Ad Space Available here

ஏன் தேர்தல்கள் பிற்போடப் படுகின்றன?


அஷ்கர் தஸ்லீம்-

ஜனாபிமானம் கொஞ்சம் கொஞ்சம் குறைவடைந்து வருவதனால், ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில்
நடாத்தினால், தான் தோற்றுவிடுவேனோ என்ற பீதிதான், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, உரிய காலத்துக்கு முன்னமே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தத் தூண்டியது.

இதே பீதியை இப்போதைய கூட்டரசாங்கத்தின் கட்சிகளும் உணரத் தொடங்கியுள்ளன. ஆனால், இவர்கள் தேர்தலை நேரகாலத்துடன் நடாத்துவதற்குப் பதிலாக, எந்த வழியிலேனும் தேர்தல்களை பிற்போடவே முயற்சிக்கின்றனர்.

உடனடியாக நடாத்தப்பட வேண்டியுள்ள மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால் அதற்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று அனைத்து தேர்தல்களுமே, இப்போதைய அரசாங்கத்துக்கு சவால்களாகவே உள்ளன. இந்த சவால்கள் உருவாகியதற்கான காரணம் மிகத் தெளிவானது. அதாவது, ஆட்சி;க்கு வருமுன் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையாலேயே இந்த நிலை உருவாகியுள்ளது.

அதிகாரத்திலிருப்பவர்களின் மோசமான பக்கங்களை விமர்சித்து, தம்மிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள். எப்படியெல்லாம் நாட்டை முன்னேற்றிக் காட்டுகிறோம் என்பதைப் பார்ப்பீர்கள் என்றுதான், பொதுவாக அனைத்து எதிர்க்கட்சிகளும்போல் சொல்கின்றன. வரலாறு நெடுகிலும் இதனைத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம். இப்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வருமுன்னும் இதே பாணியைத்தான் பின்பற்றியது.

ராஜபக்ஷவினரின் ஊழல், அடக்குமுறைகளினால் துவண்டு போயிருந்த மக்களுக்கு, அவற்றிலிருந்து விடுதலை தேவைப்பட்டிருந்தது. ஊழல், அடக்குமுறை என்பதற்கு அப்பால், நாட்டில் மீண்டுமொரு இனவாத யுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கி ராஜபக்ஷவினரின் ஆசிர்வாதத்தைப் பெற்ற கும்பல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே, இனியும் பொறுமையாக இருக்க முடியாது என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருந்தனர்.

அப்போதுதான் உரிய காலத்துக்கு முன்பே ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டிருந்த சோபித தேரர் தலைமையிலான குழுவும், பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி, ராஜபக்ஷவினரை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது. இந்தப் பின்புலத்தில்தான், மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, இப்போதைய ஆளும் தரப்பு, அதாவது அய்க்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் கட்சிகள், சு.க.வின் மைத்திரிப்பு தரப்பு ஆகியன பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கின. முதன்மையான வாக்குறுதிகளாக, ராஜபக்ஷவினரின் காலத்தில் ஊழல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுக்கொடுத்தல், இனவாதத்தை ஒழித்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

நான் ஏன் இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால், இந்த வாக்குறுதிகளில் எதனையுமே இந்த அரசாங்கம் திறன்படச் செய்யவில்லை. வெறுமனே கண்துடைப்புக்காக மாத்திரம் ஊழல்களில் ஈடுபட்ட சிலரை கைது செய்து, மீளவும் வெளியே விடுவதாகவும், அவ்வாறு கைது செய்கின்றபோது சிறைகளில் சுகபோக வசதிகளை ஏற்பாடு செய்வதாகவுமே இந்த அரசாங்கம் இருக்கின்றது. இனவாதத்தை ஒழிப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது மீளவும் இனவாதிகள் மீது மென்மையான போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். புதிய அரசியலமைப்பு குறித்த நம்பிக்கையும் அவ்வளவு நல்லதாக இல்லை.

இப்படியிருக்கும்போது, அவசரமாக நடாத்தப்பட வேண்டிய தேர்தல்களை நடாத்தினால், யார்தான் ஆளும்தரப்புக்கு வாக்களிப்பார்கள்?. ஆம், இந்தக் கேள்வியைத்தான் ஆளும் தரப்பிலுள்ளோரும் தம்மிடம் கேட்டுக்கொள்கின்றனர். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது, மீளவும் மக்கள் தமக்கு தேர்தல்களில் வாக்களிக்கப்போவதில்லை என்பதை அவர்கள் நன்கு உணர்;ந்துள்ளனர். அந்தப் பீதிதான் எந்த வழியிலேனும் தேர்தல்களை பிற்போடச் செய்துள்ளது.

இந்த நாட்டு மக்கள் தம் உயிரைப் பணயம் வைத்து, அதிகாரத்துக்கு கொண்டு வந்த அரசாங்கம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாமல், இப்படித் தேர்தல்களைப் பிற்போட்டு எதனைச் சாதிக்கப் பார்க்கின்றது? ஒருவேளை இப்போது அவசரமாக நடாத்தப்பட வேண்டிய மாகாண சபை, உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் இரண்டு வருடங்கள் தள்ளி நடாத்தப்பட்டாலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அப்போதும் மக்கள் இந்த ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள்.

