Ad Space Available here

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை..அரசியல்யாப்பில் பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை பெரும்பான்மையினத்தவர் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக்கூடியவாறான ஒரு அதிகாரபகிர்வையே வலியுறுத்துகின்றோம்


இவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீளப்பெறப்படக் கூடாது. இது விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் ஆசிய பசுபிக்பிராந்திய அமைச்சர் மார்க் பீல்டை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்


இச்சந்திப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயங்களை வலியுறுத்தியிருந்தார்.


சமகால அரசியல் நிலவரம் குறித்து அமைச்சரை தெளிவுபடுத்திய அவர், புதிய அரசியலமைப்பு உருவாக்கல் நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இதயசுத்தியுடன் பங்குபற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.


1957ம்ஆண்டிலிருந்தே அதிகாரப் பகிர்வுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதும், துரதிஷ்டவசமாக எந்த முயற்சியும் இதுவரை யதார்த்தமாகவில்லை. இந்திய அரசாங்கத்தின் பங்குபற்றுதலுடன் 1987ம்ஆண்டு முதன்முறையாக அதிகாரப் பகிர்வானது இந்நாட்டின் அரசியல்யாப்பில் அங்கீகரிக்கப்பட்டது


அன்றிலிருந்து ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கமும் தேசிய பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வினை எட்டும்முகமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக, பிரித்தானிய அமைச்சரிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் கூறினார்.

மக்கள், இந்த நாட்டின் பிரஜைகள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் அவர்களது சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக்கூடியவாறான ஒரு அதிகாரப்பகிர்வு ஒழுங்கினையே வலியுறுத்துகிறோம். இத்தகைய அதிகாரங்கள் எவ்வகையிலும் மீளப்பெறப்படலாகாது.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ்பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இதனடிப்படையில் இந்த மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணமாக இருக்க வேண்டும். அரசியல் யாப்பில் பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு கொடுக்கபட்டுள்ளமையினால் இவ்விரு மாகாணங்களும் இணைவதனை பெரும்பான்மை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்கவேண்டிய அவசியமில்லை. மேலும் அதிகாரபகிர்வானது ஒன்றுபட்ட, பிளவுபடாத, பிரிக்கமுடியாத இலங்கைக்குள் எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.


தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படுவது அவசியம் என்பதனை வலியுறுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இந்த கருமத்தில் நாம் தவறிழைக்க முடியாது அவ்வாறு நாம் தவறிழைக்கின்ற பட்சத்தில் அது வன்முறையின் மீள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்என்றார்.


இந்நாட்டின் மிகமுக்கியமான இந்த கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் பங்கினை வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இம்முயற்சிகள் சாதகமான முடிவொன்றினை அடைவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


இதேவேளை, காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றன அவசரமான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதனையும் உறுதிசெய்யவேண்டும் என்றார்.


இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்ற உறுதிமொழியை வழங்கிய பிரித்தானிய அமைச்சர், புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிதலைவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.


நேற்றைய சந்திப்பில் அமைச்சர் மார்க்பீல்ட் உடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் உயர்ஸ்தானிக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-Thinakaran-

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை..  வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை.. Reviewed by Madawala News on 10/06/2017 08:04:00 AM Rating: 5