Ad Space Available here

வடகிழக்கை இணைத்து தனியலகு கோருவது முஸ்லிம்களுக்கு வேலிபோடுவதற்கு ஒப்பானது!
வடகிழக்கை இணைத்து தனியலகு கோருவது என்பது முஸ்லிம்களுக்கு வேலிபோடுவதற்கு சமமான ஒரு செயல்பாடு என தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகாண கொள்கைப்பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

இனி இலங்கை சுதந்திர பூமி என்பதை விட முஸ்லிம்களை வேட்டையாடும் கலவர பூமி என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியலகு கேட்பதன் ஊடாக அமைச்சர் ஹக்கீம் அவர்கள்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தானா? என்ற சந்தேகம் இப்போது அதிகரிக்கிறது.

கரையோர மாவட்டம் தந்தால் வடகிழக்கு இணைப்பிற்கு சம்மதம் என்று சின்னத்தனமாக சிந்தித்தித்துக் கொண்டிருக்கும் பிரதியமைச்சர் ஹரீஸ் இப்போது  நாளுக்கொரு, பொழுதுக்கொரு அறிக்கைவிட்டு தன்னையும் குழப்பி மக்களையும் குழப்புகிறார்.

ஏலவே பாராளுமன்றத்தில் வடகிழக்கு இணைப்பிற்கான இடைக்கால அறிக்கைக்கு சம்மதம் வழங்கிவிட்டு ஆளுக்காள் இப்படி அறிக்கை விட்டு மக்களை ஏமாற்ற முனைவதை எங்களால் அனுமதிக்க முடியாது.

வடக்குடன் கிழக்கை இணைத்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஒரு தரப்பாக கூட சிங்கள தமிழ்த் தலைவர்களால் பார்க்கப்படவில்லை 
சமாதான பேச்சுவார்த்தைகள் இதர ஏனைய சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்தை அவர்கள் தொடர்ந்து நிராகரித்தே வந்தனர்.

அதிஷ்டவசமாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்க முற்படுவது இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு ஒப்பானதாகும்.

கல்முனை கரையோர மாவட்ட விடயத்தை பொருத்தவரையில் அது முஸ்லிம் காங்கிரஸிற்கு சொந்தமான கோரிக்கை அல்ல என்பதை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் உண்மையில் 1978ம் ஆண்டு முன்னை நாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களின் ஆட்சிக் காலத்தில் மொறகொட  ஆணைக் குழுவினால் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய அரச கரும தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்காக  பரிந்துரை செய்யப்பட்ட ஒன்று, எனவே இதனை சிங்கள அரசாங்கமே அமுல்படுத்த வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த கரையோர மாவட்டத்தை எப்போது மு.கா தங்களுடைய அரசியல் கோசமாக எழுப்பினார்களோ, அப்போதிலிருந்தே சிங்கள இனவாதிகள் அதை முஸ்லிம்கள் தனிநாடு கோருவதாக எண்ணி பின்னால் வந்த அரசாங்கங்கள் வழங்கமால் தடுத்தார்கள். என்பதே உண்மை

 கரையோர மாவட்டம் என்பது முஸ்லிம்களுக்கான மாவட்டம் அல்ல, அது தமிழ் பேசும் மக்களுக்கான மாவட்டமே- ஆனால் முஸ்லிங்கள் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் அதிகமாக வாழுகின்ற காரணத்தால் அதை எமக்கு சாதகமாக பார்க்கிறோமே தவிர வேறில்லை.

அத்தோடு கரையோர மாவட்ட விடயத்துடன் வடகிழக்கு இணைப்பு பிரிப்பை இதனுடன் சம்மந்தப் படுத்துவது மகா தவறு,  உண்மையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அன்று தற்காலிகமாக வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெற்ற போதே மர்ஹூம் அஷ்ரப் அதை மிகவும் கடுமையாக எதிர்த்தார்.மட்டுமல்லாது அதனை பாராளுமன்றத்திலும் உரைத்தார்.

முன்னாள் ஜனாதிபதி பிரமதாச அவர்களிடம் மர்ஹூம் அஷ்ரப் முன்வைத்த மூன்று அம்சக் கோரிக்கையில் தென்கிழக்கு அலகு என்ற வாசகத்தையே மர்ஹூம் அஷ்ரப் உச்சரிக்கவில்லை மட்டுமல்லாது கரையோர மாவட்டத்தையும் கோரவில்லை.

1994ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியில் மர்ஹூம் அஷ்ரப் ஆட்சியை தீர்மாணிக்கும் (கிங் மேக்கராக) இருந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

 இரவோடு இரவாக சந்திரிக்கா அம்மையாருக்கு ஆதரவு வழங்கிய மர்ஹூம் அஷ்ரப் எதுவித ஒப்பந்தமும் இன்றி அம்மையாரை ஆட்சி பீடம் ஏற்றினார்.  நினைத்திருந்தால் மர்ஹூம் அஷ்ரப் அந்த நேரத்திலேயே கரையோர மாவட்டத்தை எழுதி வாங்கியிறுக்க முடியும். ஆனால் அவர் அந்த பொன்னான சந்தர்ப்பத்தை தவற விட்டார்.

