Ad Space Available here

குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்தி, மிம்பர் மேடைகளை வலுப்படுத்துவோம்.

ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்துவது ஒவ்வொரு மஹல்லாவினதும் கூட்டுப் பொறுப்பாகும்.


முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொரு வாரமும் அழகிய உபதேசங்களையும், காலத்திற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக வெள்ளிமேடைகளாக ஜும்மாப் பேருரைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.


குறித்த ஒரு மணி நேரமும் முஸ்லிம்கள் குளித்து சிறந்த ஆடைகள் அணிந்து ஜும்மாவுக்கு வருகை தந்து வாய்மூடி மௌனமாக இருந்து கேட்கின்ற குத்பாப் பேருரைகள் ஒவ்வொரு தனி மனித மணித்தியாலங்களுக்கும் வலுவை சேர்க்கின்ற கால சூழ்நிலைகளுக்கு ஏற்ற தராதரங்களில் இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும்.


அந்த வகையில் ஒவ்வொரு ஜும்மா தினத்திலும் நிகழத்தப்பட வேண்டிய குத்பாக்களும் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அழகாக அர்த்தமுள்ளவையாக நிகழ்த்தப்படுவதனை அந்ததந்த மஹல்லாவில் உள்ள புத்திஜீவிகளும் உலமாக்களும் கூட்டுப் பொறுப்பாக உணர்ந்து உறுதி செய்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.


ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.


இப்பொழுது ஆன்மீக நம்பிக்க்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில் மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.


அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.


போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.


எவ்வாறு உலகில் ஆயுத உற்பத்தியாளர்கள் இன மத மொழி வேற்றுமைகளில் முதலீடு செய்கிறார்களோ அதே போன்றே போதை வஸ்து உற்பத்தியாளர்களும் ஒரு சமூகத்தின் இளம் மற்றும் மாணவ சமூகத்தை இலக்கு வைத்து அழிப்பதற்கு போதை வஸ்துக்களை ஆயுதமாக பயன் படுத்தமாறு இன மத வெறியர்களை தூண்டுகிறார்கள்.


இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.

இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.


மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.


யுகத்தின் புதிய நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் மத்திய நிலையங்களாக மஸ்ஜிதுகள் மாறுதல் வேண்டும், மிம்பர் மேடைகள் வலுவூட்டப்படல் வேண்டும், பாடசாலைகள் உளவள ஆலோசனைகளுடன் பதின்ம வயதினரை வழி நடாத்த வேண்டும்.


கருத்து வேறுபாடுகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய விடயங்களுக்கு அப்பால் சகலரும் உடன்படுகின்ற பொதுவான விவகாரங்களை அடிப்படையாக வைத்து காலோசிதமாக குத்பாக்களை தயாரித்துக் கொள்வதில் உலமாக்களுக்கு உதவுவதும், அவ்வாறான குத்பாப் பேருரைகள் இருந்தால் பெற்றுக் கொடுப்பதும், அல்லது முடியுமான ஏனைய உலமாக்கள் தயாரித்து அவர்களிடம் கொடுப்பதும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் அனுப்பி வைப்பதும் ஒவ்வொருவர் மீதும் விதிக்கப்பட்ட கடமையாகும்.


குத்பாப்ப பேருரைகளை சுமார் ஏழு இலட்சம் பேர்கள் கேட்கின்றார்கள் என்றால் ஏழு இலட்சம் மனித மணித்தியாலங்கள் செலவிடப்படுகின்றன அந்த பெறுமதியான கால அவகாசத்தை சுமார் 1200 பேசும் இமாம்களின் தெரிவுகளுக்கும், சௌகரியங்களுக்கும் சிலவேளை விருப்பு வெறுப்பு கருத்து வேறுபாடுகளுக்கும் விட்டு விடுவது மிகப் பெறும் தவறாகும்.


அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் நிறுவனங்கள் இந்த விடயத்தில்ஸ அதிஸதீவிர கவனத்தை செலுத்துவதோடு தரமான குத்பாக்களை வாராவாரம் தயாரித்து கதீப்மார்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


இஸ்லாம் சொல்லித் தரும் உயர் பண்பாட்டு சமாதான சகவாழ்வு மற்றும் மானுட விழுமியங்களின் தூதுவர்களாக ஒவ்வொரு தனிமனித முஸ்லிம் ஆண் பெண்ணும் மாறுவதிலேயே, இறக்குமதி செய்யப்பட்டு அதி தீவிரமாக இலங்கையில் குறிப்பாக பாமார சமூகங்களிடம் சந்தைப் படுத்தபடும் இஸ்லாமோபோபியா இஸ்லாம் முஸ்லிம்கள் குறித்த பீதி காழ்ப்புணர்வுப் பிரச்சாரம் என்பவற்றை எங்களால் முறியடிக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.


இன்ஷா அல்லாஹ் நாளைய குத்பாப் பேருரைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதனை எல்லோருமாக எதிர்பார்த்திருப்போம்.


(குறிப்பு: இந்தப் பதிவை வைத்து உலமாக்களையோ,அகில இலங்கை ஜம்மியாய்த்துல் உலமாவையோ அல்லது வேறு எவரையும் நோவிக்கும் விதமாகவோ கருத்துக்களை பின்னூட்டங்களை சமூக வலை தளங்களில் இட வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.)

குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்தி, மிம்பர் மேடைகளை வலுப்படுத்துவோம். குத்பாப் பேருரைகளின் தராதரங்களை மேன்படுத்தி, மிம்பர் மேடைகளை வலுப்படுத்துவோம். Reviewed by Madawala News on 10/11/2017 12:26:00 PM Rating: 5