Ad Space Available here

நல்லாட்சியின் ஞானசார நாடகம் முடிவுக்கு வருவதால் அவர் வளர்த்துவிட்ட இனவாதம் முடிவுக்கு வருமா ?
ஞானசாரா தேரர்  மஹிந்தவுடைய ஆட்சியில் இனவாத கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தது மட்டுமல்லாமல் அளுத்கமை நகரைக்கூட எரிக்கும் அளவுக்கு அவரது பேச்சுக்கள் அமைந்திருந்தன.


தம்புள்ள பள்ளிவாசல் தொடங்கி மஹியங்கனை பள்ளிவாசல் வரையும் பொதுபலசேனாவின் அட்டூழியங்களை தொடர்ந்திருந்தன


அந்த நேரமெல்லாம் அசாத்சாலி அவர்கள் பொதுபலசேனாவை சந்தித்து சுமூகமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பதிலாக எரியும் நெருப்பிலே எண்ணெய் ஊற்றுவதுபோன்று, செயற்பட்டது  மட்டுமல்ல,அவருடைய பாசையில் பொதுபலசேனாவையும் அதன் செயலாளர் ஞானசாராவையும் திட்டி இனவாதத்தை வளர்க்க பாடுபட்டதோடு இதற்கெல்லாம் மஹிந்த குடும்பமே காரணம் என்றும் கூவியும் திரிந்திருந்தார்.


அஸாத் சாலியின் செயறாபாடுகளை அன்று முஸ்லிம் சமூகம் நல்லவிடயமாகவே கருதியிருந்தது, ஆனால் அசாத்சாலி இதனையெல்லாம் செய்தது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட பாசத்தினால் அல்ல,மாறாக ஆட்சியை கவிழ்க மஹிந்த மீது பழி போடவே  என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.


அந்த காலத்தில் பொதுபலசேனா செய்யும் அட்டூழியங்களை உள்ளூர ரசித்த அசாத்சாலி அதனை தனக்கு சார்பாகவும், மஹிந்தவை முஸ்லிம்களின் எதிரியாகவும் காட்டுவதற்கு பயன்படுத்திக்கொண்டார்.


இந்த விளையாட்டில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது என்று தெரிந்திருந்தும்,அதனைப் பொருட்படுத்தாமல் மஹிந்தவை வீழ்த்துவதற்கு பொதுபலசேனா செய்யும் அடாவடித்தனங்கள் அவருக்கு அந்த நேரம் தேவைப்பட்டிருந்தது. அதன் காரணமாக முஸ்லிம்களை மஹிந்தவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஆக்கியது மட்டுமல்ல, ஆட்சியையும் கைப்பற்றிக்கொண்டார்கள்.


இப்போது அவர்கள் கொண்டுவந்த நல்லாட்சியிலும் பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் அத்துமீறி செல்லுகின்றபோதும், அது எங்கே நல்லாட்சிக்கு ஆபத்தாக வந்துவிடப்போகின்றதோ என்ற பயத்தில் பொதுபலசேனாவின் நடவடிக்கையை நிறுத்துவதற்கு கடும் பிரயத்தனத்தையும் மேற்கொண்டுள்ளனர்.


ஆனால் ஜனாதிபதி மைத்திரியின் ஆசீர்வாதத்தோடு ஞானசார அவர்கள் ஆட்டம் போடுவது நன்றாகவே அசாத்சாலி அவர்களுக்கு தெரிந்திருந்தது, இருந்தாலும் அதற்கு ஒன்றுமே செய்யமுடியாத நிலையில்நேரம்காலம் பார்த்து நல்லாட்சியை கண்டிக்கவும் அவர் தவறவில்லை, அத்தோடு பொலிஸ் நிலையம் சென்று ஞானசாராவுக்கு எதிராக முறைப்பாடும் செய்து பார்த்தார் அதுவும் எடுபடவில்லை.


அசாத்சாலியின் இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியை கொண்டுவந்ததன் காரணமாக, அசாத்சாலி அவர்களை வெளிநாட்டு பயணங்களுக்கு தன்னோடு துணையாக அழைத்துச்சென்றார்,அத்தோடு அந்த கதையும் முடிந்துவிட்டது.