எனவே, இந்த ஆளும் தரப்பு தேர்தல்களைப் பிற்போட்டு, ஒரு தற்காலிக இன்பத்தையே அனுபவிக்கின்றது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதபோது, இப்போது தேர்தல்களை நடாத்தினாலும் சரி, காலம் தாழ்த்தி நடாத்தினாலும் சரி, விளைவு ஒன்றுதான். அது தோல்விதான். இந்த எளிய சமன்பாட்டை ஏன் இந்த அரசாங்கம் புரிந்துகொள்ளாமல் நடக்கின்றது? அல்லது புரிந்தும் எதுவும் செய்ய முடியாமல் திண்டாடுகின்றதா? என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றோம்.

பொது மக்கள் என்ன மாதிரியான நிலைப்பாட்டில் இருந்தாலும், அரசியல்வாதிகள் எப்போதும், பொது மக்களின் அபிலாசைகளை முழுமையாக நிறைவேற்றும் அளவுக்கு செயற் சுதந்திரம் படைத்தவர்கள் அல்ல என்பதே யதார்த்தம். ஏனெனில், இப்போது அரசியலை சுகபோகங்களும், கொந்தராத்துக்களும், 'பைல்'களுமே தீர்மானிக்கின்றன. இதனைத்தான் மஹிந்த ராஜபக்ஷ, அரசியல்வாதிகளின் 'பைல்'கள் தன்னிடம் இருப்பதாக ஒரு தடவை சொல்லியிருந்தார். சுகபோகங்களையும், கொந்தாராத்துக்களையும் வழங்கி மடக்குவதுபோன்றே, ஏற்கனவே இழைத்த குற்றங்களதும், ஊழல்களதும் 'பைல்'களைக் காட்டி அச்சுறுத்தியும் மடக்கப்படுகிறார்கள் அரசியல்வாதிகள்.

இப்படியான யுகத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எந்த அரசியல்வாதியால்தான் நிறைவேறற் முடியும்? ஒருவேளை வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றால், சுகபோகங்கள், கொந்தராத்துக்கள், 'பைல்'கள் என்று எந்த வழிமுறையின் மூலமும் அவர்கள் மௌனிகளாக்கப்படலாம். இதுதான் இன்று அரசியல் களத்தில் நடைபெறுகின்றது. எனவே, 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும், அரசியல்வாதிகள் நிறைவேற்றுவார்கள் என்று வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.

இங்குதான் சிவில் சமூகத்தின் எழுச்சி, வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான நிபந்தனையாக்கப்படுகின்றது. சிவில் சமூகம் முழு வீச்சுடன் இயங்க ஆரம்பிக்கும்போதுதான் எதனையும் செய்து முடிக்கலாம். இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டு வந்த, இந்த நாட்டு மக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்த வண்ணமே இருக்க வேண்டும். தேர்தல்களில் வாக்களித்து விட்டு சும்மாந்து இருந்துவிடக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் முறையாக நடந்துகொள்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

சரி, நாம் பிரதான தலைப்பிற்கே வந்து விடுவோம். தேர்தல்களைப் பிற்போடுவது என்பது இந்த நாட்டின் இறைமைக்கு எதிரான செயற்பாடாகும். இந்த நாட்டின் இறைமை மக்களிடமே உள்ளது. அது 'வாக்குரிமை' என்ற பலமான ஆயுதத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்குரிமையை தேர்தல்களில் பயன்படுத்த வேண்டும். தேர்தல்களுக்கான காலங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில், தேர்தல்களைப் பிற்போட்டு, இறைமையில் கை வைக்கும் வேலையையே அரசாங்கம் செய்ய எத்தனிக்கின்றது. இது முற்றுமுழுதாக இந்த நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும். இந்த செயலுக்குத் துணைபோகின்றவர்களை என்ன பெயர்கொண்டு அழைப்பதென்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

நாம் இந்தத் தலைப்பில், இலங்கை முஸ்லிம் அரசியலையும் சற்றுத் தொட்டுப் பேச வேண்டியிருக்கின்றோம். ஏனெனில், ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் சமூகத்தின் பாதுகாவலளர்கள் போன்று கருத்துக்களையும் அறிக்கைகளையும் வெளியிடுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், முடிவெடுக்கின்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தெளிவாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடும் சட்டமூலத்துக்கு கிழக்கு மாகாண சபையும் ஆதரவாக வாக்களித்திருந்தது. இதனை நியாயப்படுத்தி ஊடகங்களிடம் பேசியிருந்தார் கிழக்கு முதல்வர். இந்த நாட்டு மக்களின் வாக்குரிமைக்கே வேட்டு வைக்கும் இவ்வாறான அநியாயங்களுக்கு துணைபோகின்றமை, முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நல்லதல்ல. நம் தலைமுறையும், எதிர்வரும் தலைமுறைகளையும் இதனை மன்னிக்குமா? என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். நாளாந்தம் பல்வேறு வழிமுறைகள் ஊடாக ஏமாற்றப்படுகிறார். இது இனியும் தொடரக் கூடாது. தேர்தல்களைப் பிற்போட்டு மக்களின் வாக்குரிமையில் கை வைப்பதாக இருந்தாலும் சரி, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதாக இருந்தாலும் சரி, சிவில் சமூகத்தின் தொடர்ந்தேர்ச்சையான செயற்பாடுதான் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பாயச் செய்யும். சிவில் சமூக செயற்பாட்டை பலப்படுத்துவோமாக!.
ஏன் தேர்தல்கள் பிற்போடப் படுகின்றன? ஏன் தேர்தல்கள் பிற்போடப் படுகின்றன? Reviewed by Madawala News on 10/17/2017 10:28:00 PM Rating: 5