Ad Space Available here

புலமைப் பரிசில் பரீட்சை | மன அழுத்தங்களுக்கு வித்திடும் கல்வித் திணிப்பு.அழுத்தங்கள் நிறைந்த கல்விச் சூழலை தற்போது நடைமுறையிலிருக்கும் கல்வியமைப்புத் திட்டத்தில் அடங்கியுள்ள
அம்சங்களில் வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. பெற்றுக் கொள்ளப்போகும் கல்வித் தகைமைகள் மற்றும் அடைவுகளிலேயே தமது பிள்ளைகளின் சுபீட்சமான எதிர்காலம் பெரிதும் தங்கியிருக்கின்றது என்பதை பெரும்பாலான இன்றைய பெற்றோர்கள் நன்குணர்ந்து கொண்டுள்ளனர். எனினும், அழுத்தம் நிறைந்த செயற்கையான கல்விச் சூழலை அவர்கள் மத்தியில் ஏற்படுதுவதானது அவர்களின் வயதுக்கேற்ற, இயலுமைகேற்ற பிரகாரம் தேடிக் கற்றல் எனும் இயல்பில் பெரிதளவில் பின்னடைவை ஏற்படுத்தி விடுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.


வளர்ந்துவரும் உலகின் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மைய  பொருளாதார சூழலை எதிர்கொள்ள தகைமையான  பட்டதாரிகளை நடைமுறையிலிருக்கும் கல்வி முறைமை உருவாக்கத் தவறுகிறது என்பது தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் நிலவி வந்தன. இதன் பிரகாரம் எமது கல்வி முறைமையில் நிலவி வந்த குறைபாடுகளை நீக்கும் வகையில் பலவகையான செயற்திட்டங்கள் கலந்துரையாடப்பட்டும் அவற்றில் சில நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளன.


இதன் விளைவாக நீண்டதொரு காலப்பகுதியில், படிமுறை அடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டிய கல்வியை சிறுவர்கள் மத்தியில் பலவந்தமாக திணிக்கும் ஒரு நிர்ப்பந்த சூழல் இன்றைய கல்வியமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, பாலர் பாடசாலை கல்வி முறை என்பதானது பிள்ளைகளை அவர்கள் போக்கில் விளையாட விட்டு கேளிக்கை, விளையாட்டு என்பவற்றின் மூலம் முதலான் ஆண்டு பாடசாலை சூழலுக்கு  தயாராக்கும் ஓரிடமாகவே செயற்பட வேண்டும். மாறாக, முதலாம் ஆண்டு பாடசாலைக்கு நுழையும் முன்னரே இளம் பிஞ்சு சிறார்கள் ஆங்கில நெடுங்கணக்கு மற்றும் எண்கள் என்பவற்றை கசடறக் கற்றுத் தேற வேண்டும் எனும் நோக்கில் பலவந்தப்படுத்தப்படுகின்றனர்.


ஆனால், கல்வியைத் திணிக்கும் சூழல் நிலவாத கடந்த காலங்களில், இவை அனைத்தும் முதலாம் ஆண்டில் பாடசாலைக் கல்வியின்போதே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. தமது தாத்தா, பாட்டிகள் உயர் வகுப்புக்களில் பயின்ற பல்வேறு விடயதானங்கள் பலவற்றை இன்றோ ஆரம்ப வகுப்புக்களிலேயே சிறார்கள் பயில நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். நிதானமான, இலகு முறைக் கல்வி அமைப்பின் பிரகாரம் கற்றுத் தேர்ந்த எமது முன்னைய தலைமுறை தறிகெட்டுப் போய் விடவில்லை; மேலும் அவர்களில் பலர் தத்தமது துறைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவதையும் நாம் அறிவோம்.


இன்றைய கல்வியமைப்பின் பிரகாரம் பாரிய புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்கு இன்றைய சிறார்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.


