Yahya

"நெஞ்சறைக்குள் ஓர் அற்புதம்". இருதய சத்திரசிகிச்சை அனுபவத்தில், நம் உடலுக்குள் துடிக்கும் அற்புதத்தை பற்றி Dr. ரயீஸ் எழுதிய ஒரு பகிர்வு.


 (Dr.Rayees Musthafa வின் எனது டயரியின் மறுபக்கம் என்ற நூலிலிருந்து...) 
ஆறு வருடங்களுக்கு முன்னால் மருத்துவக் கல்லூரியின் கடைசி வருட மாணவனாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
சென்றிருந்தேன். அன்றிரவு 7.00மணி... கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு 34 வயது நிரம்பிய அந்த மனிதனின் உடைந்து போன இதயம் சற்று கூடுதலான வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது. 

ஆம், அடுத்த நாள் காலை அவனது இதயத்தில் ‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கான ஏற்பாடுகள் 34ம் இலக்க வாட்டில் நடைபெற இருக்கிறது. அந்த மனிதனின் அதிகரித்த இதயத்துடிப்புக்கு அதுதான் காரணம். இரவு 10.00 மணிக்கு பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. சத்திரசிகிச்சைக்காக அவரை முழுமையாக மயக்க நிலைக்கு உற்படுத்த வேண்டியிருந்ததாலேயே அந்த உத்தரவு. 

இல்லையெனில் மயக்கிய பின் இரைப்பையில் இருக்கும் உணவு மேலெழுந்து நுரையீரலுக்குள் சென்று நியூமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்த கூடும். எனவே இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க  வேண்டியது சத்திரசிகிச்சை செய்யுமுன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் ஆயத்தங்களில் முக்கியமான ஓர் அம்சம். அந்த நோயாளியின் இரவு அரைகுறைத் தூக்கத்திலும் பசியிலும் கழிந்து கொண்டிருந்தது. 

அந்த மனிதன் அதிகமாக பேசவும் விரும்பவில்லை. எதையோ இழந்தவன் போல் யோசித்துக் கொண்டிருந்தான். தான் பயப்பட வில்லை என்று எங்களிடம் சொல்லிக்கொண்டாலும் அவனின் நாடித்துடிப்பு வேகம் அவனது உண்மை நிலையை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. காலை 7.00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக சத்திரசிகிச்சைக் குறிய வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.


நாங்கள் ஒபரேசன் தியேட்டரில் அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தோம். சாதாரண சத்திரசிகிச்சை போலல்லாமல் ஏற்பாடுகள் தடல்புடலாக இருந்தது. ஒபரேஷன் செய்யும் மேசைக்குப் பக்கத்தில் ஓர் உபகரணம் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவ மாணவனாக முதன்முதலில் அதனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த உபகரணம் ஒரு காரியாலய மேசையின் அளவு பெரியதாக இருந்தது.

அதுதான் Heart Lung Machine எனப்படும் ‘செயற்கை இதயம்’ அந்த உபகரணத்தை இயக்க பயிற்சி பெற்ற இருவர்!! அவ்வளவு பெரிய உபகரணம் ஆயிரமாயிரம் ஏற்பாடுகளுடன் சில மணிநேரங்கள் செய்யும் வேலையை, எமது நெஞ்சறைக்குள் உள்ள இதயம் எவ்வளவு அற்புதமாக செய்கிறது. அந்த உபகரணம் அவ்வளவு பெரியதாக இருந்தாலும் இதயத்தின் தன்னியக்க அசைவுகளை அதனால் செய்ய முடியாதிருந்தது. ஆனால் மனிதனின் வாழ்நாள் முழுவதும் தன்னியக்க முறை மூலம் ஒரு நாளைக்கு 7,200 லீற்றர் இரத்தத்தை பாய்ச்சுகின்ற அந்த அற்புத உறுப்பு இதயம் இருக்கும் இடமோ நெஞ்சறையுள் ஒரு கைப்பிடி அளவு பிரதேசம்தான். 

எவ்வளவு அற்புதமான அல்லாஹ்வின் படைப்பாற்றல்.! சுபஹானல்லாஹ்’!! அது தெட்டத்தெளிவாக அந்த ஒபரேஷன் தியேட்டரில் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது. “உங்களுக்குள்ளேயே அத்தாட்சிகள் இருக்கின்றன” என்ற அல்குர்ஆனின் வசனம் என் இரத்தத்தோடு சேர்ந்து எனது கண்களை நனைத்துக் கொண்டிருந்தது. அந்த உபகரணத்தோடு இன்னுமொரு பகுதி பொருத்தப்பட்டது. அதில் மோட்டார் வாகனங்களில் உள்ள ரேடியேற்றர் போன்ற அமைப்புள்ள ஒரு பகுதி பொருத்தப்பட்டிருந்தது.


நுரையீரலுக்கு பதிலாக பொருத்தப்படும் செயற்கை நுரையீரல்தான் (Artificial Lung) அது! அந்த நுரையீரல் ஒன்றின் பெறுமதி 2௦,௦௦௦ ரூபாய் என்று சொன்னார்கள். 

