Ad Space Available here

தாருன் நுஸ்ரா“ அநாதைகள் இல்ல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகள்!-Mohamed Mujahid-
கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து 25.07.2017 அன்று கொஹுவலை பொலீஸார் அந்த விடுதியில் சோதனை நடாத்தினர்.

அதன் போது அந்த விடுதியில் அனாவசியமான விதத்தில் அதிக எண்ணிக்கையிலான CCTV கமராக்கள் இருப்பதை பொலிஸார் அவதானித்தனர்.

சிறுமிகள் உடைமாற்றும், உணவு உண்ணும் அறை உட்பட பல இடங்களில் கமிராகக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சிறுமிகள் உடைமாற்றும் இடத்திலும் கமெராக்கள் இருப்பதை குறித்த இல்லத்தின் பராமரிப்பாளர் பொலிசாரிடம் ஏற்றுக் கொள்வதை வீடியோவில் காணலாம். 

(பார்க்க சுவர்னவாஹினி செய்தியின்1.06 ஆவது நிமிடத்தில் https://goo.gl/zwo7BQ )

அதன் பின்னர் பொலிஸார் அநாதை இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்டதாக கருதப்படும் சிறுமிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை அந்த இடத்தில் இருந்தே பதிவு செய்துள்ளனர்.

அநாதைகள் இல்லம் அமைந்திருந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடமும், சிறுமிகள் கல்விகற்று வந்த பாடசாலையின் ஆசிரியர்களிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 25.07.2017 அன்றே சிறுமிகள், ஊழியர்கள், சந்தேகநபர் என அனைவரும் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அதன்பின்பு, விடுதி மேற்பார்வையாளரின் கணவரான சந்தேகநபர் கைதுசெய்யப்படுகிறார். 

சிறுமிகள், ஊழியர்கள் என அனைவரும் அன்றைய இரவை பொலிஸ் நிலைத்திலேயே கழிக்க வேண்டி ஏற்படுகின்றது.

இரண்டாவதுநாள்,பொலிஸார் இது பற்றிய விடயங்களை கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கு அறியத்தரவும், நீதிபதி களுபோவிலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) சிறுமிகளை மருத்துவபரிசோதனைக்காக கையளிக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கின்றார், அத்துடன்சந்தேகநபரும்விளக்கமறியலில்வைக்கப்படுகிறார்.

முதல் நாள் இரவை பொலிஸ் நிலையத்தில் கழித்த சிறுமிகள் அனைவரும் இரண்டாம்நாள் ‘தாருன்நுஸ்ரா’ இல்லத்தில் தங்கவைக்கப்படாமல் கங்கொடவிலவில் அமைந்துள்ள சிங்கள அநாதைகள் இல்லமொன்றில் தங்கவைக்கப்படுகிறார்கள்.

அந்த அநாதை இல்லத்தில் போதிய இடவசதியின்மை காரணமாக ஒரு மண்டபத்திலேயே அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். அப்பொழுது கூட இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தில் இருந்து எந்தவொரு நிறுவனமோ, So Called Full Time சமூக ஆர்வலர்களோ முன்வந்திருக்கவில்லை.

சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையானது (JMO Report) இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதை அறிந்த நீதிபதி மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக மனோதத்துவ வைத்தியர் ஒருவரிடமும் சிறுமிகளை கையளித்து மனோதத்துவ ரீதியான பரிசோதனைகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணிக்கின்றார் .

* சிறுமிகள் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

* சந்தேக நபரின் நடவடிக்கைகள் காரணமாக தாம் முகம்கொடுக்கும் சிரமங்கள், துன்பங்கள் பற்றி பல தடவைகள் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களிடம் தெரியப்படுத்தியிருந்த போதிலும் எந்தவித நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுமிகளால் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில் உள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

* சந்தேகநபர் குற்றச் செயல்களை CCTV கமராக்களின் கண்காணிப்பு இல்லாத விடுதியின் பின்புறத்திலேயே மேற்கொண்டுள்ளதாகவும் வாக்குமூலத்தில் மேலும் பதியப்பட்டுள்ளது.

* 19 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவா் கற்பழிக்கப்பட்டுள்ளதாகவும் கொஹுவலை பொலிஸார் கங்கொடவில மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

(பார்க்க, சிங்களபத்திரிகைச்செய்தி : http://bit.ly/2xIefm8 முஸ்லிம் ஊடகங்கள் இதுவரை இந்த விடயத்தில் பயங்கர மெளனமாகவே உள்ளன.)

* மனோதத்துவ வைத்தியர் லசந்தி அக்மீமனவின் அறிக்கையிலும் இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களில் ஐந்து சிறுமிகள் தாம் முகங்கொடுத்த பேரவலம் காரணமாக பாரிய உளவியல் சிக்கல்களுக்கு முகம்கொடுத்திருப்பதனை கண்டறிந்த வைத்தியர் லசந்தி அக்மீமன அச்சிறுமிகளுக்கு பிரத்தியேக சிகிச்சை மற்றும் மருந்துகளையும் வழங்கியுள்ளார்.

* இவ்வாறான வழக்குககளில் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தும், குற்றத்தின் பாரதூரத்தை உணர்ந்த நீதிபதி திரு. அணுஷ்க செனவிரத்ன அவர்கள் சந்தேகநபருக்கு இரண்டு தடவைகள் பிணை வழங்க மறுத்து ரிமான்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். (14 + 14 நாட்கள்).

