Kidny

Kidny

இலங்கை முஸ்லிம்களின் பிரதான வரலாற்று நூலும் எமது தேவையும்.



இஸ்லாத்தில் சரித்திரத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. குர்ஆனும் ஹதீஸ்களும் நிறையவே
சரித்திரத்தை பேசுகின்றன. 

அதே போன்று நபிகளாரின் பிந்திய காலம் தொடங்கி உஸ்மானிய சாம்ராஜ்யம் வரையும், அதை அடுத்து வந்த அரசுகள் தொடங்கி தற்காலம் வரையிலுமான சரித்திரங்கள் மிகவும் துல்லியமாக எழுதப்பட்டுள்ளன. 


இதற்கு பிரதான காரணம் சரித்திர ஆசிரியர்களின் சேவையும், இஸ்லாமிய ஊழியர்களின் உழைப்புமாகும். இதே போன்று மேற்கத்தேய நாடுகளின் சரித்திரங்களும், முகலாயர்களின் சரித்திரங்களும், இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் சரித்திரங்களும் இன்றுவரை கிடைக்கப்பெறுகின்றது. 


இலங்கை முஸ்லிம்களின் சரித்திரங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களாக கிடைக்கப்பெறுகின்றன. இலங்கைக்கு அராபிய வர்த்தவர்களின் வருகை தொடங்கி சிங்கள அரசர்கள் வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் வரலாறுகளும், அதன்பின் பிரிட்டிஷாரின் ஆட்சி வரையிலான வரலாறுகளையும் இந்தப்புத்தகங்கள் மிகவும் துல்லியமாக காட்டுவதோடு, இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னுள்ள சரித்திரங்கள், ஆங்காங்கே சிறிய புத்தக வடிவிலும், முஸ்லிம் ஊர்களின் சரித்திரங்கள் என பல புத்தகங்களும் காணப்படுகின்றன. 


இவ்வாறான புத்தகங்களின் மிகவும் சிறப்பானதும் தலைசிறைந்த இலங்கையைச் சேர்ந்த மிகவும் பிரபலமான ஐக்கிய இராச்சியத்தில் கல்விகற்றவரும், கண்டி இராச்சிய சரித்திரத்தில் தேர்ச்சி பெற்றவருமான சிங்கள சகோதரியான காலம் சென்ற பேராசிரியர் லோனா தேவராஜா அவர்களால், காலம் சென்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சராகவும், முன்னாள் உயர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மிகவும் தியாகத்தின்  மத்தியில் ஆங்கில மொழியில், முதன்முதலாக 1994 ஆம் ஆண்டு,  வெளியிட்ட புத்தகம்தான் "Muslims of Sri Lanka One Thousand Years of Ethnic Harmony 900 - 1915" எனும் நூலாகும். இந்தப்புத்தகமானது ஆண்டு 900 தொடங்கி 1915 காலப்பகுதி வரையிலான இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தை உள்ளடக்குகின்றது. 


இப்புத்தகமானது 171 பக்கங்களைக் கொண்டதாகும். இப்புத்தகத்திற்கு காலம் சென்ற ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களே முன்னுரை எழுதி உள்ளார்கள். இணையதளத்தில் இப்புத்தகத்தின் ஆங்கிலப்பிரதி கிடைக்கப்பெறுகின்றது. சகோதரர் ஏ.சி.எஸ். ஹமீட் அவர்களின் முன்னுரை கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியதொன்றாகும். அத்தோடு, ஒவ்வொரு முஸ்லிமும் இப்புத்தக்தை வாசிக்க கடமைப்பட்டுள்ளார்கள். மிகவும் துரதிஷ்டமான விடயம் என்னவென்றால் இப்புத்தகம் வெளியிடப்பட்டு 23 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படாததும், இதற்கான முயற்சிகளை எவரும் எடுக்காததுமாகும். சிங்கள மொழியில் இப்புத்தகம் கிடைக்கப்பெறுகின்றது.   

