Ad Space Available here

கண்ணால் காணாத ஒன்றைக் கண்டது போன்று கூறுபவர்கள் ‘உலமாக்களாக’ இருக்க முடியுமா?


பொது பல சேனா ஞானசார தேரரிடனான முஸ்லிம் தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்
கருத்துகள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து ஒளித்து மறைக்க எதுவுமில்லையென தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி.

அண்மையில் ஜனாதிபதியுடன் கட்டார் சென்ற முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்த அவரிடம், ஜனாதிபதியின் மீள் வருகையின் பின் அறிவிக்கப்பட்டுள்ள மாடுகள் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் வினவுவதற்காக சோனகர்.கொம் தொடர்பு கொண்ட போது கருத்துரைத்த அவர், இது தொடர்பில் தாம் உடனடியாக மறு நாளே ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டதாகவும் அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்த தற்காலிகத் தடை இரண்டு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாகவும் விளக்கமளித்தார்.

மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றினால் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்துக்கு திட்டமிட்டுள்ளதால் மேலதிக குழறுபடிகளைத் தவிர்ப்பதற்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி விளக்கமளித்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்தார்.

அத்துடன், ஞானசாரவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வினவப்பட்ட போது, இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் வீணாக உணர்ச்சிவசப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணமானவர்கள் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும் எனவும் தெரிவித்ததுடன் கண்ணால் காணாத ஒன்றைக் கண்டது போன்று கூறுபவர்கள்உலமாக்களாகஇருக்க முடியுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், ஞானசாரவுடன் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் பலனாக அவர் அடங்கிப் போயிருப்பது சமூகத்துக்கு ஒரு வகையில் நிம்மதியெனவும் இந்த நிலை நிரந்தரமாக மாறுமானால் அப்போது எல்லோரும் நிம்மதியடைவார்கள். ஆனாலும், இதற்கான முயற்சியில் இறங்கியவர்களை நன்றி கெட்டவர்கள் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இன்று ரிஸ்வி முப்திக்கு வழக்கிலிருந்து விடுதலை, NM.அமீனுக்கு ஐந்து கோடி நன்கொடை, தனக்கு மேயர் பதவி பேரம் என அருகில் இருந்து கண்டது போல் பேசுபவர்களும் அந்தப் புரளிகளை பரப்புவோரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்தில் தாம் இதனைக் கண்டு, அத்தாட்சியுடன் உறுதி செய்து கொண்டார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்கவும் இல்லாவிட்டால் அவதூறு பரப்பிய குற்றத்துக்கான தண்டனையைப் பெறவும் தயாராகிக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் தெரிவித்த அவர், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் பல சந்தேகங்களுக்குத் தெளிவு பிறந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முடிவில் அதன் பயன் அல்லது விளைவு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த விடயத்தில் எதுவும் ஒளித்து மறைக்கப்படப் போவதில்லையெனவும் எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட எந்தத் தரப்பும் உறுதிமொழி வழங்கவில்லையெனவும் மேலும் தெரிவித்தார்.

வதந்திகளை வேகமாக நம்பும் அளவுக்கு உண்மைகளைத் தேடிப் பார்க்கவும் சமூகத்தினர் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - சோனகர்..
கண்ணால் காணாத ஒன்றைக் கண்டது போன்று கூறுபவர்கள் ‘உலமாக்களாக’ இருக்க முடியுமா? கண்ணால் காணாத ஒன்றைக் கண்டது போன்று கூறுபவர்கள் ‘உலமாக்களாக’ இருக்க முடியுமா? Reviewed by Madawala News on 10/30/2017 12:40:00 AM Rating: 5