Yahya

கூர்மையடைந்து வரும் முஸ்லிம் விரோதப் போக்கு.


உலகம் பூராகவும் மனித சமூகம் இன, மத, மொழி முதலான அம்சங்களுடன் பல பாகங்கலிலும் செறிந்தும் சிதறியும் வாழ்வதை
அறிவோம்.

இதன் அடிப்படையில் நமது நாடு பெளத்த பெரும்பான்மை மக்களுடன் ஏனைய இனங்களும் வாழும் நாடாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

இப்பின்னணியில் நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள தறுவாயில் யுத்தத்தின் பின்னரான போக்குகளை நோக்கும்போது இனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்து இனவாதம் , மதவாதம் பெருந் தேசியவாதம் கூர்மையடைந்து செல்லும் ஆபத்துமிக்க போக்கை காணலாம்.

இதனை தடுத்து நிறுத்துவதென்பது இலகுவான காரியமல்ல. இந்த இனவாதம் இரண்டாவது சிறுபான்மையாகிய முஸ்லிம்களை நோக்கி கூர்மையடைந்து முஸ்லிம் விரோதப் போக்காக பரிமாணமுற்றுள்ள நிலையில் சிறு தீப்பொறி கூட பெருந்தீயாக உருமாறலாம் என்ற அச்சமும் பீதியும் முஸ்லிம் சமூகத்தை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது.

ஆனால் இப்பொறிக்குள் இருந்து மீள்வது தொடர்பான எதுவித பொறிமுறையொன்று இன்றி சமூகம் நகர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அச்சமிக்க சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றது.

இதனால் சமூகத்தின் தனிமனித சமூக வாழ்வொழுங்கு மறு பரிசீலிக்கப்பட்டு சீர்திருத்தமடைய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது என்றால் மிகையாகாது.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் குறிப்பாக நாளாந்த அலுவல்களில் மாற்றங்கள், முன்மாதிரிகளை வேண்டி நிற்கின்றது. சமூகத்தின் வாழ்வி யலில் ஒழுங்கில் சமூக தனிமனித நடத்தைகளில்
மாற்றங்கள் ஏற்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு சமூக புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்றது .

நாட்டில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்குக்கு மத்தியில் ஆங்காங்கே சிறு சிறு கசப்பான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவை சமூகத்தின் அவதானத்திற்குட்படும் வகையில் அமைந்திருந்தாலும் பெரும்பாலானவர்கள் இது பற்றி கரிசனையற்றவர்களாக இருப்பதைக் காண முடிகின்றது.

இத்தகைய அசட்டைத்தனம் சிறுபான்மை சமூகம் என்ற அடிப்படையில் பாரிய இழப்புக்களை அடையும் நிலை ஏற்படவும் காரணமாகலாம்.

இதற்கு கடந்த வாரம் கம்பளையில் இடம்பெற்ற சம்பவம் சான்றாகும்.
கம்பளை நகரை அண்டிய இலங்காவத்தை கிராமம் கம்பளை - பேராதனை பிரதான விதியில் கஹட்டபிடியவை அண்டி அமைந்துள்ளது.

இக் கிராமத்தின் எல்லையில் சிங்கள தமிழ் மக்கள் வசிக்கும் பல சிற்றுரர்கள் அமைந்துள்ளன. இதனால் சகோதர சிங்கள , தமிழ் மக்கள் இலங்காவத்தை கிராமத்தை கடந்து தமது கிராமங்களுக்கு செல்வர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை தீபாவளி தினத்தன்று மாலை இலங்காவத்தை எல்லையில் வசிக்கும் பெரும்பான்மை சகோதரரொருவரின் வீட்டில் சமய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சமய நிகழ்வையொட்டி சிறு (கத்தன பெரஹர) பெரஹரவொன்று இலங்காவத்தை பிரதான பாதையூடாக சென்றுள்ளது. இப்பெரஹரா பள்ளிவாசல் முன்னால் சென்று கொண்டிருந்தபோது பள்ளிவாசல் கட்டிடத் தொகுதியில் மக்தப் வகுப்புக்கு சமூகமளித்திருந்த பத்து வயதிற்குட்பட்ட சில சிறார்கள் பெரஹராவை பார்ப்பதற்காக மொட்டை மேல் மாடியில் ஓடி வந்துள்ளனர்.

இக்கட்டிப்பகுதி நிர்மாண வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி யாகும். இச்சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் ஓடி வரும் போது தரையில் இருந்த சிறு கற்கள் கால்களுக்கு உதைபட்டு பெரஹரா ஊர்வலம் சென்றவர்கள் மீது விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெரஹரவில் சென்றவர்கள் மீது பள்ளிவாசலில் இருந்து கல் வீசப்பட்டதாக பெரும்பான்மையினர் மத்தியில் செய்தி பரவியுள்ளது.