இதேநேரம் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனைக்கடிப்பது போன்று ஞானசாரா அவர்கள் நீதிமன்றத்துக்குள் புகுந்து விளையாடிய விளையாட்டு, இன்று அவருக்கு வினையாக மாறி கண் முன்னே  நிற்கின்றது


அந்த விடயத்தில் நீதிமன்றம் மூலம் ஞானசாரா அவர்களுக்கு தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகின்ற நேரத்தில், தண்டனை கிடைத்தாலும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மூலம் விடுதலை பெறவேண்டி வந்தால், அதற்கு அவருக்கு எதிரான மற்ற வழக்குகள் ஒன்றுமே நீதிமன்றத்தில் இருக்கக்கூடாது என்ற கட்டளையும் மேலிடத்திலிருந்து கிடைத்துள்ளதாகவும் கதை அடிபடுகின்றது.


அதற்காக முஸ்லிம்களின் மூலமாக தனக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை அவர்களைக்கொண்டே வாபஸ் வாங்கிக்கொள்ளும் நோக்கத்தோடு, அசாத்சாலி, ஜம்மியதுல் உலமாசபை போன்ற இன்னும் பலபேருடன் சுமுகமான பேச்சுவார்த்தைகளை ஞானசாரா அவர்கள் மேற்கொண்டுவருகின்றார் என்ற விடயமும் குறிப்பிட்ட தரப்புக்களினால் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.


இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஞானசாராவை காப்பாற்றும் நோக்கத்தோடுதான் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.


அப்படியென்றால் ஞானசாராவை காப்பாற்றுவதன் நோக்கம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது, ஞானசாரா மஹிந்தவுடைய ஆளாக இருந்தால் அவருக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக ஏன் அவரை காப்பாற்ற துணியவேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கப்போவதில்லை.


இருந்தாலும் நல்லாட்சியின் செல்லப்பிள்ளையான ஞானசாரா அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் இவர்களுக்கு உண்டு,அதன் காரணமாகவே ஞானசாரா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் நல்லாட்சியை காப்பாற்றிவிடவேண்டும் என்பதே இவர்களின் என்னமாகும்.


இவர்களுக்கு உண்மையிலேயே சமூகத்தின் மீது பாசம் இருந்திருந்தால் மஹிந்தவுடைய ஆட்சியிலும்,இன்று நடந்து கொள்வதுபோன்று அன்றும் நடந்திருக்கலாம்,அதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வைக் கண்டிருக்கலாம்,ஆனால் அதற்கெல்லாம் அவர்கள் முயற்சிக்கவில்லை,காரணம் அப்படி அவர்கள் அமைதியாகிவிட்டால் தனது திட்டம் நிறைவேறாமல் போய்விடும் என்ற கீழ்தரமான என்னமே இவர்களிடம் இருந்தது.


அதேநேரம் ஞானசார தேரர் வளர்த்துவிட்ட இனவாத விதை நாடு பூராவும் மரங்களாக வளர்ந்து நிற்கிறது.ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதால் அவர் வளர்த்து விட்ட இனவாதம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பது அஸாத் சாலி போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


ஆக,தங்களுடைய தனிப்பட்ட சுய லாபங்களுக்காக முஸ்லிம் சமூகத்தை படுகுழியில் தள்ளிவிட்டாவது தான் தனது விடயத்தில் வெற்றியடைந்து விடவேண்டும் என்ற என்னமே இவர்களின் மூலக்கருவாகும். இப்படிப்பட்டவர்கள்தான் சமூகத்தின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு, அதே சமூகத்தை குழிதோண்டி புதைக்கும் கொடூரமானவர்கள் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.


முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றுவதாக படம் காட்டி ஞானசார தேரரை காப்பாற்ற எடுக்கும் இந்த கயவர்களின் முயற்சியை சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரனான இறைவன் தோல்வியடையச்செய்வான் என்பது நிச்சயம்.


எம்.எச்.எம்.இப்றாஹிம்

கல்முனை.

நல்லாட்சியின் ஞானசார நாடகம் முடிவுக்கு வருவதால் அவர் வளர்த்துவிட்ட இனவாதம் முடிவுக்கு வருமா ?  நல்லாட்சியின் ஞானசார நாடகம் முடிவுக்கு வருவதால் அவர் வளர்த்துவிட்ட இனவாதம் முடிவுக்கு வருமா ? Reviewed by Madawala News on 10/14/2017 11:53:00 AM Rating: 5