  
காலம் சென்ற பேராசிரியர் லோனா தேவராஜா அவர்களைப்பற்றி இங்கு சிலவார்த்தைகள் குறிப்பிடுவது மிகவும் சிறந்ததாகவும், நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு நன்றிக்கடனாகவும் இருக்கும் என நினைக்கின்றேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அவர்கள் கடமையாற்றினார்கள். அத்தோடு பண்டாரணாயக சர்வதேச தூதரக பயிற்சி பாடசாலையின் இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார்கள். 

இலங்கையின் சரித்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார்கள். மாத்தறை, தெவினுவரவை பிறப்பிடமாக கொண்ட இவர்கள், நூதனசாலையின் முன்னாள் இயக்குனர் அமரவன்ச தேவராஜா அவர்களின் மனைவியுமாவார். 

லோனா தேவராஜா அவர்கள் கடந்த 27 நவம்பர் 2014 காலம் சென்றார்கள். இவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களுக்கு சிறந்ததொரு பாராட்டு விழா முஸ்லிம் சமூகத்தால் செய்யப்பட வேண்டும் என முயற்சித்தும், முடியாமல் போய்விட்டது. இவர்களைப்பற்றி மேடைகளிலும், மிம்பர்களிலும் எமது தலைவர்கள் புகழ்ந்தார்களே தவிர பாராட்ட தவறிவிட்டார்கள். 

லோனா தேவராஜா அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் முடிசூடா ராணியாகும். சகோதரர் ஹில்மி அஹ்மத் அவர்கள் Colombo Telegraph இல் கடந்த 30 நவம்பர் 2014 அன்று "Dr Lorna Devaraja – The Uncrowned Queen Of The Muslims" என்ற தலைப்பில் மிகவும் சிறப்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் பார்க்கவும்.

இதுபோன்று இலங்கை முஸ்லிம்கள் எனும் தலைப்பிலும், முஸ்லிம் ஊர்களின் சரித்திரங்களும் என பல புத்தகங்கள் துண்டும் துணியுமாக ஆங்காங்கே கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டு, சிங்கள சமூகத்தினரினதும், சிங்கள அரசர்களினதும் சரித்திரமான "மஹாவம்ச" போன்ற அங்கீகாரம் பெற்ற சரித்திரம் ஒன்று எம்மிடம் உள்ளதா என்றால், அதற்கான பதில் இல்லை என்பதாகும்.  

இலங்கை முஸ்லிம் சமூக தலைவர்களுக்கும், கல்விமான்களுக்குமான கேள்வி என்னவென்றால், மேற்குறிப்பிட்டவாறு கடந்த ஐம்பது வருடகால, 1967 முதல் 2017 வரையிலான ஆதாரபூர்வமான, சில ஊர்கள், சில மாவட்டங்கள் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சரித்திரம் எங்கே என்பதாகும். 

இந்த ஐம்பது வருட காலகட்டத்தில், கடந்த 1983 தொடங்கி 2009 ஆண்டு வரையிலான 26 வருடகால சரித்திரம் உலக அழிவு நாள்வரை இலங்கைத் தீவில் வாழவிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் இருப்பிற்கும், உரிமைக்கும் மிக முக்கியமானதாகும். இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் இழந்ததும் எமது அரசியல் வியாபாரிகள் சமூகத்திற்கு செய்த துரோகங்களும் சொல்ல முடியாதவை. இவற்றைப்பாதுகாத்து எமது அடுத்த தலைமுறையிடம் கையளிக்காவிட்டால் மேற்குறிப்பிட்ட 26 ஆண்டு காலப்பகுதியில் நாம் என்ன அனுபவித்தோமோ அதையே இன்னும் நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு பின் வரவிருக்கும் எமது சமூகம் அனுபவிக்கும். அவர்கள் நம் போன்று இல்லாமல், ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தின் சரித்திரமே தெரியாத, முகவரியற்றதொரு சமூகமாகத்தான் வாழ்வார்கள். அல்லது வீழ்வார்கள்.

சமூக தலைவர்களே நீங்கள் இப்போதாவது இதற்கான முயற்சிகளை செய்யாவிட்டால், எதிர்கால சந்ததிக்கு மறுமையில் பதில் சொல்வதற்கு தயாராக இருங்கள். 

