Ad Space Available here

பேச்சுக்களுக்கு விழும் ஏச்சுக்கள்எம்.எம்.ஏ.ஸமட்
சுதந்திரம் பெற்ற ஜனநாயகத் தேசமொன்றில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம். எந்தவொரு
நபரினாலோ அல்லது ஒரு குழுவினாலோ ஒரு தனி நபரது அல்லது ஓரினத்தினது உரிமைகள் பறிக்கப்படுகின்றபோது, அவ்வுரிமைகளுக்கு பங்கம் ஏற்படுத்தப்படுகின்றபோது குறிப்பிட்ட தனி நபருக்கெதிராக அல்லது அக்குழுவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது சட்ட ஆட்சி இடம்பெறும் ஜனநாயகத் தேச மொன்றின் ஆட்சியாளர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.

குற்றம் புரிவோர், குற்றச்செயல் இடம்பெறத் தூண்டுவோருக்கு எதிராகச் சட்டம் அதன் கடமையை சரியாக நிறைவேற்றும்போதுதான் அத்தேசத்தில் ஜனநாயகம் மலரும். சட்டத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்.

பல்லின சமூகங்கள் வாழும் இச்சுதந்திரத்தேசத்தில் சகல இனங்களும் தங்களுக்கான சுதந்திரத்துடன் ஏனைய சமூகங்களின் சுதந்திரங்களை மீறாது தமக்குரிய தனித்துவ உரிமைகளோடு வாழ்வதற்கு உரித்துடையவை.

ஒரு குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஒரு மக்கள் பிரிவின் அகம்சார்ந்த உணர்வுகளை முற்றாக நிராகரித்து, நீங்கள் இவ்வாறுதான் உங்களை அடையாளப்படுத்த முடியும் என்று விதிமுறைகளை யாரும் திணிக்க முடியாது.

ஓரினத்தினர் தம்மை எதுவாக அடையாளப்படுத்த விரும்புகிறார்களோ அதுவாக அவர்களை அங்கீகரிப்பதுதான் இனங்களின் தனித்துவத்தை, அம்மக்களின் அபிலாசைகளை மதிப்பவர்களின் கடமையாகும். ஆனால், பௌத்த கடும்போக்காளர்கள் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக முஸ்லிம்களின் உணவு, உடை, மதச் செயற்பாடுகள் எனப் பல தனித்துவ அடையாளங்களை சிதைப்பதை இலக்காகக்கொண்டு கடந்த ஆட்சியில் மாத்திரமின்றி, இந்நல்லாட்சியிலும் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

நாட்டில் சமாதானம் நிலைக்க வேண்டும். அமைதி நிலை பெற வேண்டும் சமூக ஒருமைப்பாடும், இனவுறவுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். என்றெல்லாம்  பேசப்படுகின்றது. அதற்காக மகாநாடுகளும் நடத்தப்படுகின்றன. அவற்றை வெற்றிகொள்வதற்காக செயற்திட்டங்களும் விழிப்புணர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் கொல்லி வைப்பதாக பௌத்த சிங்கள கடும்போக்காளர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை இறந்த காலம் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது

இறந்த காலமும் கடும்போக்காளர்களும்

இனவாதம் அதன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, அதன் கொடூரத்தை கடந்த ஆட்சிக் காலத்திலும் இக்கூட்டு அரசாங்கக் காலத்திலும் அரங்கேற்றியிருக்கிறது என்பதை அறியாதவர் இல்லை. பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பான அகமுரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகத்திற்கெதிரான கட்டமைக்கப்பட்ட கருத்துவாதத்தை  கடும்போக்காளர்கள் விதைத்திருக்கிறார்கள். இறந்த காலத்தில் அவற்றின் தாக்கங்கள் பல்வேறு கோணங்களில்;; வெளிப்படத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு விதைக்கப்பட்டுள்ள நஞ்சுக் கருத்துக்களினால் முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. பொதுபலசேனா என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட 2012 ஆண்டிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிரான கடும்போக்காளர்களின் நடவடிக்கைகள் விஷ்பரூபம் பெற்றது என்பதை இவ்வுலகமே அறியும்.