இதுவே சிறார்களின் இயல்தகைமைக்கு மிகையாக கல்வி திணிக்கப்படுவதற்கும் இன்றைய பாடசாலை வாழ்க்கையின் இயல்பை எடுத்துக்காட்டப் போதுமான அடையாளமாக திகழ்கிறது. கேளிக்கையும் மகிழ்வும் நிரம்பிய அற்புதமான காலப்பகுதியாகவே பாடசாலை வாழ்க்கையை முன்னைய தலைமுறையினர் நினைவுகூருகின்றனர். ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைக்காக வருத்திப் பிழியும், க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்காக துரத்தித் திணிக்கும் நடைமுறைகளை அவர்கள் காலத்தில் காணக் கூடியதாக இருந்திருக்கவில்லை.


இன்றைய முன்னேற்றகரமான வளர்ச்சியடைந்த நாடுகளின் கல்வி முறைமைகள் ஆசிரியர் கூறுவதை வெறுமனே  மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வி முறைகளாக அன்றி, தமது வெற்றி இலக்குகளை நோக்கி ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் மாணவர்கள் சுயமாக தேடிக் கற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இங்கே ஆசிரியர்கள் சொல்லித் திணிக்கும் குருநாதர்களாக அன்றி வெற்றிப் பாதையை சுட்டிக் காட்டும் வழிகாட்டிகளாக மாத்திரமே செயற்படுவர்.


கல்வி அடைவுகள் தொடர்பில் போட்டா போட்டிகள் நிலவும் கல்வி முறைமைக்கு மத்தியில் மாணவர்கள் தமக்குத் தாமே நிர்ணயித்துக் கொண்ட கல்வியியல் அடைவுகளை பெறத் தவறும்போது மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலைக்குத் தூண்டப்படும் நிகழ்வுகள் ஜப்பானிய மாணவர்கள் மத்தியில் அதிகரித்துச் செல்வதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாட்டில் மாணவர் மைய நலன் சார்ந்த கல்விமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்  அழுத்தம் நிறைந்த கல்விச் சூழலை இலகுபடுத்தி எமது இன்றைய தலைமுறை மாணவர்களை கிடுக்கிப்பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்க வேண்டும்.


இன்றைய உயர் அழுத்தக் கல்விச் சூழலின் அதியுச்ச வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையாகும். பிரபல அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியை தொடர்வதற்கு தகுதியான மாணவர்களை தெரிவு செய்வதே இப்பரீட்சையின் பிரதான நோக்கமாகும். தகுதிபெற்ற மாணவர்களுக்கு அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உதவித்தொகையை வழங்குவது இப்பரீட்சையின் இரண்டாம்நிலை நோக்கமாக கருதப்படுகிறது.


ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் காரணமாக சிறார்கள் மத்தியில் ஏற்படும் எதிர்விளைகள் தொடர்பில் பல்வேறு கல்வி முறைமை ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் எழுதி வருகின்றனர். இச்சூழலில் அவர்களின் ஏகோபித்த கருத்து யாதெனில், வருடாந்தம் இப்பரீட்சைக்கு தோற்றும் சுமார் 300,000 மாணவர்கள் மத்தியில் பரீட்சை மற்றும் அதற்கான ஆயத்தப்படுத்தல்கள் தொடர்பில் உயர் நெருக்கடிக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகின்றனர் எனவும், சிறுவயதில் இவ்வகையான அழுத்தங்கள் மாணவர்களின் மத்தியில் பிரயோகிக்கப்படுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கின்றனர். இவ்வகையான அழுத்த சூழலை உருவாக்கும் போட்டிப் பரீட்சை இச்சிறுவயதில் இம்மாணவர்களுக்கு முற்றிலும் அவசியமற்றது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஊடகங்களும் வர்த்தக நோக்கம் கருதிய கல்வி நிலையங்களும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபலப்படுத்தி உச்சபட்ச கொண்டாட்டங்களையும் வைபவங்களையும் ஏற்பாடு செய்யும் தருணத்தில் சித்தியெய்த தவறிய மாணவர்களின் உளப்பாங்கு பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. வர்த்தக நோக்கம் கருதிய கல்வி நிலையங்களின் போலி பிரசாரங்களினால் இப்பரீட்சையின் முக்கியத்துவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கற்பிதம் பெற்றோர் மத்தியில் உருவாக்கப்படுகிறது. இறுதியில், புலமைப் பரீட்சையில் சித்தியெய்துவது சமூக அடைவொன்றாக சித்தரிக்கப்படுகிறது.


புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் தமது எதிர்கால கல்வி அடைவுகளில் (க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரம்) எவ்வகையில் பிரகாசிக்கிறார்கள் என்பது தொடர்பில் போதியளவு புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டிருப்பதாக தெரியவில்லை. புலமைப் பரிசில் பரீட்சையில் காட்டப்பட்டு வந்த பிரத்தியேக அக்கறை அவர்களின் எதிர்கால கல்விச் செயற்பாடுகளிலும் பிரயோகிக்கப்படுகிறதா அல்லது ஆண்டு ஐந்திலேயே அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு அத்துடன் நிறைவு பெற்றுவிடுகிறதா? என்பது தொடர்பில் காத்திரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்னொரு கோணத்தில், ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் புதிய பாடசாலையொன்றில் சேர்க்கப்படும்போது அச்சிறுவயதினர் எதிர்நோக்கும் சூழல் மாற்றங்கள் அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


தாம் ஏற்கனவே ஐந்து வருடங்களாக இயைபாக்கம் பெற்ற நண்பர்கள், ஆசிரியர்கள் என்பவர்களை தவிர்ந்து முற்றிலும் புதியதான சூழல் ஒன்றுக்கு முகம் கொடுக்க இச்சிறார்கள் தலைப்படுகின்றனர். இது இவர்களின் கல்விச் செயற்பாடுகள் முன்னேற்றப் பாதையில் செல்வதில் பின்னடைவாக விளங்குகிறது.


சில சந்தர்ப்பங்களில் கிராம பாடசாலையில் இருந்து பிரபல நகரப் பாடசாலைகளில் இச்சிறுவர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் விடுதியில் தங்கி கல்வி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோரை விட்டு பிரிவது மற்றும் கிராம சூழலில் வளர்ந்த சிறார்கள் நகர சூழலில் வளர்ந்த சிறுவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதில் விளங்கும் இடர்பாடுகள், ஒவ்வாமைகள், பொருத்தப்பாடின்மைகள் காரணமாக இச்சிறுவயதினர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சிறுவர்களின் மனோபாவம் நெகிழ்தன்மை வாய்ந்தவை; காலப்போக்கில் சூழல் இசைவாக்கம் பெற்றுவிடுவர் என்றாலும் இவ்வகை தியாகங்கள் இச்சிறுவயதில் தேவைதானா எனும் கேள்வி எழுகிறது.


