Kidny

Kidny

சுமந்திரனின் திட்டமும் ஹக்கீமின் சாணக்கியமும்..


தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டுமாக இருந்தால் முதலில் செய்யப்படவேண்டிய விடயம் வடக்கோடு
கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைதான் தமிழ் தரப்பின் நிபந்தனையாகும்.

இலங்கை அரசாங்கம்  தமிழர்களின் பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்த்து வைத்தேயாவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,1987ல் எப்படி ஜே.ஆரின் அரசாங்கம் இந்தியாவின் மிரட்டலுக்கு பயந்து வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கொடுத்து 13வது திருத்தத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முற்பட்டதோ,அதே போன்றதொரு நிலைதான் இன்று இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அன்று இந்திய அரசாங்கத்துக்கு பயந்ததுபோன்று, இன்று மேற்குலக நாடுகளின் கிடுக்குப்பிடிக்குள் மாட்டிக்கொண்டுள்ளது இலங்கை அரசாங்கம்யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்பாடு .நா சபையின் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு மஹிந்த அரசாங்கம் முகம் கொடுக்க நேரிட்டது,அந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்த அரசாங்கம் எதிர்த்து நின்றாலும், தற்போது ஆட்சியிலுள்ள நல்லரசாங்கம் .நா சபையின் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அதனை விசாரிப்பதற்கும்,அதற்கான தீர்வை வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த அடிப்படையில் நீண்டகால பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு எப்படியாவது தீர்வை வழங்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு ரணிலின் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.இந்த நிலையில்தான் அரசியல் யாப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவந்து,அதன் மூலம் தமிழர்களுடைய பிரச்சினையை தீர்த்துவிட வேண்டும் என்ற என்னத்தில்தான் இந்த அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றது.

அதன் காரணமாக தமிழர்களின் முக்கிய கோரிக்கையான வடகிழக்கு இணைப்பை அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முயற்சித்து வருகின்றமையை நாம் அறிந்து வருகின்றோம், இந்த இணைப்பின் மூலம் சிங்கள மக்களை விட கிழக்கிலே வாழும் முஸ்லிம் மக்கள்தான் அரசியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட போகின்றார்கள் என்ற விடயமும் தெளிவாக தெறிகின்ற போதும், அதனை அலட்சியம் செய்வது போன்றுதான்,ரணில் அரசாங்கம் நடந்துகொண்டு வருகின்றது என்ற விடயமும், அதற்கு முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவர்களும் உடந்தையாக இருந்து வருகின்றார் என்ற உண்மையும் அவர்களின் அண்மைக்கால செயல்பாடுகளின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

புதிய அரசியல் யாப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதற்கான யோசனைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதனை நாங்கள்தான் முக்கிய விடயமாக முன்வைத்தோம் என்று சுமேந்திரன் எம்பி அவர்கள் கூறிவருகின்ற நிலையில், முஸ்லிம்களின் முக்கிய ஆதரவைப்பெற்ற மு.காங்கிரஸ் அதனை அலட்சியப்படுத்தி பேசிவருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.

இந்த விடயத்தில் சுமேந்திரன் எம்பி போன்றவர்களின் முயற்சிகளை சாதாரணமாகவும் அதேநேரம் அலட்சியமாகவும் எடுத்துக் கொண்டதைப் போன்றுதான் இவர்களின் பேச்சும் நடப்பும் சுட்டிக்காட்டி வருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்

இந்த நினைப்பும் கருத்தும் முட்டாள் தனமானது என்பதை குறிப்பிட்ட தரப்பினர் அறிந்தே வைத்துள்ளனர்,இது ஏன் என்றுதான் புரியாத புதிராக உள்ளது.இந்த நிலைப்பாட்டின் பின்னால் மாபெரிய சதியொன்று இருப்பதையும்  முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டதாகவும் தெறியவில்லை.

இதன்படி பார்த்தால் வடக்கு கிழக்கு இணைப்பில் அரசாங்கதரப்பும், தமிழ் தரப்பும், முஸ்லிம்களின் தரப்பான மு.காங்கிரஸும் ஏற்றுக் கொண்டது போல்தான் இவர்களின் செயல்பாடுகள் காட்டி நிற்கின்றன.இந்த நடவடிக்கைகள் இலேசாக புரந்தள்ளிவிட முடியாத விடயம் என்பதை முஸ்லிம் சமூகம் கவணிக்க தவறுமாக இருந்தால், மிகப்பெரிய இழப்பொன்றை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இடம் இல்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த உள்ளூராட்சி தேர்தல் திருத்தசட்ட மூலத்தினூடாகவும், மாகணசபை தேர்தல் திருத்தச்சட்டத்தின் மூலமாகவும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள் கண்முன்னே பறிக்கப்பட்டுள்ள நிலையில், நமது அரசியல் தலைமைகள் அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, வெளியே வந்து பிழை நடந்துவிட்டது என்று ஒப்பாரிவைப்பதையும் கண்டுவருகின்றோம்

இப்படியான செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் விடயம் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.

ஆகவே, சம்பந்தன் ஐயா அவர்களும், சுமேந்திரன் எம்பி அவர்களும், அவர்களின் கட்சியினரும் இந்த தீர்வு விடயத்தில்  மடையனைப்போல் நடந்து கொள்வார்கள் என்று நினைத்து, அதனை அலட்சியப்படுத்தி பேசிவருகின்றவர்கள் நிச்சயாமாக முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுகின்றார்கள் என்பதுமட்டும் உறுதியாகின்றது. இதன் பின்னால் பணபலம் பொருந்திய பெரிய சக்தியொன்று நின்று விளையாடுகின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்

இதனைப் புரியாமல் இந்த விடயத்தை முஸ்லிம் சமூகம் அலட்சியப் படுத்துவார்களாக இருந்தால், அதைவிட மடத்தனம் ஒன்றுமே கிடையாது என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சுமந்திரனின் திட்டமும் ஹக்கீமின் சாணக்கியமும்..  சுமந்திரனின் திட்டமும் ஹக்கீமின் சாணக்கியமும்.. Reviewed by Madawala News on 10/17/2017 11:50:00 PM Rating: 5