இன நல்லிணக்கத்தையும,; அமைதியையும,; புரிந்துணர்வையும் நேசித்து வாழும் பெரும்பான்மை பௌத்த மக்கள் மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான. குறிப்பாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் குறித்த விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டதில் இவ்வமைப்புக்கு அதிக பங்கிருக்கிறது என்பதை இறந்த காலத்தில்  முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்;ட நிகழ்வுகளைப் புரட்டிப்பார்த்ததால் அறிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக 2012ஆம் ஆண்டு மே மாதம் குருநாகல் பள்ளிவாசலில் தொடங்கிய பொது பல சேனாவின் கடும்;போக்கு வெறுப்புணர்வு நடவடிக்கைகளும், பேச்சுக்களும், எச்சரிக்கைகளும் இவ்வாண்டின் முற்பகுதி வரை தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கிறது என்பது வெளிப்படை.

பொது பல சேனா அமைப்பு உள்ளிட்ட கடும்போக்காளர்களினால் 2012ஆம் ஆண்டு முதல் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் புரியப்படிட்டிருகின்றன என்பதற்கான ஆவணப் பதிவுகளும் உள்ளன. இவற்றை சில ஊடகங்கள் கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நாட்டில் அமைதியுடன், சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்று எண்ணும் பெரும்பான்மை சிங்களவர்களையும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களையும் பகைவர்களாக வாழ வைக்கும் செயற்பாடுகளையே பொது பல சேனா அமைப்பு அதன் தொடக்க காலத்திலிருந்து முன்னெடுத்திருக்கிறது. இருப்பினும்,  ஒரு சிறு தொகையினைரைத் தவிர ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மக்கள் இவர்களின் விஷமத்தனமான பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை வழங்க வில்லை என்பதை கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவ்வமைப்புக்கு பௌத்த சிங்கள மக்கள் அளித்த வாக்குகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

