Kidny

Kidny

மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடும் சிரியா..




பஷார் அல் அஸாத் அரசு அமெரிக்கா இஸ்ரேல் கூட்டணியை எதிர்த்து போரிட்டு வந்தாலும், பாத் கட்சியின்

அமெரிக்க எதிர்ப்பை முரணற்றதாகப் பார்க்க முடியாது.  சதாம் உசேன், கடாஃபி போலவே அஸாத் அரசின் அமெரிக்க எதிர்ப்பிலும் இரட்டைத் தன்மை இருப்பதைக் காணமுடியும்.  அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்த பிறகும் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்துவிட்ட அஸாத் அரசுதான், 2000க்குப் பின் மேற்குலகைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குச் சாதகமாகத் தனியார்மய தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை சிரியாவில் அமல்படுத்தியது.

சவூதியின் மன்னர் குடும்பம் போல அஸாத் அமெரிக்க அடிவருடியாக, கைக்கூலியாக இல்லாவிட்டாலும், தனது குடும்ப ஆட்சியின் நலன், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது குடும்பம் திரட்டிக் கொண்ட சொத்தின் நலன் ஆகியவற்றைப் பொருத்தே, அஸாத் அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடி வந்திருக்கிறது.

ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சி, ஏகாதிபத்தியங்களுடான உறவில் இரட்டைத் தன்மை என்ற பலவீனங்கள் ஒருபுறம் இருந்தபோதும், பஷார் அல் அஸாத்தின் அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்துவருகிறது.  பல்வேறு மதம், இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வரும் சிரியாவில் பாத் கட்சியின் ஆட்சியின் கீழ் மத  இன மோதல்கள் நடந்ததில்லை என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிரியாவின் மீது ஒரு நேரடியான தாக்குதலை நடத்துவதற்கு ஏற்ப இராணுவத்தை ஒதுக்குவதில் மேற்குலக ஏகாதிபத்தியங்களிடேயே ஒத்த கருத்து ஏற்படாததால், ரசியாவும் சீனாவும் நேரடித் தாக்குதலை நடத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால், பிரித்தாளும் சூழ்ச்சியினையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதன் மூலம் பஷார் அல் அஸாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட முயன்று வருகின்றன, மேற்குலக ஏகாதிபத்தியங்கள்.

சிரியாவில் பஷார் அல் அஸாத் ஆட்சி வீழ்த்தப்பட்டால், அங்கு ஜனநாயகம் மலரப் போவதில்லை.  சுன்னி பிரிவைச் சேர்ந்த மதவாத அமைப்புகளின் சர்வாதிகார ஆட்சிதான் நிறுவப்படும்; மத  இனரீதியாக நாடு துண்டாடப்படும்.  தனது மேலாதிக்க நலன்களுக்காக ஜிஹாதிகளை, முஸ்லிம் போராளிகளை  அமெரிக்கா ஊட்டி வளர்க்கத் தயங்காது என்பதற்கு சிரியா இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்புகளாக முத்திரை குத்தித் தடை செய்த அமெரிக்கா, சிரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவது, பயங்கரவாதம் குறித்த அதன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

இதுபோன்றுதான் தனது ஆக்கிரமிப்பு கொள்கையை வலுப்படுத்த பயங்கரவாத முத்திரையை கையிலடுத்து முழு உலகத்தையுமே அது சீரழித்து வருகின்றது.

Muja ashraff 
மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடும் சிரியா..  மேற்குலக ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டாடும் சிரியா.. Reviewed by Madawala News on 10/20/2017 12:25:00 AM Rating: 5