Ad Space avaiable

இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியும் - பாகம் 3




வை எல் எஸ் ஹமீட்
Nature of The State- அரசின் தன்மை
இது தொடர்பாக, தற்போதைய யாப்பில், தமிழில் " ஒற்றையாட்சி" என்றும் சிங்களத்தில் " ஏகிய ராஜ்ய" என்றும் ஆங்கிலத்தில் " unitary state" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருள் ஒரு நாடு, ஒரு அரசாங்கம் என்பதாகும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பகிர்வு வழங்கலாம். ஆனால் அவ்வாறு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட்ட பிராந்தியங்களின் நிர்வாகம் ( அது என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் ) மத்திய அரசிற்கு சமமான அல்லது சமாந்திரமான அதிகாரத்தைக் கொண்டிருக்க முடியாது. மாறாக, அது மத்திய அரசுக்கு கீழ்பட்டதே.

சட்டவாக்க அதிகாரமும் நிதித்துறை அதிகாரமும் பாராளுமன்றத்தின் இயற்கையான அம்சங்களாகும். ஒற்றையாட்சித் தத்துவத்தின் கீழ் பாராளுமன்றம் இந்த அதிகாரங்களை வேறு எந்தவொரு கட்டமைப்புடனும் பகிர்ந்து கொள்ளாது. 

பிராந்தியங்களுக்கு உப சட்டங்களை ( subordinate legislation) ஆக்குகின்ற அதிகாரத்தைத்தான் வழங்கும். அந்த அதிகாரத்தைப் பாவித்து பிராந்தியங்கள் ஆக்குகின்ற சட்டத்தை பாராளுமன்றம் மாற்றலாம். பிராந்தியத்திற்கு அந்த அதிகாரம் இருக்கத்தக்கதாக, அந்த அதிகாரம் குறித்த விடயதானங்களில் பிராந்தியங்களின் விருப்பு வெறுப்பைப் புறக்கணித்து பாராளுமன்றம் தாமாக சட்டங்களை ஆக்கலாம். அதற்கும்மேலாக அந்த உபசட்டங்களை ஆக்குகின்ற அதிகாரத்தையே மாற்றலாம் அல்லது வாபஸ் வாங்கலாம்.

இன்று 13 வது திருத்தத்தின்கீழ் இலங்கையின் நிலையும் இதுதான். ( 2/3 பெரும்பான்மையா அல்லது சாதாரண பெரும்பான்மையா என்பது procedure உடன் சம்மந்தப்பட்ட விடயம், அதைப்போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்- பாரளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றது)
எனவே, இதுதான் ஒற்றையாட்சியின் அடிப்படை அம்சமாகும்.

ஒற்றையாட்சியின் கீழ் பிரிந்து செல்ல முடியுமா?
-----------------------------------------
ஒற்றையாட்சியின்கீழ் பிரிந்து செல்லவே முடியாது; என்று எங்கும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் ' ஒற்றையாட்சியென்பது ஒரு நாட்டையும் ஒரு அரசாங்கத்தையும் குறிப்பதால் பிரிந்துசெல்லும் உரிமையைக் கோருவது ஏற்புடையதல்ல; என்பது ஒற்றையாட்சிக்குரிய பொதுவான வியாக்கியானமாகும். ஆனால் அவ்வாறான பிராந்தியத்தில் வாழுகின்றவர்கள் ஒரு தனித்தேசியமாக இருந்தால் அவர்களுக்குரிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்; அந்நிலையில் அவர்கள் பிரிந்துசெல்லும் உரிமையைக் கோரலாம்.

அவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஒற்றையாட்சித் தத்துவம் வலுவானதா அல்லது சுயநிர்ணய உரிமைத் தத்துவம் வலுவானதா என்ற கேள்வி எழும். இதற்கு இதுதான் பதில் என்று அறுதியிட்டுக்கூற முடியாது. அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்தது.

உள்நாட்டு நீதிமன்றம் அரசியலமைப்பில் ' ஒற்றையாட்சி' என்று எழுதியிருந்தால் அதன் தத்துவத்தைத்தான் வலுவானதாக கொள்ளும். " சுயநிர்ணய உரிமை" என்பது சர்வதேச சட்டங்களின்கீழ் வியாக்கியானப்படுத்தப் படவேண்டியது.

இலங்கைபோன்ற நாடுகளில் ( dualist countries) சர்வதேச சட்டங்கள் நேரடியாக செல்லுபடியாகாது. உள்நாட்டு சட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே அவை செல்லுபடியாகும். 'சுயநிர்ணயம்' தொடர்பாக இன்ஷஅல்லாஹ் விரிவாக எழுத இருக்கின்றேன். அப்பொழுது இந்த பிரிந்துசெல்கின்ற வாய்ப்பைப்பற்றிப் பார்ப்போம்.

தற்போதைய நமது தலைப்பைப் பொறுத்தவரை நமக்குத்தேவையானது, " ஒற்றையாட்சி"  என்றால் அதன் பொருள் மாகாண ஆட்சிகள் மத்திய ஆட்சிக்குக் கட்டுப்பட்டவை என்பதாகும்.

இடைக்கால அறிக்கையில் இந்த ஒற்றையாட்சி என்ற சொல் நீக்கப்பட்டு வேறு பதங்கள் பிரேரிக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன்? அதன் பின்னாலுள்ள தாற்பரியமென்ன? அரசின் பிரதானிகள் ஒற்றையாட்சித் தத்துவத்தை மாற்றவில்லை; என்று கூறிக்கொண்டு இந்த புதிய பதங்களைக் கொண்டுவருவதன் நோக்கமென்ன? 

இவை தொடர்பாக அடுத்த தொடரில் ஆராய்வோம், இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)
இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியும் - பாகம் 3  இடைக்கால அறிக்கையும் முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியும் - பாகம் 3 Reviewed by Madawala News on 10/09/2017 01:08:00 PM Rating: 5