'பொதுஜன பெரமுன' என்ற பெயரில் பொது பல சேன நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. 16 மாவட்டங்களில் இவ்வமைப்பு போட்டியிட்டு ஏறக்குறைய 23,000 வாக்குகளைப் பெற்றது. ஏறக்குறைய 15,000,000 சிங்கள மக்கள் வாழும் இந்நாட்டில் இவ்வமைப்பை விசுவாசித்து  வடக்கு மாகாணம் தவிர்த்து சகல மாகாணங்களிலும் ஏறக்குறைய 23,000 மக்களே ஆதரித்து வாக்களித்தனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட பெறுவதற்கான மக்கள் ஆதரவைப் இவ்வமைப்பு பெறவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு இவர்களுக்கு ஏற்பட்ட தோல்வியை நிலையை மீண்டும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வெற்றிகொள்வதற்கு இவர்களால் முன்வைக்கப்பட்ட வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆபத்தான விளைவுகளை முஸ்லிம் சமூகத்திற்கு ஏறபடுத்தியது என்பது உண்மை
ஒரு சில அப்பாவி பெரும்பான்மையின இளைஞர்கள் இப்பேச்சுக்களால் தூண்டப்பட்டு ஒரு சில நடவடிக்கைகளிலும் இறங்கினர். பல அமைப்புக்களையும் ஒரு சில பௌத்த தேரர்களைக் கொண்டு உருவாக்கி பல்வேறு விஷமப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது மாத்திரமின்றி பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அதன் அண்மைய செயற்பாடுதான்  ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை கல்கிஸ்ஸ அகதி முகாமிலிருந்து விரட்டியடித்த விடயமாகும்.  ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து ஐ. நா சபையின்; அகதிகளுக்கான அமைப்பின் கண்காணிப்புடன் இருந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டமும,; அதனுடன் தொடர்ப்புபட்ட செயற்பாடுகளும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது என்பதை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களே வெளிப்படையாகக் கூறியிருந்ததையும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுமுள்ளனர். இதன் மூலம் சட்டம் அதன் கடமையைச் செய்திருக்கிறது. சட்டம் எல்லோருக்கம் சமம் என்ற தத்துவம் தொடர்ந்தும் இந்நாட்டில் பாதுகாக்கப்படும் என்பதே சட்டத்தை மதிக்கின்றனவர்களின் நம்பிக்கையாகும்.
இந்நிலையில்தான், சமூக வலைத்தளங்களால்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பொது பல சேனா அமைப்புடனான முஸ்லிம் தரப்புக்களின் இரகசியச் சந்திப்பாகும்.
சந்திப்பும் எதிரிரும் புதிருமான பதிவுகளும்
குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தனிப்பட்ட நடவடிக்கையின் மூலமாகவோ அமைப்பு ரீதியாகவோ ஒரு நிறுவனத்திற்கு, ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படுவதை காப்பாற்ற வேண்டும் என்ற  எத்தேவையும் ஒரு முஸ்லிம் தனிநாபருகோ அல்லது முஸ்லிம் சமூகத்தின் சிலருக்கோ இல்லை என்பதே பொது அபிவிப்பிராயமாகும்.
இருப்பினும், குற்றமிழைத்த பலர் அக்குற்றங்களில் இருந்து தப்பித்திருக்கிறார்கள். ஒரு சிலருக்கு தண்டணைக் காலங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. குற்றமிழைத்த இன்னும் சிலர் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு குற்றம் இழைத்தவர்களின் மன்னிப்பு மற்றும் விடுவிப்பின் பின்னணியில்  அரசியல் செல்வாக்கு அவர்களுக்கு துணை நின்றிருக்கிறது  என்பதெல்லாம் இலங்கையின் அரசியலில் சகஜமா விடயங்களாகும்.
இந்நிலையில், பல வழக்குகளை எதிர்கொண்டும், நிதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்குமுள்ளாகியுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் முஸ்லிம் தரப்பினருக்குமிடையே இரகியமாக இடம்பெற்றுள்ள சந்திப்பு சமூக வலைத்தளங்களினூடாக பகிரங்கப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பதிவேற்றப்படும் கருத்தாடல்கள் யாரை யார் நம்புவது என்ற சந்தேகங்களை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எழுப்பியுள்ளது. அதிலும், ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் குறித்தான கருத்தாடல்களே பெரும் கேள்விக்குறியான விடயமாக முஸ்லிம்கள் மத்தியில் நோக்கப்படுகிறது.
இவ்வாறு பொது பல சேனாவின் செயலாளருடன் இடம்பெற்றுள்ள சந்திப்புக்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரினாலும் பற்பல கருத்துக்களும், கேள்விகளும் பதியப்;பட்டு வருகின்றன நிலையில், அரசியல் தளங்களில் நின்றும் கருத்தாடல்களும் விமர்சனங்களும்; கேள்விகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
' ஞானசார தேரருக்கு இஸ்லாம் பற்றி விளக்கமளிப்பது எப்போதே நடந்திருக்க வேண்டிய விடயம். இப்போது அவர் பொறியில் இறுகியுள்ள சந்தர்ப்பத்தில் நடாத்த வேண்டிய தேவை என்னவுள்ளது? அவர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து முன்வைத்துள்ள கருத்துக்களை பிழையென பகிரங்கமாக ஏற்க வேண்டும். இதன் பின்னால் இருந்த சக்திகள் பற்றி வெளிப்படுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்வாராக இருந்தால் நாம் அவருடன் சமரசம் பேசலாம்.' இவ்வாறு பல கேள்விக் கணைகள் சமூகவலைத்தளங்களை வியாபித்துக் காணப்படுவதுக் காணமுடிகிறது.
