Ad Space Available here

ஏன் மாட்டு விசயத்தில் ஜனாதிபதியே தலையிட வேண்டும்?


கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாடு அறுப்பு மற்றும் அதனைக்கொண்டு
செல்லுதல் பற்றிய நடை முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன...

அப்போது மஹிந்த அணியில் அசையாது தொங்கிக்கொண்டிருந்த சோனக அரசியல்வாதிகள் செய்த பிரச்சாரம் எல்லாம் மைத்ரி ஜனாதிபதியானால் மாடறுக்க தடை வரும் என்பதுதான்...

பின்னர் அந்த பிரச்சார நாயகர்கள் மைத்ரி ஜனாதிபதியானதும் ஓடிப்போய் ஒட்டிக்கொண்டதும் அவர் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் ஆகியும் இன்னும் நாம் மாட்டிறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருப்பதும் வேறு கதை!


இப்போது மாடுகளை transport பண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளை நடை முறைப்படுத்த போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஏன் மாட்டு விசயத்தில் ஜனாதிபதியே தலையிட வேண்டும்?

காரணமிருக்கிறது. 

இனவாதிகள் அதனை வேறுதிசைகளை நோக்கி அரசியலாக்க பார்க்கிற இந்த தருணத்தில் நாட்டின் ஜனாதிபதியே அதைப்பற்றி பேசி புதிய ஒழுங்கு முறைகளை கொண்டு வர முயல்வது வரவேற்கத்தக்கது.

இலங்கையில் இரண்டாவது சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கென்று பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கிற தனித்துவ உரிமைகள் ஏராளம்.

தனியான திருமணச்சட்டம் தொடக்கம், ‘இத்தா’விடுமுறை என வருகிற பெரிய வரிசையில் மாடறுப்பும் அதனை உண்பதற்கான உரிமையும் நமக்குண்டு.

பல்லின சமூகங்கள் வாழுகிற இலங்கை போன்ற நாட்டில், மாட்டை கடவுளாக மதித்து வழிபடுகிற இனங்கள் வாழுகிற நாட்டில் 10% ஆகிய நாம் அதே மாட்டை அறுத்து உண்கிறோம் என்றால் அதற்கென்றுள்ள சில வரைமுறைகளை, ஒழுங்குகளை பேணவேண்டும்!

இஸ்லாமும் அதனைத்தான் சொல்கிறது.

இஸ்லாம் காட்டிய வழி முறைகளை மீறி நடக்கிற போது இஸ்லாமல்லாதவர்கள் நமக்கு ஒழுங்கு முறைகளை சொல்லித்தர வேண்டிய நிலை ஏற்படும்!

நாம் இந்த விடயத்தில் காட்டிய அசமந்தத்தனங்கள் என்ன?

நாம் எப்போதெல்லாம் அந்த ஒழுங்குகளை மீறினோம் என்பது நீண்ட பட்டியல்!

ஏசி பஸ்ஸில் மாடு கடத்திய வரலாறுகளும் உண்டு.

ஒரு பள்ளிவாயல் வளவில் மாடுகளை அறுத்து அதனை இரத்தமும் சதையுமாக மாற்றுமத மக்கள் பார்க்கும் படி கொண்டு சென்றதில் ஆரம்பித்த பகை ஈற்றில் பொது பல சேனாவை ஏவி விட்டு அதே பள்ளிக்கு கல்லடிக்க வைத்ததில் முடிவுக்கு வந்த சம்பவங்களில் நான் நேரடி சாட்சியாக இருந்திருக்கிறேன்.

ஆகவே இவ்வாறான sensitive ஆன விடயங்களில் black and white பார்வையினை தவிர்த்து முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் நிதானமாக சிந்திக்கவேண்டும்.

நமது அரசியல் உரிமைகள் பட்டப்பகலில் அண்மையில் பாராளுமன்றில் கொள்ளை போன போது மூச்சே விடாமலிருந்தவர்கள் எல்லாம் மாட்டை பற்றி கதை எழுந்ததும் மோட்டார் சைக்கிளின் எக்ஸிலேட்டரை முறுக்கி கொண்டு ஓடி வருகிறார்கள்!

எனக்கு அது திசை தெரியாத மாட்டுப்பட்டிகளின் வருகை போலதான் தெரிகிறது.

ஆகையால் கறுப்பு வெள்ளை பார்வை தவிர்த்து இவ்வாறான உணர்வு பூர்வமான பிரச்சினைகளை அறிவு பூர்வமாக அணுகவேண்டும்.

உணர்ச்சிபூர்வமாக அணுக வெளிக்கிட்டால் அது இன்னும் விஸ்வரூபமெடுக்கும்.

கோடிக்கணக்கில் முஸ்லிம்கள் வாழும் பக்கத்து நாட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தாலே மோடி கொல்கிறான்.

நமக்கு மாடு திண்பதில் இதுவரை தடை ஏதுமில்லை.

அப்படி வருமென்றால் போராடுவோம்.

- முஜீப் இப்ராஹிம்-
ஏன் மாட்டு விசயத்தில் ஜனாதிபதியே தலையிட வேண்டும்? ஏன் மாட்டு விசயத்தில் ஜனாதிபதியே தலையிட வேண்டும்? Reviewed by Madawala News on 10/28/2017 03:58:00 PM Rating: 5