Ad Space Available here

சாய்ந்தமருது தனி சபை விடயத்தில் ஆப்பிழுத்த குரங்கான மு கா தலைவர்..


கையிலே உள்ள வெண்ணெய் உருகத்துவங்கி விட்டார்கள் சாய்ந்தமருது மக்கள், இனி நெய் கிடைப்பதுதான் பாக்கி.
ஆனால் அந்த வெண்ணெயை உருக்க பயன்படும் "கொல்லிதான்" தலைவர் ஹக்கீம் என்பதே கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால போராட்டம்தான் சாய்ந்தமருதுக்கு தனியான சபை வேண்டும் என்பதானது, அந்த கோரிக்கையை ஊரின் சில படித்த சமூகங்களும், குழுக்களும்  முன்வைத்திருந்தாலும், இதனை சாய்ந்தமருதின் பெரும்பாண்மையான மக்கள் கவணத்தில் எடுக்கத் தவறி வந்தார்கள்.

தங்களுடைய ஊரின் ஆஸ்பத்திரிபாடசாலைகள், தோனா, கடல்கரையோர பூங்கா, வோட்ஜாட், போன்ற இதரவிடயங்களிலும், ஊரின் அபிவிருத்தி விடயங்களிலும், அரசியல் ரீதியான புறக்கணிப்புகளையும் அவர்கள் மறைமுகமாக சந்தித்தே வந்தார்கள்இப்படியான சில விடயங்களை முன்வைத்துத்தான் மயோன் முஸ்தபா அவர்களும் அந்த காலத்தில்  சாய்ந்தமருது மக்களிடம் அரசியல் ஆதரவு கோரிய போதெல்லாம், அவர் சாய்ந்தமருதூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரையும் அவர்கள் நிராகரித்திருந்தார்கள்.

அதே நேரம் முன்னால் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் சாய்ந்தமருதுக்கு பலசேவைகளைச் செய்திருந்தார், அதன் நிமித்தம் அவர் கடந்த பொதுத்தேர்தலிலே சாய்ந்தமருதூரைச்சேர்ந்த பசீர் அதிபர் அவர்களை வேட்பாளராக களம் இறக்கியிருந்தார், அவரைக்கூட ஒரு சில வாக்குகளினால் அந்த ஊர் மக்கள் தோற்கடித்திருந்தார்கள்.

அவர்களின் ஒரே நோக்கம் தங்களுடைய ஊருக்கு எது நடந்தாலும் பரவாயில்லை, மு.காங்கிரஸ் மட்டும் சாய்ந்துவிடக்கூடாது என்பதேயாகும், அதன் காரணமாகத்தான் மு.காங்கிரஸ் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அவர் நல்லவரா? கெட்டவரா? படித்தவரா? படிக்காதவரா? சொந்த ஊரைச் சேர்ந்தவரா? என்றலெல்லாம் பார்ப்பதில்லை அவர்களுக்கே அவர்கள் வாக்களித்தும் வந்தார்கள்.

இங்கே ஊர்த்துவேசம் என்பது எல்லளவும் அந்த மக்களினால் பார்க்கப்படவில்லை, முன்னால் அமைச்சர் மன்சூர், மு.காங்.தலைவர் அஸ்ரப், பிரதியமைச்சர் ஹரீஸ், மேயர் தேர்தலில் ஹரீஸ் அவர்களுக்கு சார்பாக களம் இறக்கப்பட்ட அஜ்மீர் போன்றோருக்கெல்லாம், கடந்தகாலங்களில் வாக்களித்து அழகுபார்த்தவர்கள்தான் இந்த சாய்ந்தமருது மக்கள்

அவர்கள் கடந்த காலங்களில் எங்களூருக்கு மேயர்பதவி தாருங்கள் என்று கேட்டவர்களும் அல்ல, அதற்காக அலட்டிக்கொண்டவர்களும் அல்ல.ஆனால் கல்முனை மாநகர சபையின் முதல் மேயராக அஜ்மீர் அவர்கள் இரண்டுவருடங்களாக பதவியில் இருந்தபோதும், அவரையும் ஏற்றுக்கொண்டு இருந்தவர்கள்தான் இந்த சாய்ந்தமருது மக்கள்

இப்படிப்பட்ட குணயியல்பை கொண்ட இந்த ஊர்மக்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி அதன் மூலம் தனது நாடகத்தை அரங்கேற்றி வந்த மு.காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் அவர்கள் இன்று "ஆப்பிழுத்த குரங்கின்" கதையாக மாட்டிக்கொண்டார் என்பதே உண்மையாகும்.

சாய்ந்தமருதுக்கு ஒரு சபைவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான், எறியும் நெருப்பிலே எண்ணெய்யை ஊற்றுவதுபோன்று சிராஸ் மீராசாய்வின் மேயர் பதவியை இரண்டுவருடங்களில் பறித்தது மட்டுமல்லாமல், நிசாம் காரியப்பருக்கு கொடுத்தவிடயமுமாகும்

இந்த மேயர் பறிப்புவிடயம் ஒப்பந்தமாக இருந்தாலும்,ஹக்கீம் அவர்கள் அந்தநேரம் அந்த விடயத்தை கையாண்ட விதம் கல்முனைக்குடி மக்களையும், சாய்ந்தமருதூர் மக்களையும் கூட்டிக்கொடுத்து கூத்துப்பார்க்கம் செயலாகவே பட்டது.

அதன் பின்தான்  தங்களூருக்கு ஒரு சபை வேண்டும் என்று போராடிவந்த அந்த ஊரின் நலன்விரும்பிகளின் கோரிக்கைக்கு அந்தவூர் மக்கள் காதுகொடுக்க ஆரம்பித்தார்கள் என்பதே உண்மையாகும்.