இப்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் கூறுவதை போல் அஷ்ரப் தென்கிழக்கு அலகை கோரவில்லை.

 இப்போதுள்ளவர்களின் தவறான புரிதலை ஏனையவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இவர்கள் கருதுவது பிழையானது,

சந்திரிக்கா அம்மையாரின் 1997 ,2000 மாம் ஆண்டுகளின்  தீர்வுப் பொதியின் கதாநாயகனே மர்ஹூம் அஷ்ரப்தான்

அந்த தீர்வுத் திட்டத்தில் தற்காலிகமாக பத்து வருடங்களுக்கு வடகிழக்கு பிராந்தியம் இணைந்திருக்க பட வேண்டும் என்றும் பத்து வருடங்கள் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்ட மக்களிடத்திலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் ஏதோ ஒரு காரணத்தால் சர்வஜன வாக்கடுப்பு நடத்தப்படாமல் விடப்பட்டால் பத்து வருடங்கள் பூர்த்தியானவுடன் வடகிடக்கு மாகாணம் பிராந்தியங்களாக பிரிந்து வடக்கு மாகாணம் வேறாகவும் கிழக்கு மாகாணம் வேறாகவும் இயல்பாகவே பிரிந்து விடும் என்று மர்ஹூம் அஷ்ரப் அந்த தீர்வுத்திட்டத்தில் கேட்டிருக்கிறார்.

கரையோர மாவட்டம் தந்தால் கிழக்கை வடக்குடன் இணைக்க தயார் நிலையில் இருப்பவர்கள்  இந்த எனது கருத்துக்களுக்கு நிச்சயமாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மர்ஹூம் அஷ்ரப் அந்த தீர்வுத்திட்டத்தில் தென்கிழக்கு அலகு கேட்டிருந்தாரா?
அல்லது இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் மாகாண சபை கேட்டிருந்தாரா?

அங்கே அவர் கிழக்கு மாகாண மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என்றுதான் கேட்டு இருந்தார்.

ஆக முஸ்லிகளும், சிங்களவர்கள், பெரும்பான்மையான தமிழர்களும் வடக்கோடு இணைய மாட்டார்கள் என்று மர்ஹூம் அஷ்ரப் திட்டவட்டமாக நம்பி இருந்தார். மர்ஹூம் அஷ்ரப்பின் இந்தக் கோரிக்கையின் மூலம் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்றே விரும்பி இருந்தார்.என்பதை மர்ஹூம் அஷ்ரப்பின் பெயரை வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே வரலாற்றை திரிவு படுத்தி கரையோர மாவட்டம் என்ற குண்டுமணிக்காக கிழக்கு என்ற கண்மாணிக்கத்தை விற்றுவிடாதீர்கள்.

மர்ஹூம் அஷ்ரப்பின் பெயரை வைத்து எதை நீங்கள் கூறினாலும் இப்போதைய இளைஞர்கள் நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று என்ன வேண்டாம்.

வரலாறுகளை நாங்களும் கற்று வைத்திருக்கிறோம் தெரிந்தும் வைத்திருக்கிறோம்

இன்று நாட்டில் பௌத்த மேலாதிக்கம் அதே போல் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரழ்களை பின்பற்றும் இஸ்ரேலிய வாரிசுகள் இப்போது நாட்டின் இறைமையையும் ஜனநாயகத்தையும் கொலைசெய்கிறார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட வேண்டியவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என பகிரங்கமாக செயல்படுகிறார்கள் அகதிகள் முகாம்களைக் கூட இவர்கள் விட்டுவைக்கின்றார்கள் இல்லை இதுவரை எத்தனை பள்ளிவாயல்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான ஸ்தாபனங்கள் பற்றி எரிந்திருக்கிறது இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை..
மென்மேலும் இனவாதிகளை தூண்டி முஸ்லிம் இன அழிப்பிற்கு வழிவகுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் தமிழர்களின் தாயகமாக வடகிழக்கை இணைத்து அவர்களுக்கான தனித்துவ அடையாளத்துடன் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கான தனி அலகு கோரும் விடயம் உடுத்திருந்ததை அவிழ்த்து கொடுத்துவிட்டு கோவனத்திற்கு பிச்சை கேட்டு நிற்பதற்கு ஒப்பானதாகும்.
அவ்வாறே தனியலகு கிடைக்கப்பெற்றாலும் அது முஸ்லிம்களுக்கு எல்லையிட்டு வேலிபோடுகின்ற செயல்பாடாகவே அமையும், வடகிழக்கிற்கு வெளியில் இருக்கும் முஸ்லிம்களின் எதிர்காலத்தை கேள்விக்குற்படுத்தும் தூரநோக்கற்ற இந்த தனியலகு கோரிக்கை எதிர்வரும் காலங்களில் ரோஹிங்சா முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் பேரவலங்களைவிடவும் மிக மோசமான சூழ்நிலையை தோற்றுவிக்கும்( இலங்கை முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

எம்மைப் பொருத்த வரையில் வடக்கு வேறாகவும் கிழக்கு வேறாகவும் இருத்தல் வேண்டும்.  கிழக்கை சேர்ந்த தமிழரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ முதலமைச்சராவதில் எம்மிடத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை

கிழக்கு மாகாணத்தில் அதிகாரமுள்ள முஸ்லிம் முதலமைச்சர் இல்லாதுவிடின் பலம் பொருந்திய எதிர்க்கட்சி தலைவராவது இருத்தல் வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகவும் இருக்கிறது. மட்டுமல்ல கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கிறது.

