Yahya

நல்லாட்சியில் மெல்லக் கொல்லப்படும் முஸ்லிம் தேசியம்நாட்டில் சமீபத்தில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் தேசியத்தின் ஆதரவுடன் மத்தியில்
நல்லாட்சிஎன்னும் சுலோகம் தாங்கி அரசியல் அதிகாரத்திற்கு வந்துள்ள தேசிய அரசாங்கமானது முஸ்லிம் சமூகத்தை மெல்லக் கொல்லும் அரசியல் கொள்கையினை கடைப்பிடித்து வருகின்றது.இது எமது மக்களின் எதிர்கால இருப்புத் தொடர்பிலான பல்வேறான சந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும் சிவில் சமூகம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன்றைய நெருக்கடியான அரசியலில் எம் முன்னால் உள்ள பிரதான பிரச்சினைகளாக பின்வருவனவைகளை அடையாளப்படுத்தலாம்.

01. புதிய யாப்புருவாக்கல் சிந்தனையும் மறுக்கப்படும் எம்மவர் தனித்துவங்களும்

02. மாகாண சபை தேர்தலுக்கான புதிய தொகுதி பிரிப்பினை சாத்தியமாக்குவதற்கான புதிய எல்லை நிர்ணயம் 

03. முஸ்லிம்களை பெரும்பான்மையாக் கொண்ட கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பதற்கு விலைபோகும் முஸ்லிம் காங்கிரஸின் துரோக அரசியல்

இங்கு, புதிய யாப்புருவாக்கல் சிந்தனையைப் பொறுத்தமட்டில் அதில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவங்களை பாதுகாப்பது தொடர்பில் குறிப்பிடக் கூடிய ஏற்பாடுகள் ஏதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது விடயத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனது  நிலைப்பாட்டினை தெளிவாக முன்வைத்து சகோதர மக்களின் உரிமை தொடர்பில் அதீத முனைப்புடன் செயற்பட்டிருக்கின்றது. எனினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழிப்படுத்தும் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய யாப்பாக்கால் யோசனை தொடர்பில் எதுவித காட்டமான நிலைப்பாட்டினையும் முன்வைக்காமை கட்சியின் கையாளாகத் தனத்தை பறைசாற்றுகின்றது

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக தற்போது மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பிலான கருத்தாடல் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைபெறும் இத்தருணத்தில் எமக்கான கட்சிகள் இதுவிடயத்தில் மக்களை தெளிவுபடுத்தி முஸ்லிம் சமூகத்தின் அபிப்ராயத்தை அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை என்கின்ற ஆதங்கம் பலரிடம் காணப்படுகின்றது

தவிர, கிழக்கு மாகாணத்தை வடமாகாணத்துடன் இணைத்து கிழக்கு முஸ்லிம்களை இணைக்கப்படும் வடகிழக்கில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக மாற்றுகின்ற கேவலமானதும் துரோகம் நிறைந்ததுமான மூர்க்கமான அரசியலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைமை மேற்கொண்டு வருவது அவர் தொர்பிலான பலத்த சந்தேகங்களை எம்மவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

கட்சியின் சமகால தலைமை புலம் பெயர் சமூகத்திடம் விலைபோய்விட்டார் என்னும் ஒரு கருத்தாடலும் பரவலாக இடம்பெற்று வரும் இத்தருணத்தில் முஸ்லிம்கள் மிகவும் கவனமாக காய் நகர்த்த வேண்டிய நெருக்கடியான அரசியலுக்குள் வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

இதுவிடயத்தில் கட்சியின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் எமது சுயநிர்ணத்தினை பாதுகாப்பதில் சிவில் சமூக பிரதிநிதிகள் காத்திரமாக பங்காற்ற வேண்டும். வழிப்படுத்தும் குழுவினால் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவது தொடர்பில் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவ்விடைக்கால அறிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கியுள்ள பின்னிணைப்பிலும் கிழக்கை வடக்குடன் இணைப்பது தொர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்திருந்த போது அதனை மீட்க வேண்டும் என்று முழக்கமிட்ட ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ்  தற்போது இணைக்கப்படுவது தொடர்பில் அதீத சிரத்தை எடுப்பதானது அக்கட்சி தற்சமயம் காலாவதியாகியுள்ளது என்பதை புடம்போடுவதாய் உள்ளது

எமக்கான கட்சி சமீப காலமாக ஆட்சியுள்ளவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவே செயற்பட்டு வருகின்றது என்பதனை அதன் சமகால அனுபவங்கள் குறித்து நிற்கின்றது. குறிப்பாக அரசியலமைப்பிற்கான 18 ஆவது திருத்த்த்திற்கான ஆதரவு, திவிநெகும சட்டமூலத்திற்கான ஆதரவு, மாகாண சபை தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கான ஆதரவு என்று தொடங்கி தற்போது கிழக்கை கூட்டமைப்பிடம் விலைபேசி அதற்கான ஆதாயத்தையும் புலம் பெயர் சமூகத்திடம் பெற்று தற்போது கிழக்கு இணைக்கப்படுவதற்கும் ஆதரவு வழங்கி வருகின்றது

இதுவிடயத்தில் கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகம் விழித்தெழ வேண்டும். எமக்கான தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையோ அதிகாமோ முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமைக்கு  இல்லை என்பதனை நாம் உணர்த்த வேண்டும். இவ்விணைப்பினை மக்கள் மயப்படுத்தி கட்சியின் தற்போதைய தலைமையை கட்சியை விட்டும் விரட்டியடிக்க வேண்டும்.  

வாருங்கள்

கிழக்கு கிழக்காகவே இருப்பதனை உறுதிப்படுத்துவோம்

இணைந்த வடகிழக்கில் நாம் தொலைத்த உரிமைகளை தேடுவதனை விடுத்து தனித்த கிழக்கிலங்கையில் எமக்கான உரிமை அரசியலை விட்ட புள்ளியில் இருந்தே தொடக்குவோம்

சகோதர சிறுபான்மை இனத்திற்குள் எமது இனத்தை சிறுபான்மையாக்க முனைப்புடன் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமையை கிழக்கிலங்கையை விட்டும் விரட்டுவோம்.

கிழக்கு மாகாணத்தை வடக்குடன் இணைப்பது தொடர்பிலான காங்கிரஸின் நச்சுக் கொள்கையினை மக்கள் மயப்படுத்தி தேசிய முஸ்லிம்களினதும் கிழக்கு வாழ் முஸ்லிம்களினதும் மூதூர் முஸ்லிம்களினதும் கருத்துக்களை வீரியத்துடன் வெளிக் கொண்டுவருவதற்கான பகிரங்க அழைப்பாக இதனை பதிவிட்டுள்ளேன்.

ஜனாப்.பீ.எம்.சப்ரி (ஆசிரியர்)
அரசியல் விஞ்ஞான விசேட துறை 
இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
நல்லாட்சியில் மெல்லக் கொல்லப்படும் முஸ்லிம் தேசியம் நல்லாட்சியில் மெல்லக் கொல்லப்படும் முஸ்லிம் தேசியம் Reviewed by Madawala News on 10/06/2017 10:01:00 AM Rating: 5