Ad Space Available here

27 வருடங்கள் நிறைவடைந்த இலங்கை முஸ்லிம்களின் கறுப்பு நாள்... ஒரு பார்வை.


1990 ஒக்டோபர் 30....
இலங்கை முஸ்லிம்களின் சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள்.
27 வருடங்கள் நிறைவடைந்தாயிற்று.


புத்தளம் தொடக்கம் புல்மோட்டைவரை
அனுராதபுரம் தொடக்கம் திஹாரி வரை
அவர்களது அகதி வாசம் வீசிய காலங்கள் கனதியானவை.
உடுத்த உடுப்போடு மாத்திரம் வந்திருந்தார்கள்.

கொஞ்சம் வசதி வாயப்புகளோடு வாழ்ந்தவர்கள் கொழும்பிலிருந்த தங்கள் உறவினர்களிடம் வந்து தஞ்சமடைந்தார்கள்.


தொழில்வான்மை கொண்ட ஒருவனை வெறுங்கையோடு ஒரு சந்தைக்குள் கொண்டு போய் விட்டாலும் அவன் பிழைத்துக்கொள்வான்.

அந்த நியதிக்கு அமைவாக தலைநகரப்பகுதிகளை வந்து சேர்ந்த வட பகுதி முஸ்லிம் ஏதிலிகள் சிலர் மெது மெதுவாக தங்களது பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சிகளை தொடங்கினர்.


அவர்களில் பலர் மீண்டும் தமது தாயகம் மீண்டு குடியேறுவதில் ஆர்வங்கொள்ளவில்லை.
அதற்கு இரண்டு பெரிய காரணங்கள் உள்ளன.


ஒன்று அந்த துன்பியல் சம்பவத்தின் ஆறாத வடு அவர்களுக்குள் இன்னும் கணன்று கொண்டேயிருக்கிறது.

இன்னொன்று வந்து குடியேறுங்கள் என்று வாயளவில் சொன்னாலும் அதற்கான நடை முறைத்தடைகள் ஏராளம் இருந்தன. இன்னுமிருக்கின்றன!
ஆகையினால் செல்வந்தர்களாக இருந்து அகதிகளாக அனைத்தையும் இழந்து மீண்டும் இங்கே வந்து உயிர்த்தெழுந்த பலர் தங்கள் தாயகம் மீளவில்லை அல்லது மீள்வதற்கு ஆசைப்படவில்லை என்றும் சொல்லலாம்.
ஆனால் நடுத்தர மக்கள், வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தவர்களின் பாடுதான் பரிதாபம்.

அவர்கள் அகதி முகாம்களில் அல்லல்பட்டார்கள்.
அவர்களது கூரைகள் ஒழுகின..

குமருப்பிள்ளைகள் குளிப்பதற்கு ஒரு மறைவில்லாமல் கூச்சப்பட்டார்கள்....
கூடாரங்களில் மல கூடங்கள் போதாமலிருந்தன..


கூட்டு மல கூடங்களை நோக்கி வாலிபர் வயோதிபர் வேறுபாடின்றி நீண்ட மணி நேரம் வரிசையில் காத்து நின்றார்கள்..

ஒரு இரண்டு வாரத்துயரமல்ல இது ஆண்டுக்கணக்கில் நீடித்த அவலம்.
அவர்களது அவல வாழ்விற்கு தீர்வு கொடுக்கவேண்டியவர்கள் மாறாக அவர்களின் கைகளில் வாக்குச்சீட்டுகளை திணித்து ஆடு மாடுகளை போல வாகனங்களில் அடைத்து கொண்டு போய் தங்களது கதிரைகளை தக்கவைக்கும் சதுரங்க ஆட்டத்திற்கு புள்ளடி போடவைத்தார்கள்!
காடு மேடுகளில் குடியேற்றுவதாக சொல்லி பலரை பலவந்தமாக அகதி முகாம்களிலிருந்து அகற்றிப்போனார்கள்.


புலிகள் ஒரு கட்டத்தில் தாம் செய்தது ஒரு துன்பியல் நிகழ்வென்று சொல்லி வருந்திய பிற்பாடு அவ்வப்போது மீள்குடியேற்ற முயற்சிகளை மக்களாகவே செய்ய முயன்ற போதும் பல தடைகள் உருவாகின!
கடுமையான யுத்தமும் அதில் ஒன்று.

“ஆயுதங்கள் மெளனிக்கப்படுகின்றன” என்று தமிழ் நெட் செய்தி வெளியிட்ட அதேவேளை மறுமுனையில் சிங்கள தேசியம் அதனை புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அறிவித்து கொண்டாடியது.
தர்க்கரீதியில் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை.
அவர்களது ஆயுதங்கள் மெளனித்திருக்கின்றன அவ்வளவுதான்.
புலம்பெயர்ந்த நாடுகளில் நாடுகடந்த தமிழீழமாய் அவர்களது அரசியல் வாழ்கிறது!

அவர்கள் உருவாக்கிய proxy களான தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்னும் வாழ்கிறது!

இந்த பின்புலத்தில் 2009 இன் பின்னர் யுத்தமற்ற ஒரு தேசம் உருவான பின்னரும் வடக்கு முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றம் பூரணமாக நிகழ்ந்து முடிந்துவிட்டதா என்று கேட்டால்....

இல்லை என்ற ஏமாற்றமான பதிலே இன்றும் கிடைக்கிறது.
அகதிகளாகி 27 வருடங்கள்...
யுத்தம் முடிவுக்கு வந்து எட்டுவருடங்கள்..

அப்படியென்றால் இன்னும் வட புல முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்திற்கு எது தடையாக இருக்கிறது அல்லது யார்?
விக்னேஸ்வரன் ஐயாவா?

தமிழ் தேசியக்கூட்டமைப்பா?
அல்லது புலிகளா?

இதற்கான சரியான பதிலை இதுவரை பெற்றுக்கொள்ளாத இலங்கை முஸ்லிம் சமூகம்

இதன் பின்னாலுள்ள அரசியலின் கபடத்தனத்தை அஞ்சும் இலங்கை முஸ்லிம் சமூகம் புதிய யாப்பு, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற சொல்லாடல்களை கேட்கும் போது கிலி கொள்வது நியாயம்தானே!

- முஜீப் இப்ராஹிம்-
27 வருடங்கள் நிறைவடைந்த இலங்கை முஸ்லிம்களின் கறுப்பு நாள்... ஒரு பார்வை. 27 வருடங்கள் நிறைவடைந்த இலங்கை முஸ்லிம்களின் கறுப்பு நாள்... ஒரு பார்வை. Reviewed by Madawala News on 10/30/2017 11:15:00 PM Rating: 5