ஆண்டு ஐந்து புலமைப் பரிசிலின் பின்னர் பாடசாலை மாற்றம் காரணமாக சூழல் இயைபாக்கத்தில் சிரமங்களை எதிர்கொள்வது கிராமப்புற பாடசாலையிலிருந்து நகர்ப்புற பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் மாத்திரம் அல்ல. நகர்ப்புற பாடசாலையில் கல்விகற்று நண்பர் சூழலை ஏற்படுத்திக் கொண்ட பல மாணவர்கள் இன்னொரு நகர்ப்புற பாடசாலைக்கு மாற்றம் பெறும்போதும் உள ரீதியில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்கின்றது.   இவ்வாறு சிரமங்களை எதிர்நோக்கிய பல மாணவர்கள் மீண்டும் தாம் கல்வி கற்ற முன்னைய பாடசாலைக்கே மீளவும் திரும்புகின்ற நிலைமைகளையும் நாம் அவதானித்தே வருகின்றோம். புதிய பாடசாலை, புதிய நண்பர்கள் சூழலை ஏற்றுக் கொள்வதில் நெகிழ்தன்மையற்ற பிள்ளைகள் பெற்றோரை திருப்தி செய்வதற்காக மன அழுத்தங்களுடன் புதிய பாடசாலையிலேயே கல்வியை தொடர்ந்து வரும் நிலையும் காணப்படுகிறது. இவ்வகையான நெகிழ்தன்மையற்ற புதிய சூழலை எதிர்நோக்கும் பிள்ளைகளை  மீளவும் முன்னைய பாடசாலைக்கு சேர்ப்பதால் ஊராரின் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளாக வேண்டிவரும் எனும் தயக்கங்களுடன் பெற்றோரும் பிள்ளைகளை நிர்ப்பந்திக்கின்றனர்.ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையினால் ஏற்படும் பிரதிகூலங்களில் இன்னுமொன்று, பாடசாலைகளின் முன்னேற்றம் பின்தங்குதலாகும். பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் இணைவதால் குறித்த பாடசாலைகளின் கல்வித்தரமும் அடைவுமட்டங்களும் வருடந்தோறும் அதிகரித்துச் செல்லும் அதேவேளை திறமை மிகு மாணவர்களின் இழப்பினால் ஏனைய பாடசாலைகளின் முன்னேற்றம் பின்தங்கியே சென்றுகொண்டிருக்கும் நிலை ஏற்படுவது பாரியதொரு எதிர்விளைவாக அமைகின்றது.


க.பொ.த. சாதாரண மற்றும் உயர் தரங்களில் பிரபல பாடசாலைகளில் பெருந்தொகையான மாணவர்கள் சிறப்பு சித்திகளை பெறுவது தொடர்பில் சிலர் கருத்துத் தெரிவிக்கையில், புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலைக்கு தெரிவான மாணவர்களாலேயே பிரபல பாடசாலைகளின் நன்மதிப்பு அதிகரித்துச் செல்வதாக வாதிடுகின்றனர்.


வளம் குன்றிய பாடசாலைகள் தமது திறமை மிகு மாணவர்களை ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் பிரபல பாடசாலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதால், குறித்த பாடசாலைகளின் கல்வித்தர முன்னேற்றம் கனவாகவே போய்விடுகிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அனைத்து உட்கட்டமைப்பு வளங்களும் நிரம்பியதான பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம் அரசினால் வாக்களிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அமுலுக்குக் கொண்டுவரப்படவில்லை. இத்திட்டம் செயற்படுத்தப்படுமானால் ஆண்டு ஒன்றுக்கு பிரபல பாடசாலை நோக்கி படையெடுக்கும் பெற்றோர்களின் சிரமங்கள் எளிதாக்கப்படும். ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பின்னர் பிரபல பாடசாலை நோக்கி தமது பிள்ளைகளை வலிந்து திணிக்கும் இடர்பாடும் குறைக்கப்படும். அண்மையிலுள்ள பாடசாலையே பிரபல பாடசாலையாக மாற்றம் பெறும்போதே இவையனைத்தும் சாத்தியப்படுவதில் இடர்கள் இருக்காது.


பாடசாலை மற்றும் மாவட்டங்கள் வாரியாக பக்கச்சார்பாக கல்வித்தரங்களும் வளங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதே இப்பிரச்சினைகளின் பிரதான காரணியாக விளங்குகிறது.  சமத்துவமாக உட்கட்டமைப்பு வளங்களும் கல்வித்தரங்களும் பாடசாலைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்ப்படுமானால் பிரபல பாடசாலை நோக்கிய பெற்றோரின் படையெடுப்பு இழிவளவாக்கப்படும்; விளைவாக பிள்ளைகள் மீதான கல்வித் திணிப்புக்கள் குறைவடையும்.


ஹஸன் இக்பால் 
 (விடிவெள்ளி 20.10.2017)

புலமைப் பரிசில் பரீட்சை | மன அழுத்தங்களுக்கு வித்திடும் கல்வித் திணிப்பு. புலமைப் பரிசில் பரீட்சை | மன அழுத்தங்களுக்கு வித்திடும் கல்வித் திணிப்பு. Reviewed by Madawala News on 10/23/2017 12:38:00 PM Rating: 5