சிறார்கள் கற்களை வீசியதாகவும் கற்கள் வீசப்படும் போது முஸ்லிம்கள் தரப்பில் சிலர் அசட்டையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவத்தினால் ஆவேச முற்ற பெரும்பான்மையினத்தவர்கள் பலர் போத்தலப்பிட்டி விகாரையில் திரண்டுள்ளனர். இவர்கள் கடும் ஆத்திரமுற்றுள்ளனர்.

இதனால் இப்பகுதி முஸ்லிம்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ஏற்படப் போகும் விபரீதத்தை உணர்ந்த முஸ்லிம் தரப்பு உடனடியாக விடயத்தை பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ண மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் மற்றும் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எம்.எல்.எம். புர்கான் உட்பட பல அரசியல் பிரமுகர்களின் ஆகியோரின் கவனத் திற்குக் கொண்டு வந்தனர்.

 இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகளைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படை களத்தில் இறக்கப்பட்டு பிரதேச பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது.

இந்நிலையில் பதற்ற நிலைமைக்கு சுமுகத் தீர்வு காணும் பொருட்டு உடனடியாக கம்பளை பொலிஸ் நிலையத்திலும் போத்தலப்பிட்டி விகாரையிலும் பேச்சுவார்த்தைகள் பொலிஸார் முன்னிலையில் இடம்பெற்றன.

இதில் பெளத்த தேரர்களும் இலங்காவத்தை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கம்பளை கிளைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் நடைபெற்ற சம்பவத்திற்காக முஸ்லிம்கள் தரப்பில் வருத்தமும் மன்னிப்பும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் ஏற்படவிருந்த பாரிய விளைவொன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரமுகரொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் பாரிய விளைவை உண்டுபண்ணாமல் தடுத்து நிறுத்தப்படுவதில் தற்போது பொதுபலசேனவுக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையும் பங்களிப்பு நல்கியுள்ளது என்ற பின்னணிக் காரணத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

இச்சம்பவத்தில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி சுமுக நிலையை ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்ட கம்பளை போத்தலப்பிட்டிய விஹாராதிபதி மற்றும் மத்திய மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் மகிந்த ஏக்கநாயக்க, கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிஸ் , கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாப்பா உட்பட பொலிஸ் அதிகா ரிகள் பாராட்டப்பட வேண்டியவர்களாவர்.

இச்சம்பவத்தின் நடப்புக்கள் எவ்வாறாயினும் இதன் மூலம் முஸ்லிம் சமூகம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

சமூகம் என்ற கருத்தியலுக்குள் சமூகத்தில் வாழும் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் உள்ளடங்குகின்றனர். இதில் சிறார்கள் பெரியவர்கள் அல்லது வளர்ந்தவர்களின் கண்காணிப்புக்குட்பட் டவர்கள் ஆவர்.

குழந்தைகள் வீடுகளில் வளர்கின்றவர்களாக அன்றி வளர்க்கப்படுபவர்களாக இருத்தல் அவசியம் என்ற அடிப்படையில் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக அக்கறை செலுத்துபவர்களாக மாறுவது அவசியம்.

குழந்தைகளின் நாளாந்த நடத்தையில் சிறு விடயமாயினும் பெற்றோரின் கவனத்திற்குள்ளாக வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள் ஆவர்.

எனவே இச்சிறுவர்களை உரிய பண்பாட்டுக்குள் முறையான வளர்ப்புக்குள் உள்வாங்கா விட்டால் பெற்றோர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகமும் எதிர்காலத்தில் அதிக விலை கொடுக்க வேண்டி ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இன்றைய சூழ்நிலையில் சகோதர இனங்களுடன் தொடர்புபட்ட் விடயங்களில் முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் தூர சிந்தனையுடன் முன்மாதிரிமிக்கதாக செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். ஏனெனில் தனிமனித நடத்தைகள் சமூக நடத்தைகளாக கற்பிதங்களுக்குள்ளாகும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளன என்பது யதார்த்தமாகும்.

-எம்.எம்.எம். ரம்ஸின்- ( விடிவெள்ளி)
கூர்மையடைந்து வரும் முஸ்லிம் விரோதப் போக்கு. கூர்மையடைந்து வரும் முஸ்லிம் விரோதப் போக்கு. Reviewed by Madawala News on 10/27/2017 03:08:00 PM Rating: 5