Kidny

Kidny

முஸ்லிம்களுக்கும் ஒரு விடுதலை நாயகன் தேவை!


இப்போது எல்லோரும் மனோ கணேசனைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மலையகத் தமிழர்களின் விடுதலை நாயகனாக
அவர் வலம் வருகிறார். இதுவரை காலமும் தமது அபிலாசைகளை நிறைவேற்றித் தருவதற்கு ஒரு தலைவன் இல்லையே என்றிருந்த மலையகத் தமிழர்களின் நிலை மாறியுள்ளமை சந்தோசமளிக்கின்றது.

புதிய தேர்தல் முறை, உள்ளுராட்சி எல்லை நிர்ணயம், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை என்று நாடே பதறிப் போயுள்ள நிலையில், மலையகத் தமிழர்களின் அபிலாசகைளை நியாயமான வழிமுறையில் அடைந்துகொள்வதற்கு மனோ கணேசன் தொடர்ந்தும் அயராது உழைக்கின்றமை பாராட்டுக்குரியதாகும்.

உள்ளுராட்சி தேர்தல் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளை அவர் வென்றெடுத்துள்ளமை பாராட்டத்தக்கதாகும். மொத்தமாக 12 சபைக் கோரியுள்ளமையால், ஏனைய சபைகளையும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறிருக்கையில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை எவ்வாறிருக்கின்றது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. வழமை போலவே, 'நாம் சாணக்கியமாக காய் நகர்த்துகிறோம்.' , 'சமூகத்துக்கு எதிராக எது நடந்தாலும் பதவியை வீசிவிட்டு வருவேன்' என்ற பாணியிலான அறிக்கைகள் மட்டுமே முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கின்றன.

இந்த வெற்று அறிக்கைகளைத் தாண்டி முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமாகவும், வினைத்திறனாகவும் சமூகத்தின் அபிலாசைகளுக்காக எப்போது உழைக்கப் போகிறார்கள் என்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வரையில் எதிர்க்கட்சியிலிருந்து சாதிக்கும் விடயங்களை, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும்கூட்டமைப்பிலிருந்தே சாதிக்க முடியாமலிருக்கின்றது. எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும், அங்கே போய் ஒட்டிக்கொள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கை படிப்படியாக சமூகத்தில் குறைந்து வருகின்றது.

மறுபுறம், முஸ்லிம்களின் அபிலாசைகளைப் புரிந்து நடக்கும் தார்மீகப் பொறுப்பு ஜனாதிபதிக்கும், பிரதமரும், ஏன் முழு மொத்த அரசுக்கும் இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலின்போதும், பொதுத் தேர்தலின்போதும், முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் அனைத்தும்போல் இவர்களுக்குத்தான் கிடைத்தன.

எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்படியிருந்தபோதும், முஸ்லிம்கள் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கொஞ்சமேனும் அக்கறை கொள்ள வேண்டியிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு, உள்ளுராட்சி எல்லை நிர்ணயம் என்பவற்றில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அபாயங்களைக் கழைய வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உள்ளது.

சுகபோகங்களும், கொந்தராத்துக்களும், 'பைல்'களும் அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கின்ற இந்த யுகத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற் சுதந்திரம் அற்றவர்களாகவே இருக்கின்றனர் என சமூகம் குற்றம் சாட்டத் தொடங்கியிருப்பதை மிகவும் வேதனையுடனும், மன உழைச்சலுடனும் சொல்ல வேண்டியிருக்கின்றது.

இந்த வகையான அரசியலிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் எப்போது மீள்வார்கள் என்பதை எதிர்வுகூற முடியாதிருக்கின்றது. இனி வரும் காலங்களிலேனும் சமூக நோக்கை கொள்கையாகக் கொண்டவர்களை அரசியல் அதிகாரங்களுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமூகத்திருக்கின்றது.

சமூக முன்னேற்ற நிபந்தனைகளின்படி பார்க்கையில் மிகவும் பின்தங்கியிருக்கின்ற மலையக சமூகத்துக்கு ஒரு விடுதலை நாயகன் கிடைத்திருப்பதுபோன்று, முஸ்லிம் சமூகத்துக்கும் ஒரு விடுதலை நாயகன் தேவைப்படுகின்றது.

அஷ்கர் தஸ்லீம் 
(பிரதி ஆசிரியர் நவமணி)
முஸ்லிம்களுக்கும் ஒரு விடுதலை நாயகன் தேவை! முஸ்லிம்களுக்கும்  ஒரு விடுதலை நாயகன் தேவை! Reviewed by Madawala News on 10/20/2017 06:11:00 PM Rating: 5