Kidny

Kidny

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவுபடுத்த வேண்டும்


மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம், மற்றும் உள்ளுராட்சி தேர்தல் சட்டமூலம் என்பன தொடர்பில் அமைச்சர்
பைசர் முஸ்தபா மீதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஹிதாயத்நகர் சாலிஹீன் பள்ளி வீதி அங்குரார்ப்பண நிகழ்வு சாலிஹீன் பள்ளிவாசல் தலைவர் எம்.மீராசாஹிப் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சபையில் ஒரு பிரேரணையை முன்வைத்தார். அதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் அல்லது கிழக்கு மாகாண சபை நிருவாகத்தினை ஆளுநரின் கைகளில் வழங்கக்கூடாது எனவும் அப்பிரேரணையில் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டமூலம், உள்ளுராட்சி சட்டமூலம் என்பன உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினாலே ஏற்படுத்தப்பட்டது குறிப்பாக அச்சட்டமூலம் ஒரே தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக எதுவித விளக்கங்களும் தரப்படவில்லை இதனை அமைச்சர் பைசர் முஸ்தபா கட்சிதமாக செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டினையும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

குறித்த சட்டமூலத்தினை இரு கைகளையும் உயர்த்தி ஆதரித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலையிலே பழியினை சுமத்த முற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே அமைச்சர் பைசர் முஸ்தபா சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் மேற்குறித்த சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்வைக்கின்ற போது வட கிழக்கில் சிறி லங்கா சுதந்திரக்கட்சியை வளர்ப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். எனவே இந்த சட்டமூலம் குறித்து ஆரம்பம் முதல் இறுதி வரை முஸ்லிம் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு உள்ளது

குறிப்பாக 13வது அரசியலமைப்பின் மூலம் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மாகாண சபைகள் கலைந்துவிடும் என்பதனையும், 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தினை கிழக்கு மாகாண சபையிலே சமர்ப்பித்த விடயத்தினையும், நன்கறிந்த முதலமைச்சர் பாராளுமன்றத்தில் மாகாண சபை திருத்தச்சட்டத்திற்கு மு.கா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்ததன் பின்னர் கிழக்கு மாகாண சபையிலே மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என அவசர பிரேரணையை சமர்ப்பிப்பது பெரும் வெட்கக்கேடான விடயமாகும்.

சிங்கள பேரினவாத அரசியலை புரிந்துகொள்ளாத முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஏனைய சமூகங்கள் புன்னகைக்கின்ற நிலமைகள் தோன்றியுள்ளது. மேலும் கிழக்கு முதலமைச்சர் ஒரு பதவிவெறி பிடித்தவர் என்பது அவரது அண்மைய நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்களே நீங்கள் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு அச்சப்படுவதற்கான காரணம் என்ன? இரண்டு வருடம் முதலமைச்சராக இருந்தவிடலாம் என்ற நட்பாசையில் பிரதமரின் கதைகேட்டு 20வது திருத்த சட்டமூலத்தினை திருட்டுத்தனமாக ஆதரித்தீர்களே இறுதியில் நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்களே. உங்களது சுயநல அரசியலை மக்கள் புரியாமலுமில்லை இதற்குரிய பிரதிபலனை எதிர்காலத்தில் அனுபவதித்தே தீருவீர்கள்.

ஏறாவூர் ஹிதாயத்நகர் சாலிஹீன் பள்ளிவாசல் வீதி புனரமைப்பு தொடர்பில் பள்ளிவாசல் நிருவாகிகள் தொடக்கம் பொதுமக்கள் வரை போராடினீர்கள் குறிப்பாக சமூக வலயத்தலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கருத்துக்களும் பரிமாறப்பட்டிருந்தன. இவைகளை கருத்திற்கொண்டுதான் அவ்வீதியினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நன்னோக்கத்தின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் கவனத்திற்கு கொண்டுசென்று அதனை புனர்நிர்மானம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவுபடுத்த வேண்டும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் பைசர் முஸ்தபா தெளிவுபடுத்த வேண்டும் Reviewed by Madawala News on 10/06/2017 08:06:00 PM Rating: 5