Yahya

நான் அன்றும் இன்றும் மஹாசங்கத்தினரின் அறிவுரைகளுக்கு ஏற்பவே செயலாற்றுகிறேன் ; ஜனாதிபதி


நாடு முகங்கொடுத்துள்ள பாரிய சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான பலமும் இயலுமையும்
ஜனாதிபதியிடம் உள்ளது.

அனைத்து இனங்களினதும் அங்கீகாரத்துடன் தேசிய பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன மட்டுமேயாவார் என்று இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

பெப்பிலியான சுநேத்திரா மகாதேவி பிரிவெனா ரஜமகா விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு மற்றும் மாநாட்டு மண்டபத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே சங்கைக்குரிய தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்புண்ணிய நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முரண்பாடுகளைத் தீர்ப்பது குறித்து புத்தபெருமான் மிக ஆழமாக கருத்துரைத்துள்ளார். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு முறைமைகள் இருக்கின்றபோதும் எந்தவொரு உயிர்ச்சேதத்திற்கும் இடமளிக்காதவகையில் முரன்பாடுகளைத் தீர்ப்பதே பௌத்த கொள்கையாகும் என்று குறிப்பிட்டார்.

முரண்பாடுகளைத் தீர்ப்பது ஒரு விஞ்ஞானமும் அதேநேரம் கலையுமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இது நவீன உயர்கல்வித்துறையில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளதாகவும் நாம் இன்று முகங்கொடுத்துள்ள முரண்பாட்டுத் தீர்வையும் நன்கு விளங்கி விஞ்ஞானபூர்வமாகவும் கலை அடிப்படையிலும் அதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அன்றும் இன்றும் பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனைக்கு ஏற்பவே தான் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து நீண்டநேரம் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்த அபயதிஸ்ஸ தேரர், நீண்டநேரம் மிகவும் அமைதியாக தமக்கும் தமது தரப்பினருக்கும் செவிசாய்த்த ஜனாதிபதி இறுதியில் உறுதியாக முன்வைத்த கருத்துக்கள் அவருக்கு இந்த நாட்டைப்பற்றியும் நாட்டு மக்கள் பற்றியும் உள்ள அக்கறையை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியது எனக் குறிப்பிட்டார்.

சுதந்திரம் கிடைத்தது முதல் இந்த நாட்டில் சிறுபான்மை இனத்திற்கும் பெரும்பான்மை இனத்திற்குமிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகள் என்றும் அவ்வாறு உருவாக்கப்பட்ட சில அடிப்படைவிதைகள் இன்னும் இருப்பதாகவும் அந்த விதைகளை அகற்றி அனைத்து இனங்களும் ஐக்கியமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது தமது நோக்கமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக அபயதிஸ்ஸதேரர் இதன்போது நினைவுகூர்ந்தார்.

காலம்சென்ற தமது தாயாரின் நினைவாக மகேல பெரேரா மற்றும் தில்ஷான் விஜேதுங்க ஆகியோரின் அன்பளிப்பில் நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயிலையும் மற்றும் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தையும் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் நெதிமால பௌத்த கலாசார நிலையத்தின் தலைவர் சங்கைக்குரிய கிரம விமலஜோதி நாயக்கதேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, ஜீவன் குமாரதுங்க, ஸ்ரீஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சம்பத் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
நான் அன்றும் இன்றும் மஹாசங்கத்தினரின் அறிவுரைகளுக்கு ஏற்பவே செயலாற்றுகிறேன் ; ஜனாதிபதி  நான் அன்றும் இன்றும் மஹாசங்கத்தினரின் அறிவுரைகளுக்கு ஏற்பவே செயலாற்றுகிறேன் ; ஜனாதிபதி Reviewed by Madawala News on 10/30/2017 12:05:00 PM Rating: 5