அவ்வளவு பெறுமதியான அந்த நுரையீரலை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதாம்: மீண்டும்புதிய ஒன்று மாற்றிக்கொள்ள வேண்டுமாம். இவ்வாறு ஒரு நாளைக்கு எமது நுரையீரல் செய்யும் வேலையை ஓர் இயந்திரம் செய்வதற்கு 2 இலட்சத்து 4௦ ஆயிரம் ரூபாய்கள் தேவைப்படும் என்பதை உணர்ந்து கொண்டபோது அல்லாஹ்வின் அற்புதமான படைப்பிற்கு முன்னால் எவ்வாறு நாம் நன்றிகெட்டவர்களாக வாழ்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது. இப்படிப் பல ஏற்பாடுகளுக்கு மத்தியில் அந்த நோயாளி கொண்டுவரப்படுகிறார்.

மருத்துவ மாணவர்களோடு சேர்ந்து 10 பேர் கொண்ட வைத்தியர் குழு சத்திர சிகிச்சையை ஆரம்பித்தது. 

3 பேர் கொண்ட குழு அந்த நோயாளியை மயக்கி ஒட்சிசன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 பேர் வலது காலிலிருந்து பைபாஸ் செய்வதற்கான நாடியை உரித்தெடுத்துக்கொண்டிருந்தனர். மற்றைய நான்கு பேரும் நெஞ்சறையைப் பிளந்து இதயத்தை நெருங்கிக்கொண்டிருந்தனர். விலா எலும்புகள் பிளக்கப்பட்டு நெஞ்சறை விரிக்கப்பட்டது.


நெஞ்சுக்குள் இருக்கும் உருப்புக்களின் காவல் அரண்கள் திறக்கப்பட்டன.  உள்ளே இதயத்திற்கென்று தனியாக இன்னுமோர் உறை (Pericardium) . அந்த உறையும் திறக்கப்பட்டது. அதற்குள் அற்புதமான அந்த இதயம் எந்த சலனமும் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்தது. எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.

அவ்வளவு அற்புதம் அந்தப்படைப்பு!. உலகில் இருக்கும் ஒவ்வொரு நாத்திகனையும் காதைப்பிடித்து ஒபரேஷன் தியேட்டருக்குள் இழுத்து வந்து இந்த அற்புதத்தை நேரடியாக காட்டவேண்டும் என்ற ஓர் உணர்வு எனக்குள் பீறிட்டு வந்தது. துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தில் ஒபரேஷன் செய்ய முடியாது. இதயத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அதற்காக ஓர் ஊசிமருந்து இதயத்தசைக்குள் ஏற்றப்பட்டது.

உடனடியாக இதயம் செய்யும் வேலை Heart Lung Machine என்ற அந்த உபகரணத்திற்கு மாற்றப்பட்டது. இதயம் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இதயத்தின் நாடியில் கொலஸ்ட்ரோல் படிவுகளால் ஏற்பட்ட இரத்த ஓட்டத்தடை அடையாளமிடப்பட்டது. காலிலிருந்து உரித்தெடுத்த நாடியை இதயத்தின் தடைப்பட்ட நாடியின் இருபுறத்திலும் இணைத்து இரத்த ஓட்டத்தடை பைபாஸ் செய்யப்பட்டது. ஆம்,நோயுற்றிருந்த,இரத்த ஓட்டம் தடைப்பட்டிருந்த அந்த இதயத்தின் சத்திர சிகிச்சை 6 மணிநேரத்தில் முடிவுக்கு வந்தது. 

முடிவில் மீண்டும் இதயத்திற்கு ஓர் ஊசிமருந்து, சற்று இளைப்பாறிய அந்த இதயம் மீண்டும் கம்பீரமாகத் துடிக்க ஆரம்பித்தது. Heart Lung Machine இல் இருந்து இரத்த ஓட்டம் மீண்டும் இதயத்தினுள் கொண்டுவரப்பட்டது. உடைக்கப்பட்ட இதயத்தின் உறை மீண்டும் பொருத்தப்பட்டு, காவல் அரண், நெஞ்சறை எலும்புகள் மீண்டும் பொருத்தப்பட்டதும் அந்த மனிதனின் நினைவு மீண்டும் பெறப்பட்டது. எவ்வளவு அற்புதம்! காயங்களை சுமந்துகொண்டு அந்த இதயம் மீண்டும் கம்பீரமாய்த் துடித்துக்கொண்டிருந்தது.


அதற்கு எல்லாம் வள்ள அல்லாஹ் அவ்வாறுதான் கட்டளையிட்டிருக்கின்றான்.; அது செயற்படுகிறது. ஆனால் நாங்களோ அல்லாஹ்வுக்கு நனறியுடையவர்களாக அவன் கட்டளைப்படி செயற்படுகிறோமா?. “அவனே உங்களுக்கு கேள்விப்புலனையும் பார்வையையும் உள்ளங்களையும் அமைத்தான். எனினும் நீங்கள் சிறிதளவே நன்றி செலுத்துகிறீர்கள். ஸூரத்துஸ் ஸஜதா : 32)
"நெஞ்சறைக்குள் ஓர் அற்புதம்". இருதய சத்திரசிகிச்சை அனுபவத்தில், நம் உடலுக்குள் துடிக்கும் அற்புதத்தை பற்றி Dr. ரயீஸ் எழுதிய ஒரு பகிர்வு. "நெஞ்சறைக்குள் ஓர் அற்புதம்". இருதய சத்திரசிகிச்சை அனுபவத்தில்,  நம் உடலுக்குள் துடிக்கும் அற்புதத்தை பற்றி Dr. ரயீஸ் எழுதிய ஒரு  பகிர்வு. Reviewed by Madawala News on 10/20/2017 08:40:00 AM Rating: 5