Kidny

Kidny

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் கடும் மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் இதுதான்.


நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் கடும் மழை நிலைமை, பெரும்பாலும் குறைவடையக்கூடியக் கூடும் என, இலங்கை
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 மேகத்துடன் கூடிய வானிலை, தொடர்ந்தும் நீடிக்குமெனவும், கடுமையான காற்றும் எதிர்பார்க்கப்பட முடியுமெனவும், அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும், வடமேற்கு, வடமத்திய, வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வுறப்பட்டுள்ளது.

50 தொடக்கம் 75 மில்லிமீற்றர் அளவிலான, பாரிய மழை வீழ்ச்சி, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் எதிர்பார்க்க முடியுமெனவும், எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேவேளை,  நாட்டில் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை, மேலும் நீடிக்கப்பட்டுள்ளதென, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் இரத்தினபுரி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஓப்பநாயக்க, பலாங்கொடை, கஹவத்தை, எஹெலியகொடை, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரியெல்ல, கொலன்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்; மாத்தறை மாவட்டத்தில் பிட்டுபத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தில் எட்டியந்தோட்டை, புளத்கொஹபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,காலி மாவட்டத்தில் நியகம, யக்கமுல்ல, நாகொட, தவளம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்புத் தொடர்பில், உரிய கவனம் எடுக்குமாறு, பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  மலையத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக, பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மேல்கொத்மலை, கெனியன் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் நேற்று (15) திறந்துவிடப்பட்டுள்ளன.

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், கெனியன் நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளனவென, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் நோட்டன், விமல சுரேந்திர, மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, நானுஓயா, கொட்டகலை, ஹற்றன், மஸ்கெலியா, டிக்கோயா, அக்கரப்பத்தனை, டயகம, போடைஸ், வட்டவளை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டப் பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்ததால், அப்பகுதியில் விவசாயக் காணிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக விவசாயக் காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை, நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காசல்ரி பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகத் தடைப்பட்டிருந்த போக்குவரத்து, வழமைக்குத் திரும்பியுள்ளது.


இப்பகுதியில் நேற்று முன்தினம் (14) ஏற்பட்ட பெரும் மண்சரிவு காரணமாக, பல மணித்தியாலங்கள் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து வீதியில் நிரம்பியிருந்த மண்மேடுகளை அகற்றி, பாதையைச் சீர்செய்தனர். மேலும், ஹட்டன் நகரப் பகுதியில் பொலிஸ் நிலைய விளையாட்டு மைதானம், தபாற்கந்தோர் வளாகம் ஆகியனவும் நீரில் மூழ்கியதுடன், குடியிருப்பு ஒன்றும் பகுதியளவில் சேதமாகியது.

இந்நிலையில், நாவலப்பிட்டி நகரில் பெய்த கடும் மழை காரணமாக, தபாற்கந்தோர் வீதி முழுமையாக நீரில் மூழ்கியது. அத்துடன் ஹட்டன் கினிகத்தேனை பகுதியில், ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, இரத்தினபுரி நகரில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கஹவத்தை, தலுக்கலை ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக, தலுக்கலை தோட்ட மக்கள் தமது குடியிருப்புகளுக்குச் செல்வதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

ஹட்டன் - நுவரெலியா வீதி, பதுளை - பசறை வீதி, பெல்மதுளை - பலாங்கொடை வீதி, கினிகத்தேனை பகுதி, அவிசாவளை - கேகாலை வீதி ஆகியவற்றில் வாகனத்தில் பயணிப்போர், அவதானமாகச் செயற்படுமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும்  நாட்டின் சில மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக நில்வளா கங்கை, களு கங்கை, கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டமும், அத்தனகலு ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் சிறு அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, களு கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் நேற்று மாலை 7.5 அடிக்கு நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அளவு 8 அடிக்கு உயரும் பட்சத்தில், பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் நிரம்பியுள்ளன.

எனினும் இந்தப் பகுதிகளில் மழை வீழ்ச்சி குறையும் பட்சத்தில், நீர்மட்டத்தின் அளவு குறைவடையும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் கடும் மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல் இதுதான். நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் கடும் மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின்  எதிர்வு கூறல் இதுதான். Reviewed by Madawala News on 10/16/2017 07:06:00 AM Rating: 5