Ad Space Available here

இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத் .சுஐப் எம். காசிம்.  

 

இனங்களைத் துருவப்படுத்தி சமூக நல்லுறவை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஊடகவியலாளர்கள் துணை போகக்கூடாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


வவுனியாவில் ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவித்தல் நிகழ்வு இன்று காலை (22.10.2017)இடம் பெற்ற போது பிரதம அதிதியாக அமைச்சர் கலந்து கொண்டார்


நோர்த் மாஸ் மீடியா கல்லூரியின் ஏற்பாட்டில் வவுனியா ஓவியா ஹோட்டலில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது:


பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளும் அவர்களின் செயற்பாடுகளுமே இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரழிவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம். இந்த நிலையை மேலும் மோஷமாக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது.


பெரும்பான்மையினத் தலைவர்கள் சொந்த அரசியல் இலாபம் மற்றும் ஆணவச்செறுக்கு ஆகியவற்றின் காரணமாக சிறுபான்மை மக்கள் மீது தேவையற்ற ஆதிக்கம் செலுத்தினர். மொழிக் கொள்கை தரப்படுத்தல் போன்ற பாரபட்ச நடைமுறைகளை அவர்கள் கொண்டு வந்ததனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் தனித் தமிழீழம் கோரி பாரிய எழுச்சிப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நிலைமை மாறி இருந்தது


அதன் பின்னர் முஸ்லிம்களுக்கென தனிக்கட்சி அமைத்து மர்ஹூம் அஷ்ரப் தமது சமூக உரிமை காக்க போராடினார். இவைகள் கடந்த கால வரலாறு.


பொருளாதார எழுச்சியை நோக்கி வீறு நடை போட்ட இந்த நாட்டை அரசியல் தலைவர்களின் பிழையான நடவடிக்கைகளே குட்டிச்சுவராக மாற்றியது. ஆனால் மேற்குலக நாடுகள் முன்னேறிச் செல்வதற்கான திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகின்றன


இந்த நிலையில் இங்கு வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமக்குள் ஒருவரோடொருவர் முட்டி மோதிக்கொண்டு அடுத்த இனத்தை எவ்வாறு வீழ்த்த முடியும்?அடுத்த சமூகத்தின் முன்னேற்றத்தை எவ்வாறு நசுக்க முடியும்? என்ற சிந்தனையில் செயற்பட்டுக் கொண்டிருப்பது துரதிஷ்டமான துர்ப்பாக்கியமான நிலையாகும்.


தற்போதும் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் ஒன்றையும் பாராளுமன்றில் வேறொன்றையும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் மற்றொன்றையும் பேசி வருகின்றனர். தமது சுயநலம்இ சொந்த அரசியல் ஆதாயம் அரசியல் இருப்பு ஆகியவற்றை தக்க வைத்துக் கொள்வதற்காக இவர்கள் இவ்வாறு செயற்படுவது வேதனையானது. அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் உள்ளத்தால் பேச வேண்டும். எம்மைப் பொறுத்த வரையில் நாம் உள்ளத்தால் பேசுவதனால்தான் எதிரிகளாகவும் குற்றவாளிகளாகவும் பிறரால் பார்க்கப்படுகின்றோம்.


ஊடகவியலாளர்கள் ஊடக தருமத்தையும் நெறிமுறைகளையும் பின்பற்றுவதே ஆரோக்கியமானது. எழுத்திலே நேர்மையும் உண்மைத் தன்மையும் இருக்க வேண்டும். அவர்கள் சந்தர்ப்பவாதிகளாக இருக்கக் கூடாது. தனிப்பட்டவர்களின் கோபதாபங்களை தீர்த்துக் கொள்வதற்காக ஊடகங்களை பயன்படுத்துவது தர்மமும் ஆகாது.


'ஊடகத்தினால் எவரையும் வீழ்த்தவும் முடியும் உயர்த்தவும் முடியும்' என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். எங்களைப் பொறுத்த வரையில் படைத்த இறைவனில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள். 'ஆக்குபவனும் அவனே. அழிப்பவனும் அவனே' என்பதில் எமக்கு நம்பிக்கை இருப்பதனால் என்னைப் பொறுத்தவரை என்னைப் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை எழுதுபவர்கள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை


அவர்களைத் தேடிச் சென்றதும் இல்லை. அவ்வாறு தேடிச் சென்று நேரத்தை விரயமாக்கவும் முடியாது. அபாண்டங்களை எழுதுபவர்கள் எதையோ எதிர் பார்த்து எழுதுகின்றார்கள் என்பது மட்டும் எமக்கு தெளிவாக தெரிகின்றது.


இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் ஏற்பட்ட பிரச்சினைகளும் சந்தேகங்களுமே இன்று நமது நாடு அகதிகளைச் சுமக்கும் நாடாக அகதிகளை உருவாக்கும் நாடாக அகதிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக துன்ப துயரங்களை சுமந்து வேதனையில் தத்தளிக்கும் நாடாக மாறியமைக்கு பிரதான காரணம்


இதனால்தான் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி கண்ணீருடன் அலைந்து திரியும் காட்சியும் சிறைக்கைதிகளை விடுவிக்குமாறு நடக்கும் ஜனநாயக போராட்டங்களும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன


இவ்வாறனவற்றுக்கு நாங்கள் முடிவு கட்ட வேண்டாமா? இந்த நாட்டில் அனைத்து இனங்களும் நிம்மதியாக வாழ வேண்டாமா? நமது நாட்டிலே சமாதானமும் நல்லுறவும் தழைக்க ஊடகவியலாளர்களின் பங்கே காத்திரமாக அமைகின்றது என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் அப்துல்லா மஹ்ரூப் இஷாக் ரகுமான் நவவி அதிபர் தனபாலசிங்கம் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொஹிதீன் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முஹம்மது பாரி மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கருணாதாச ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத் .  இனங்களைத் துருவப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஊகவியலாளர்கள் துணை போகக் கூடாது. வவுனியாவில் அமைச்சர் றிஷாத் .  Reviewed by Madawala News on 10/22/2017 05:31:00 PM Rating: 5