Kidny

Kidny

காலையில் வந்து மாலையில் நிறைவேறிய மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம்



ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்படும்போது அதில் மக்களுக்கு பாதிப்புகள் உண்டா?என்று தீர்மானிப்பதற்கும்
அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லுவதற்குமான சந்தர்ப்பம் அரசியல் யாப்பில் மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தை தறாமல்,ஒரு சட்டம் இயற்றப்படுமாக இருந்தால் அது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருதப்படவேண்டும்.

இந்த விடயத்தை நாம் ஆழமாக பார்க்க வேண்டும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையே அதிகாரம் சம்பந்தமான ஒரு போட்டி நிலை இருந்து வந்தது. நீதிமன்றமே உயர் நிலையில் உள்ளது என்ற கருத்தே 1948ம் ஆண்டய சோல்பரிக் அரசியல் அமைப்பில் இருந்துவந்தது.

சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக ஏதாவது பிழையான சட்டங்களை இயற்றி அவர்களின் உரிமைகளை பறித்துவிடக்கூடாது என்ற காரணத்தினால், 29(2) ஆம் பிரிவின் கீழ் ஒரு பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகின்ற சட்டங்களை இலங்கைப் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என்ற மேற்படி விதியொன்றை சோல்பரிக் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டிருந்தது.

மேலும் அதிலே சட்டம் ஒன்று ஆக்கப்படும்போது இங்கிலாந்து அரசினது அனுமதியை பெறவேண்டுவதுடன், பிரதிநிதிகள்சபை, செனட்சபையினரின் அனுமதியையும் பெறவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் நோக்கம் என்னவென்றால், சிறுபாண்மையினர்களுக்கு எதிராக பெரும்பாண்மையிர் செயல்பட்டு விடக்கூடாது என்பதனாலேயாகும்.

இந்த பாதுகாப்பு 1972ம் ஆண்டய அரசியலமைப்பில் இல்லாமல் செய்யப்பட்டு அதற்கு பதிலாக, நீதிமன்றங்களுக்கு இருந்த அதிகாரம் நீக்கப்பட்டு, பாராளுமன்றமே சட்டம் இயற்றுவதில் மீயுயர்வானது என்றும், பாராளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டத்தை செயலிழக்கச் செய்யவோ, சட்டவிரோதமானது எனத் தீர்ப்பு சொல்லவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லையென 39(1) என்ற பிரிவின் மூலம் கூறப்பட்டிருந்தது.

இருந்தாலும் பாராளுமன்றம் இயற்றும் சட்டத்தை விசாரிப்பதற்கு, அரசியல் அமைப்பில் "அரசியலமைப்பு நீதிமன்றம்" ஒன்றை அமைத்திருந்தனர். இவ் அரசியல் அமைப்பு நீதிமன்றத்தின் பிரதான நோக்கம் தேசிய அரசு பேரவையில் விவாதிக்கப்படும் சட்டங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானதா இல்லையா என்பது தொடர்பாக தேசிய அரசுப் பேரவைக்கு ஆலோசனை வழங்குவதேயாகும்.

குறிப்பிட்ட சட்டம் அரசியல் அமைப்புக்கு முரணானது என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதனை 2/3 பெரும்பான்மை நிறைவேற்றும் அதிகாரம் தேசிய அரசுப் பேரவைக்கு இருந்தது. இதன் மூலம் சோல்பரிக் அரசியலமைப்பில் இருந்த சிறுபாண்மையினருக்கான  சட்டபாதுகாப்பு இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு 1978ம் ஆண்டய அரசியலமைப்பில் ஒருபடி மேலே சென்று, ஒரு சட்டம் ஆக்கப்படமுன்னர் அதில் மக்களுக்கு பாதிப்புகள் உண்டா? எனப் பார்ப்பதற்கு ஏற்பாட்டை செய்திருந்தது. அது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்தது.

ஒரு சட்டம் ஆக்கப்படுவதற்கு முன் நடைபெறவேண்டியது என்ன?

1) அரசியல் அமைப்புச் சட்டத்தின் 78ஆவது பிரிவின்படி சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சித்தாளில் இடம் பெறுவதற்கு முன்னர் ஆகக் குறைந்தது 7 நாட்களுக்கு முன்னரேனும் அரச வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டும்.

2)அரச வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் குறைந்தபட்சம்  ஒருவாரத்தின் பின்னரே அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவேண்டும். இது முதலாவது வாசிப்பு எனப்படும்.

3) முதலாம் வாசிப்புக்கு பின்னர் உள்ள ஒருவார காலத்திற்குள் பிரஜைகள் எவரும் உயர் நீதிமன்றத்திற்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான மனு ஒன்றின் மூலம் மேற்படி சட்டமூலம் பற்றி கேள்வி எதனையும் எழுப்ப முடியும். அதே நேரம் அம்மனுவின் பிரதியொன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படுதலும் வேண்டும்

4) உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் இவ்வாறு வேண்டப்படும்போது உயர் நீதிமன்றத்தினால் அச்சட்டமூலம் தீர்மானிக்கப்படும் வரையில் அல்லது மனு சமர்ப்பிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று வார காலம் முடிவடையும் வரையிலும் அத்தகைய சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது.

5) உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்குள் தனது தீர்மானத்தை ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவிக்கவேண்டும்.

இதுதான் ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கான வழிமுறையாகும். இந்த வழிமுறை சிறுபாண்மை மக்களுக்குத்தான் பாதுகாப்பானது, ஏனென்றால் பெரும்பாண்மை சமூக பாராளுமன்றம் சிறுபாண்மையினருக்கு எதிரான சட்டங்களை இயற்றிவிடக் கூடாது என்பதனாலேயாகும்.
ஆனால் இங்கே மாகாணசபைகள் தேர்தல் சட்டதிருத்தம் சரியானதோ பிழையானதோ என்பதற்கு அப்பால், இந்த சட்டதிருத்தம் வழிமுறைகளை பின்பற்றாமல் காலையில் வந்து மாலையில் நிறைவேற்றப்பட்டது என்பதானது, எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை உண்டுபண்ணலாம்.

எது எப்படியிருந்தாலும், சட்டமூலம் நிறைவேற்றப்படும் விதம்பற்றிய சட்டம் இப்படி கூறுகிறது-80(3) சட்டமூலம் ஒன்று சபாநாயகரின் சான்றுரை எழுதப்பட்டதன் மேல் சட்டமாக வருகிறது. எத்தன்மையான  எவ் ஏதுவின் மீதும் நீதிமன்றம் அல்லது நியாய சபை எதுவும் அதன் செல்லுபடிபற்றி விசாரித்தலோ தீர்ப்பளித்தலோ அல்லது கேள்விக்உட்படுத்தலோ ஆகாது என அரசியலமைப்பின் 80(3) ஆம் பிரிவு கூறுகின்றது.

ஆகவே இங்கே கவணிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், ஏதோ ஒரு வகையில் பாராளுமன்றத்தினால் சட்டம் இயற்றப் பட்டால் அதனை நீதிமன்றமோ வேறு யாரோ கேள்விக்குட்படுத்த முடியாது என்றிருந்தாலும், இந்த சட்டம் வழிமுறைகளை பின்பற்றி நிறைவேற்றப்படவில்லை என்பதே கவணிக்கப்படவேண்டிய விடயமாகும்

இதனால் எதிர்காலத்தில் ஏதாவது சட்டங்கள் இந்த வழிமுறையை பின்பற்றி காலையில் வந்து மாலையில் சட்டமாக்கப்படுமாக இருந்தால், ஒரு பொதுமகனுக்கு இதன் மேல் கேள்வி எழுப்பவோ, அல்லது நீதிகேட்டு நீதிமன்றம் செல்லும் உரிமை இல்லாமல் செய்யப்படுகின்றது என்பதே ஆபத்தான உண்மையாகும்.

இந்த வழி முறையினால் தீடீரென இயற்றப்பட்ட சட்டம் பிழையானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே முன்னால் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள், இந்த சட்டம் உரிய வழிமுறையை பின்பற்றி நிறைவேற்றப்படவில்லை என்ற காரணத்தை வைத்துஉயர் நீதிமன்றத்தில்  அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக சொல்லி வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

உண்மையிலேயே இப்படியான வழக்கை சிறுபாண்மை இன மகன் ஒருவனே செய்திருக்கவேண்டும், காரணம் சிறுபான்மை இன மக்களுக்குத்தான் இந்த திடீர் வழிமுறை ஆபத்தானதாகும்.

ஆனால் சரத் என் சில்வா அவர்களின் கோரிக்கை நியாயமானது என்று கூறி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் சிறுபான்மையினரான எமக்குத்தான் அதன் மூலம் பாதுகாப்புகிடைக்கும், மாறாக இந்த திடீர் வழிமுறை சரியானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறினால் அது சிறுபாண்மை மக்களுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை கொண்டுவரலாம் என்பதே எங்கள் கருத்தாகும்.

ஆகவே, அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு இருந்த கேள்விகேற்கும் உரிமையை இந்த நல்லரசாங்கம் பறித்துவிட்டது என்பதை நமது மக்களும் அரசியல்வாதிகளும் கவணியாமல் இருப்பதென்பது அவர்களின் அறியாமையா? அல்லது இந்த அரசாங்கத்தின் மீது கொண்ட பாசமா? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
காலையில் வந்து மாலையில் நிறைவேறிய மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம்  காலையில் வந்து மாலையில் நிறைவேறிய மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டம் Reviewed by Madawala News on 10/25/2017 10:23:00 PM Rating: 5