இதேவேளை, 'ஞானசார தேரரோடு பேச வேண்டுமென்று  ஜம்மியதுல் உலமாவோ அல்லது அதன் தலைவரோ யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்களைப் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைகளுக்குத் தீர்வுகான விரும்புதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்படவிருப்பதாகவும், உலமா சபையிடம் வேண்டிக்கொண்டதாகவும். அதன் நிமித்தம் இவ்விடயம் தொடர்பில் சட்டத்தரணி சிராஸ் நூர்த்தினிடமும் பிரிதொரு சட்டத்தரணியிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதாகவும்; அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், ஜம்மியாவின் நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு அதன் பின்னர் ஜம்மியாவின் சார்ப்பில் அஷ்-ஷேக் பாழில் பாருக் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதாகவும் தேரரின்;  வழக்குகள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை எனவும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தை தொடர்பில் எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும்; கேள்விகளுக்கும் அதற்காக இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டர்வர்களினால் வழங்கப்படும் பதில்களும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், ஞானசார தேரருக்கு எதிரான பல வழக்குகளை தாக்கல் செய்துள்ள சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்த்தின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கைகளில், 'முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பி;க்கை காற்றில் பறக்கும் படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும் அமையாது என்றும் தேரருக்கு எதிரான வழக்குகள் வபாஸ் பெறபட மாட்டாது' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இப்பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கோண கருத்தாடல்கள் பதியப்பட்டு வரும் நிலையில், இஸ்லாம் பற்றிய தெளிவு பொது பல சேனாவின் செயலாளருக்கு மாத்திரமின்றி, அனைத்து மாற்று மதத்தினருக்கும் வழங்க வேண்டிய பொறுப்புள்ளது. ஆனால், இங்கு எழுந்துள்ள முக்கியமான கேள்வி என்னவெனில், இஸ்லாத்தைத் தெளிவுபடுத்த வேண்டியவர்கள் இஸ்லாத்தைக் கற்றுத்தேர்ந்த உலமாக்களாகவே இருக்க வேண்டும்;. இருந்தும், அரசியலில் நேரடியச் செயற்பாட்டை உடையவர்களும், அரசியல் சாயம் கொண்டவர்களும் ஏன் இஸ்லாத்தைத் தெளிவுபடுத்தும் பேச்சுவார்த்தையில்  பங்குபற்ற வேண்டும். அரசியல் பிரமுவர்கள் இப்பேச்சுவார்த்தையில் பங்குபற்றியதன் மூலம் இதன் பின்னணியில் எத்தகைய இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரசியல் சக்திகள் செயற்பட்டிருக்கின்றன.  அச்சக்திகளின் இலக்குகள் எவை. இதனால் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கப்போகும் அடைவுகள் என்ன என்ற கேள்விகளும் பதிவாகி வருகின்றன.
இக்கேள்விகளுக்காக, அளிக்கப்பட்டு வருகின்ற பதில்கள் முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக சமூகவலைத்தளங்களை ஊடகத் தேடல்களுக்காகப் பயன்படுத்துவோர் மத்தியில் சந்தேகங்களையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எத்தரப்பின் பதில்கள் உண்மையானவை. யாருக்கு யார் பூச்சுத்துகிறார்கள்? யாரைத்தான் நம்புவது? என்றதொரு மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுவதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் மூலமாக அறிய முடிகிறது.
எது எவ்வாறு இருப்பினும், இந்நாட்டில் சமூக உறவு நிலைக்க வேண்டும். முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டும். முஸ்லிம்களின் அரசியல், சமூக பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இந்நாட்டில் வாழும் எதிர்கால சந்ததியினரின் இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக, பொது பல சேனாவுடன் மாத்திரமின்றி, ஏனைய முஸ்லிம் எதிர்ப்புச் சக்திகளுடனும்   ஆரோக்கியமான விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு, எவ்வித தனிநபர் நிகழ்ச்சி நிரல்களோடோ அல்லது அரசியல் இலாபகங்களுக்காக வேண்டியோ இத்தகைய நடடிக்கைகளை முன்னெடுக்காது, ஒட்டுமொத்த சமூகத்தின் சம கால மற்றும் எதிர்கால நன்மை கருதி இதய சுத்தியுடன்;  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முஸ்லிம்களின் தேசபற்று தொடர்பான தெளிவiயும்,  இஸ்லாம் தொடர்பிலும் முஸ்லிம்கள் குறித்தும் ஏற்படுத்தப்பட்டுள்ள தப்பவிப்பிராயங்களை கலைவதும் காலத்தின் கட்டாயமாகும்.
விடிவெள்ளி – 20.10.2017 
பேச்சுக்களுக்கு விழும் ஏச்சுக்கள்  பேச்சுக்களுக்கு விழும் ஏச்சுக்கள் Reviewed by Madawala News on 10/21/2017 04:55:00 PM Rating: 5