Ad Space Available here

எய்தவன் இருக்க அம்புக்கு பரிசா.?ஆயுத சத்தத்தை நிறுத்தியவன் இருக்க, சத்தமே இல்லாமல் வந்தவருக்கு நோபல் பரிசாம்..!

இலங்கையில் பயங்கரவாதம் அடக்கப்பட்டது ஆயுத வியாபாரிகளுக்கும்,இலங்கையை குட்டிச்சுவராக்கி அதன் மூலம் இலங்கை நாட்டை அடிமையாக வைத்திருக்கலாம் என்று நினைத்திருந்த மேற்குலக மன்னர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

மஹிந்த என்பவர் யாருடைய கதையையும் கேட்காமல் ஒரே மூச்சாக நின்று ஆயுத கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்த விடயமானது ஆயுத வியாபாரிகளுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

அதன் நிமித்தம் ஐ.நா சபையில் மனிதஉரிமை பிரச்சினையை கொண்டுவந்து மஹிந்தவை தங்களின் காலடியில் மண்டியிட வைக்கலாம் என்ற மேற்குலகின் என்னத்திலும் மண்ணைத்தூவி விட்டு,ஆட்சியை சீராக கொண்டுநடத்த வேண்டுமென்று என்னிய மஹிந்தவை, வேறுவழியால் தோற்கடிக்க நினைத்த மேற்குலகம் இனவாதிகளையும், அதனோடு சில அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு,பல கோடிகளை செலவு செய்து மஹிந்தவின் ஆட்சிக்கு முற்றுப்பள்ளி வைத்தனர்.

அதன் காரணமாக மஹிந்த ஆட்சியை மாற்றுவதற்கு துணையாக இருந்த மைத்திரி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கும் அளவுக்கு அவர்களுடைய பாசம் பீறிட்டு வழிகின்றது. 

இன்று பயங்கரவாதம் அடக்கப்படாமல் இருந்திருந்தால் மைத்திரி அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்க முடியுமா? அப்படித்தான் அவர் ஆட்சியில் அமர்ந்தாலும் நாட்டை தைரியமான முறையில் வழிநடத்தியிருப்பாரா? என்ற கேள்விகளுக்கு சிறுபிள்ளையும் இல்லை என்றே விடையளித்து விடும்.

இப்போது இவர்கள் ஜனநாயகவாதியாக நடந்து கொள்வதற்கும் பயங்கரவாதம் அடக்கப்பட்டதே காரணமாகும். அப்பபடி பயங்கரவாதம் அடக்கப்படாமலிருந்தால் இவர்கள் கடைசிவரையும் நியாயத்தைப் பற்றி பேசியிருக்கவே மாட்டார்கள் என்பதே உண்மையாகும்.

இப்போது பயங்கரவாதம் இல்லாத நாட்டிலிருந்து கொண்டு நாங்கள்தான் ஜனநாயக வாதிகள் என்று கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை எனலாம்.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் காரணமாக, அதனோடு சம்பந்தப்பட்ட தமிழ் சமூகம் இதற்கு காரணமான மஹிந்தவை மன்னிப்பற்கு தயாராக இல்லாத காரணத்தினால், அதற்கு மாற்றமாக யார் வந்தாலும் ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். அதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் அவ்வளவுதூரம் மக்களிடம் அறிமுகமில்லாத மைத்திரி அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

மேற்குலகினதும், டயஸ்போராக்களினதும் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றிய நல்லரசாங்கம், தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினையை முடித்துக் கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.இந்த செயல்பாடுகளை பெரும்பாண்மையான சிங்கள மக்கள் சந்தேககண் கொண்டு பார்க்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாது விட்டாலும், மறுபக்கம் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகுபார்க்கும் மேற்குலகத்தினரின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் கூலியாட்களாகவே இவர்கள் செயல்படுகின்றார்கள். அதற்காகத்தான் ஒன்றுமே சாதிக்காத ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்று மேற்குலகம் பரிந்துரை செய்த விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.


"எய்தவன் இருக்க அம்புக்கு பரிசு கொடுப்பது" என்று இதைத்தான் சொல்லுவதோ... 

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
எய்தவன் இருக்க அம்புக்கு பரிசா.?  எய்தவன் இருக்க அம்புக்கு பரிசா.? Reviewed by Madawala News on 10/04/2017 05:16:00 PM Rating: 5