Ad Space Available here

ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பம்


தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய
எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படும்; தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று ஆரம்பமாகின்றது.
செயற்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் தேசிய ஏர்பூட்டு விழா இன்று காலை கெக்கிராவ திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று முதல் 12ஆம் திகதி வரையான வாரம் உணவு உற்பத்தி புரட்சியின் ஆரம்ப வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 6 ஆம் திகதி தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் விவசாயிகள் தினமாக பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குதல், 2000 ஏக்கர் தென்னை மீள்நடுகை, 2017 ⁄ 2018 மகாவலி விவசாய திட்டத்தை பிரகடனப்படுத்தல், வீட்டுத்தோட்ட அபிவிருத்தி விசேட திட்டத்தை ஆரம்பித்தல், மகாவலி வலயத்தில் 2500 காணி உறுதிகளை வழங்குதல், மரநடுகை, புதிய விவசாய தொழில்நுட்ப பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல், இயற்கை உர உற்பத்தியை மேம்படுதுவதற்கான உபகரங்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் நாடுமுழுவதும் இடம்பெறவுள்ளன.

ஒக்டோபர் 07 ஆம் திகதி மாணவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கம்பஹா சியனே தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் 10,353 பாடசாலைகளை உள்ளடக்கியதாக பல்வேறு செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், தேசிய உணவு உற்பத்தி, நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தி, உணவு விரயத்தை தடுத்தல் ஆகிய மூன்று விடங்களிலான செயற்திட்டங்களை அமுல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 08 ஆம் திகதி கால்நடை வளர்ப்பு தினமாகும். அதன் ஆரம்ப நிகழ்வு பேராதனை தாவர மற்றும் மரபணு வள நிலையத்தில் இடம்பெறும். அதனோடு இணைந்ததாக பாற்பண்ணை அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு துறையின் வளர்ச்சிக்கான பல தேசிய திட்டங்கள் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும் இத்தினத்தில் துறைசார்ந்த குடும்பங்களின் வருமானங்களை அதிகரிப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பீ ஹரிசன் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் 09 ஆம் திகதி தொழில்முயற்சியாண்மை தினமாகும். வடமேல் மாகாண தலவில தேவாலயத்துக்கு அருகிலும், ஊவா மாகாண மகியங்கனை ஆதாஉல்பத்த கிராமத்திலும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ஆரம்ப கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்கள் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இத்தினத்தில் விவசாயத்துறை சார் இளம் தொழில் முயற்சியாளர்கள் இரண்டாயிரத்து 500 பேரை சலுகை கடன் திட்டத்தில் இணைத்துக் கொள்ளவிருப்பதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

ஒக்டோபர் 10 ஆம் திகதி மீன்பிடி தினமாகும். 200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை கல்லராவ மீன்குஞ்சு இனப்பெருக்க நிலையத்தை திறந்து வைத்து செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும். அதனோடு இணைந்ததாக 10 லட்சம் மீன்குஞ்சுகள் நன்னீர் நிலைகளில் விடுவிக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவிக்கிறது. விசேடமாக மலையக பிரதேச மக்களிடையே மீன் நுகர்வை அதிகரித்தல், வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.

ஒக்டோபர் 11 ஆம் திகதி அரச ஊழியர்கள் தினமாகும். இரத்தினபுரியிலுள்ள மாகாண சபை கேட்போர்கூடம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறும். இத்தினத்தில் அவர்கள் மத்தியில் தாவர கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன. சிறந்த உணவு பழக்கவழக்கங்கள் ஊடாக விரயத்தை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.


ஒக்டோபர் 12 ஆம் திகதி நீர் தினமாகும். தென் மாகாணத்திலுள்ள முருத்தவெல நீர்த்தேக்கத்துக்கு அருகிலும், எம்பிலிப்பிட்டிய ஊறுசிட்டாவௌ பிரதேசத்திலும் பிரதான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் 12 லட்சம் மகாவலி குடியேற்றவாசிகளை இந்த செயற்திட்டத்துக்கு அணிதிரட்டுவதற்காக மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மகாவலி வலயங்களில் மட்டும் இருக்கும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் நீர்ப்பாசன காணிகளை இந்த திட்டத்திற்காக பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஹாவலி வலயங்களை சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடிய திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பம் ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பம் Reviewed by Madawala News on 10/06/2017 12:22:00 PM Rating: 5