இந்த நாட்டில் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழவுள்ள எமது சந்ததிகளின் இருப்பை உறுதி செய்வதற்காகவும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காகவும், 

இன்று நம்மிடம்  கிடைக்கப்பெற்றிருக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து வரலாற்று நூல்களும் ஒன்று சேர்க்கப்படுவதோடு, கடந்த ஐம்பது வருடகால வரலாறும் ஒன்றுதிரட்டப்பட்டு "இலங்கை முஸ்லிம்களின் பிரதான வரலாற்று நூல் - The Great Chronicle of Muslims of Sri Lanka" எனும் தலைப்பில் "மஹாவம்ச" போன்றதொரு நூல் உருவாக்கப்பட வேண்டும். சிறியதொரு நாட்டில் வாழும் எங்களது சரித்திரத்தை எழுதுவதும், பாதுகாப்பதும் எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். நாங்கள் இதை செய்யாவிட்டால் எவரும் இதை செய்யப்போவதில்லை. 

முஸ்லிம்கள் வாழும் ஒவ்வொரு கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் அரசியல் வியாபாரிகளினதும், இஸ்லாமிய பிரச்சாரத்தை நோக்கமாக கொண்ட அமைப்புக்களினதும் ஆதிக்கம் எதுவுமில்லாத குழுக்கள் அமைக்கப்பட்டு, சரித்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டியது எனக்கருதக்கூடிய சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும் தேர்வு செய்து மாவட்ட ரீதியாக ஒன்று சேர்க்கப்பட்டு இறுதியாக இவை அனைத்தும் தலை நகரில் பாதுகாக்கப்படும் பிரதான ஏட்டில் பதியப்பட வேண்டும். காலப்போக்கில் அரசால்கூட இந்த பிரதான ஏடு அங்கீகரிக்கப்படுவதோடு, ஒரு காலகட்டத்தில் நீதிமன்றங்களில்கூட ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையும். 

மேலும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இன்னுமோர் விடயம்தான் முஸ்லிம்களின் பொது நிறுவனங்களுக்கும், பள்ளிவாயல்களுக்கும் சொந்தமான நிலங்கள் அனைத்திற்குமான வரைபடங்களையும் அவற்றின் பத்திரங்களையும் பாதுகாப்பதும், இவைகளின் விபரங்களையும் மேற்படி சரித்திர ஏட்டில் உள்ளடக்குவதாகும். இவ்வாறு நாம் கடந்த 40 வருடங்களுக்கு முதல் செய்திருந்தால், இன்று தீகவாபியிலும், திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து அனாதரவாக நிற்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்காது.  

இந்த நாட்டில் எமது எதிர்கால சந்ததி எதிர்நோக்கவிருக்கும் மிகப்பெரியதொரு பிரச்சினையாக இருக்கப்போவது நிலங்களுக்கான பிரச்சினையாகும். இப்போதே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது. ஆயிரக்கணக்கான தீகவாபி காணிகளை மீட்க வேண்டும் என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசினால், இத்தனை தசாப்தங்கள் கடந்தும் மீட்க முடியவில்லை. இது வரை காலமும்  முஸ்லிம் சமூகம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து நிற்கின்றது. 

சமூகத்திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் செய்ய வேண்டும் என தூய்மையான எண்ணமற்ற சமூகத்தலைவர்களால் முஸ்லிம்கள் அடைந்த நன்மைகளையும், முன்னேற்றத்தையும் விட இழந்தததுதான் அதிகம். நாளுக்கு நாள் முஸ்லிம் சமூகத்தின் நிலை பின்னடைந்து கொண்டே செல்கின்றது. இதுதான் கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் உண்மையாகும். முஸ்லிம்களின் உரிமையும், நிலங்களும் திட்டமிட்டு சிறுதுசிறுதாக பறிக்கப்படுகின்றது. இதற்கு துணைபோவது, முஸ்லிம்களின் வாக்குகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்களும், சமூகத்தின் தலைவர்கள் என தம்பட்டமடிக்கும் ஒரு கூட்டமுமாகும்.

இலங்கை முஸ்லிம்களின் பிரதான வரலாற்று நூலும் எமது தேவையும். இலங்கை முஸ்லிம்களின் பிரதான வரலாற்று நூலும் எமது தேவையும். Reviewed by Madawala News on 10/14/2017 06:15:00 AM Rating: 5