இப்போது சம்பந்தன் ஐயா இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் தருவதாக கூறி வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவளிக்குமாறு அழைப்புவிடுக்கிறார் மறுபுறத்தில் மாவை சேனாதிராஜா அவர்கள் தனியலகை தங்கத்தட்டில் வைத்து தருவதாக கூறுகிறார். அதற்கான தேவை முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை என்பதை இவர்கள் இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்ல சம்பந்தன் ஐயா தருவதாக கூறும் முஸ்லிம் முதலமைச்சர் இறுதியும் அறுதியுமானது என்பதைக்கூட அறியாதவர்களா முஸ்லிம்கள் என்பதை சம்பந்தன் ஐயா புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கும் கிழக்கும் மாத்திரம் ஏன் இணைய வேண்டும் என்பதற்கான தேவை என்னவென்பதை விளக்க வேண்டும். அல்லது இணைவதால் முஸ்லிம்கள் அடையும் நன்மைதான் என்னவென்று கூறமுடியுமா? என்று சம்பந்த ஐயாவிடம் கேட்க விரும்புகிறேன்.

சம்பந்தன் ஐயா சொல்வதைப்போன்று அன்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் தென்கிழக்கு அலகைக் கோரவில்லை
முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அவர்களுடன் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது நிலத் தொடர்பற்ற தனியான முஸ்லிம்  மாகாணம், தென்கிழக்கு அலகு அல்லது  கரையோர மாவட்டம் பற்றி  கேட்டிருக்கவில்லை.

அன்று ஆட்சியை தீர்மானிக்கும் பேரம் பேசும் சக்தியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் அதனுடைய தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சந்திரிக்கா அம்மையாரை ஆட்சிக்கு கொண்டு வந்த ஒப்பந்தங்கள் ஏதாவது இருக்கிறதா? அதில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கரையோர மாவட்டம்,தென்கிழக்கு அலகு , நிர்வாக மாவட்டம் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என ஏதாவது ஒன்றை தலைவர் அஷ்ரப் கேட்டுள்ளாரா? என்பதை அமைச்சர் ஹக்கீம் அவர்களோ அல்லது வேறு ஒருவரோ ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என கேட்க விரும்புகிறேன்.

2000 ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ம் திகதி 
சந்திரிக்கா அம்மையார்,நீலம் திருச் செல்வம், ஜீ.எல்.பிரீஸ்
எம் எச்.எம் அஷ்ரப் போன்றவர்கள் வரைந்த சந்திரிக்காவின் தீர்வுத்திட்டத்திலாவது அஷ்ரப் அவர்கள் தென்கிழக்கு அலகு  என்ற விடயத்தை கோரியிருந்தாரா? 

நிச்சயமாக இல்லை தென்கிழக்கு அலகு என்ற வாசகத்தையும் அதனுடைய கருப்பொருளையும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவரே சந்திரிக்கா அம்மையார் தான்..
ஏனெனில் அஷ்ரப் வடக்கு கிழக்கு பிரிப்பை மாத்திரம் வழியுருத்தி இருந்தார். அவ்வாறு தென்கிழக்கு அலகு நிலத்தொடர்பு அற்ற முஸ்லிம் மாகாணம் ,கரையோர மாவட்டம் தொடர்பில் அஷ்ரப் கொள்கை ரீதியாக இருந்திருந்தால் ஏன் ரனசிங்க பிரமதாஸா அவர்களுடன் மர்ஹும் அஷ்ரப் இவைபற்றி பேசவில்லை? என்பதற்கான பதிலை தற்போதைய தலைவர் ஹக்கீம் மக்கள் மயப்படுத்த வேண்டும்.

எனவே முஸ்லிம் சமூகத்தை விற்று கருவறையில் இருக்கும் குழந்தைக்கும் அடிமைச் சாசணம் எழுதும் துரோகத்தனத்தை முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைவரும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்லாஹுவிடம் பொறுப்பு கூற வேண்டும் என கூறிவைக்க விரும்புகிறேன் என்றார்.
வடகிழக்கை இணைத்து தனியலகு கோருவது முஸ்லிம்களுக்கு வேலிபோடுவதற்கு ஒப்பானது!  வடகிழக்கை இணைத்து தனியலகு கோருவது முஸ்லிம்களுக்கு வேலிபோடுவதற்கு ஒப்பானது! Reviewed by Madawala News on 10/06/2017 09:54:00 PM Rating: 5