*மூன்றாவது முறை சந்தேகநபர் சார்பில் ஆஜரான முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகள் சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் மருத்துவ ரீதியான (நீரிழிவு நோய்) காரணங்களை முன்வைத்து மன்றாடி பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டதற்கு ஏற்பவே சந்தேகநபர் நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

* இந்தச் சிறுமிகளை சர்ச்சைக்குரிய ‘தாருன் நுஸ்ரா’ அநாதைகள் இல்லத்திற்கு வெளியே வைத்திருப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் காணப்பட்டன. 19 சிறுமிகளுக்கும் தேவையான இடவசதியை பெற்றுக்கொள்வது மற்றும் சிறுமிகள் ஏற்கனவே கல்வி பெற்றுவந்த பாடசாலையில் கல்வியைத் தொடருவது போன்ற காரணங்களினால் நீதிமன்ற உத்தரவின்படி இச்சிறுமிகள் ‘தாருன் நுஸ்ரா’விற்கே பொலிஸ் பாதுகாப்புடன் அவர்கள் அனுப்பட்டுள்ளனர்.

திரைக்குப்பின்னால் ......

இக்காலப் பிரில் ‘அல் முஸ்லிமாத்’ நிறுவனத்தின் பொருளாளர் உட்பட அதிமுக்கிய உயர்பதவிகளில் அங்கம் வகித்த மூன்று பெண்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

மேற்படி தஃவா நிறுவனத்தின் ஊழல்மேசடிகள், முறைகேடான கொடுக்கல் வாங்கல்கள், முறையற்ற நிர்வாகம், ‘தாருன் நுஸ்ரா’வில் சிறுமிகள் மீது நடைபெறுவதாகக் கூறப்படும் தவறான செயற்பாடுகள் பற்றி தாம் எழுப்பிய குரல்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லாததால் பெயரளவில் பதவி வகிப்பதை விட விலகுவதேமேல் எனவும் அவர்களது இராஜினாமாக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19 முஸ்லிம் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இரண்டு மாதங்களிற்கும் மேலாக நடைபெறும் நிலையில், முஸ்லிம் சமூகம் இது பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை! மாறாக, எந்தவித பண, அதிகார பின்புலமும் அற்ற சந்தேக நபரிற்காக ஆஜராக தலைசிறந்த சிரேஷ்ட சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்! 

பாதிக்கப்பட்டோர் சார்பில் செயற்பட எவரும் முன்வரவில்லை!

‘அல் முஸ்லிமாத்’ நிறுவனத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லிம் ஊடகங்கள், முஸ்லிம் ஊடகவியாலாளர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள், கோடிக் கணக்கான வெளிநாட்டுப் பணம் கொட்டப்படும் முன்னணி இஸ்லாமிய NGOகள், மார்க்க அறிஞர்களின் அமைப்புக்கள் போன்றவற்றிற்கு இருக்கும் உறவு யாவரும் அறிந்ததே.

‘அல் முஸ்லிமாத்’ நிறுவனம் சமூகத்தில் தமக்கு உள்ள பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள சந்தேகநபரை பாதுகாக்க முயலும் அதேசமயம், பெட்ரோ டாலர் NGOக்களுக்கும் தம்முடன் நெருங்கிய உறவுகளை வைத்துள்ள தமது சகோதரி அமைப்பான ‘அல்முஸ்லிமாத்’தைப் பாதுகாக்கவேண்டிய தேவை உள்ளது. (அனைவரும் தமக்கு அரபு நாடுகளில் இருந்து கொட்டும் பெட்ரோ டாலர்களை அமைதியாக பங்கு போட்டுக்கொண்டு சமூகசேவை(?) செய்யும் மிஷனரிகள் அல்லவா!!)

ஏதோவொரு வகையில் இந்த பெட்ரோ டாலர் NGO வலையமைப்புடன் இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோருக்கு தவிர்க்க முடியாத தொடர்புகள், தேவைகள் இருப்பதால், இந்த விவகாரத்தை தமது சுயநலம் காரணமாய் திட்டமிட்டவகையில் மூடிமறைத்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் NGO மாஃபியாக்களின் முயற்சிகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து இவர்கள் கள்ள மெளனம் காக்கின்றனர்!

அப்படியானால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுவர்களின் கதி என்ன?

பணமும் அதிகாரமும் ஒன்று சேர்ந்து சந்தேகநபரின் சார்பில் வக்காலத்து வாங்கும் போது, சமூகம் எந்த பிரக்ஞையும் அற்றநிலையில் அறச்சீற்றம் கூட கொள்ளாது மௌனித்து மரணித்துப்போய்உள்ளது.

அதுவெல்லாம்சரி, இந்தவழக்கில் 62 வயதான ஆண்தான் பிரதான சந்தேகநபர். நிலைமை அப்படி இருக்கும் போது  வைத்தியப் பெண்மணிக்கு இந்த விவகாரதத்தில் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

அவர் ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் உத்தியோகபூர்வமாக என்ன பதவி வகிக்கிறார்? 

இதனை அவரோ அல்லது அவருக்காக வக்காலத்து வாங்குகின்றவர்களோ தெளிவாக சொல்ல முடியுமா?

ஆகக் குறைந்தது ‘அல்முஸ்லிமாத்’ தஃவா கம்பனியிலாவது அவர் என்ன பதவியில் உள்ளார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?

இந்த விடயம் தொடர்பில் சம்பம்தப்பட்ட தரப்பு ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கின்றார்களே  தவிர, ஏன் இது வரை அல் முஸ்லிமாத் அமைப்பின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் ஒரு மறுப்புக் கூட வெளியிடவில்லை என்பதை கவனித்தீர்களா?

ஏன் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.....

விடைகள் உங்களுக்குத் தெரிந்தால்.....

Happy Children’s Day மக்காள்!


தாருன் நுஸ்ரா“ அநாதைகள் இல்ல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகள்! தாருன் நுஸ்ரா“ அநாதைகள் இல்ல பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகள்! Reviewed by Madawala News on 10/03/2017 08:17:00 PM Rating: 5