ்லிம்களுக்கு என்ன லாபம் உள்ளது என்று புரியவில்லை.

அதே நேரம் இந்த சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதன் பின், பிரதமர் தலைமையில், சமூகங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் கூடி எடுத்த தீர்மானத்தை சனாதிபதி அங்கீகரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் அந்த மீளாய்வுக்குழுவில் முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படாத நிலையில், சனாதிபதி அதனை அங்கீகரிக்காமல் நிறுத்துவதற்கு நமது முஸ்லிம் உறுப்பினர்களால் முடியாது என்பதே இதன் மூலம் தெறியவரும் உண்மையாகும்.

ஆகவே, நமது முஸ்லிம் தலைவர்கள் சொல்வதைப்போன்று, எல்லை நிர்ணயத்தின் மூலம் ஏற்படப்போகும் அநீதிகளை தட்டிக்கேட்பதற்கு பாராளுமன்றத்தினூடாகவும்  அதற்கு உத்தரவாதம் இல்லை, அதேவேளை சனாதிபதி அங்கீகரிக்கப் போகும் விடயத்தில், அநியாயம் நடந்தாலும் அதனைத் தடுப்பதற்கும் சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை

இதன்படி பார்த்தால் எல்லை நிர்ணய குழு எடுக்கும் முடிவை பாராளுமன்றம் தோற்கடிக்கும் என்பது இப்பவே ஊர்ஜிதப்படுத்தப்பட்ட விடயமாகும். அதனை பின்கதவால் சனாதிபதியின் கட்டளைமூலம் நிறைவேற்றுவதற்கும் எந்த தடையும்மில்லை என்பதோடு, இந்த விடயத்தில் இந்த நல்லரசாங்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நன்றாகவே ஏமாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

ஆக,மாகாணசபைச் தேர்தல் சட்டமூலம் சிறுபாண்மை சமூகத்துக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்த மரண அடியேயாகும், இதனை முஸ்லிம் சமூக புத்திஜீவிகள் கவணத்தில் எடுக்கவேண்டும் என்பதே எங்களின் என்னமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
எல்லை நிர்ணய விடயத்தில் முஸ்லிம்களையும்,முஸ்லிம் தலைமைகளையும் நன்றாகவே ஏமாற்றிய நல்லாட்சி..  எல்லை நிர்ணய விடயத்தில் முஸ்லிம்களையும்,முஸ்லிம் தலைமைகளையும் நன்றாகவே ஏமாற்றிய நல்லாட்சி.. Reviewed by Madawala News on 10/15/2017 05:58:00 PM Rating: 5