சாய்ந்தமருது மக்களின்  கோரிக்கைகளை விளையாட்டாக எடுத்துக்கொண்ட ஹக்கீமும், ஹரீஸும் பல தடவைகள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் முக்கியஸ்தர்களை கொழும்புக்கு அழைத்து சென்று முன்னால் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரியாவிடம் பேசியிருந்தார்கள், அதன் பின் கடந்த பொதுத்தேர்தலில் சந்தாங்கேணி மைதானத்தில் வைத்து பிரதமர் ரணில் மூலம் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்குவோம் என்று சொல்லவைத்தார்கள், ரணில் சொல்லும்போது இரு ஊர் மக்களும் அந்த இடத்தில் நின்றிருந்தார்கள், அந்த நேரம் அதற்கு யாருமே எதிர்ப்பை காட்டியிருக்கவில்லை.

அதன் பிற்பாடு தற்போதைய உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடமும் அவர்களை அழைத்துச்சென்று, சாய்ந்தமருதுக்கு பிரதேசசபையை பெற்றுக் கொடுப்பதற்கு ஹக்கீமும் ஹரீஸும் முயற்ச்சிந்திருந்தார்கள்.

அதற்குள் அமைச்சர் ரிசாட் அவர்களும் அவருடைய பங்குக்கு பைசர் முஸ்தபாவை அழைத்துவந்து சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேசசபை நான் பெற்றுத்தறுவேன் என்று கூறிவிட்டுச் சென்றார், அந்த வாக்கும் காற்றோடு கரைந்துவிட்டது. இதுவெல்லாம்தான் சாய்ந்தமருது மக்களை இந்த விடயத்தில் உறுதிபூண வைத்துவிட்டது எனலாம்.

இருந்தாலும் சாய்ந்தமருது மக்கள் தனியாக பிரிந்து சென்றார்கள் என்றால் கல்முனை மாநகரசபை தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடும் என்ற காரணத்தைக் காட்டி, இன்று கல்முனைக்குடி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெறிவித்து வருகின்றார்கள் என்ற விடயமும் அரசியல்வாதிகளுக்கு தெறிந்திருந்தாலும் அதனை சட்டைசெய்யாமல், அவர்கள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விடயமானது, ஏன் என்றுதான் இதுவரையும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

(இருந்தாலும் சாய்ந்தமருதூர் பிரிந்து செல்வதனால் கல்முனை மாநகரசபை தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடும் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன அதனை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

இந்த விடயத்துக்கு முன்னால் உள்ளூராட்சி அமைச்சர் அதாவுல்லா அவர்கள் காதும் காதும் வைத்தாற்போல் இந்த பிரச்சினைக்கு தீர்வை நான் தருகிறேன் என்று வந்தபோது, அதற்கு இரு ஊர் மக்களும் ஆர்வம் காட்டவில்லை, காரணம் சாய்ந்தமருது மக்களுக்கு பிரதேசசபை கிடைப்பதாக இருந்தால் அது மு.காங்கிரஸினூடாகவே கிடைக்கவேண்டும் என்ற அலட்சியப்போக்கினாலாகும். இன்று காட்டும் ஆர்வத்தை அன்று அவரிடம் காட்டியிருந்தால் ஒருவேளை இந்த விடயம் யாருக்கும் பாதிப்பில்லாமல் கல்முனை மாநகரம் நான்காக பிரிக்கப்பட்டிருக்கலாம்

ஆனால்  கல்முனைக்குடி மக்கள் நான்காக சபை பிரிக்கப்படுவதை அன்று வெகுவாக எதிர்த்திருந்தார்கள், ஆனால் இன்று  "அடைந்தால் மகாதேவி அடையாதுவிட்டால் மரணதேவி" என்று கூறுவதைப்போல் பிரித்தால் நான்காக பிரியுங்கள் இல்லாவிட்டால் பிரிக்கவேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

ஆனால் இந்த விடயங்களை அவர்கள் முன்பு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அது ஏனென்றுதான் புரியவில்லை, இருந்தாலும் இப்போது சாய்ந்தமருதுக்கு பி.சபை கிடைக்கப்போகின்றது என்றவுடன் விழித்துக்கொண்டு அதற்கு தடைபோடுகின்றார்கள்இந்த எதிர்ப்பை ஆரம்பத்தில் காட்டத்துவங்கியிருந்தால் ஒருவேளை இந்த விடயத்தில்  ஹக்கீமும் ஹரீசும் நிதானமாக நடந்திருக்க வாய்ப்பு இருந்ததுஇருந்தாலும் இந்த விடயங்கள் இப்போது பூதாகரமாகிவிட்டது என்றே சொல்லலாம்.

முடிவாக, சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டே ஆகவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது, அதே நேரம் கல்முனைக்குடி மக்களின் பயமும் தீர்க்கப்படவேண்டும் என்பதே உண்மையுமாகும்.

இதற்கெல்லாம் ஹக்கீமும் ஹரீஸும் இரு ஊர் மக்களுக்கும் பதில் சொல்லவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்த விடயம் இரு ஊர் மக்களையும் திருப்திப்படுத்தாமல் விட்டால் மு.காங்கரஸ் தலைவர் ஹக்கீம் கல்முனை பக்கம் வருவதை மறக்கவேண்டித்தான் வரும் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
சாய்ந்தமருது தனி சபை விடயத்தில் ஆப்பிழுத்த குரங்கான மு கா தலைவர்.. சாய்ந்தமருது தனி சபை விடயத்தில் ஆப்பிழுத்த குரங்கான மு கா தலைவர்.. Reviewed by Madawala News on 10/30/2017 01:06:00 AM Rating: 5