Ad Space Available here

ஆதவன் பாடல், மாலைஅணிவிப்பு, இசை நிகழ்ச்சி போன்ற மூடச்சடங்குகள் எதுவுமின்றி கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் களம் காணப்போகும் முதலாவது தேர்தல்.!


பாரம்பரிய அரசியல், முஸ்லீம் அரசியல் என்ற போர்வையில் அநியாயமும் சமூகத்தை விற்றுப்பிழைப்பு நடாத்தும்
அசிங்கமும் அல்லாஹ்வை  மறந்த ஆட்டமும் நிறைந்த அரசியல் பாணிகளால் மனதார வெறுத்தும் ஒதுங்கியும் காணப்பட்ட  பொது மக்கள், தற்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சையும் சிறு சிறு எதிர்பார்ப்பையும் வெளியிடத் துவங்கியுள்ளனர்.

சிறந்த சமூகப்பற்றும், தூரநோக்குடனான சமகால, எதிர்கால அரசியல் சிந்தனையும்கொண்ட நன்மனிதர்களை எம் சமூகம் எதிர்பார்த்துத் தேடிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதிகாலை நேரத்துப் பகலவனைப் போல் மக்களின் மனக்கண் முன் பளிச்சிடுபவர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் என்றால் அதில் மிகையில்லை. எதிர்காலத்தில் எமது அரசியல் களம் முஸ்லிம் சமூகத்துக்கு பல சவால்களுடன் காத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சமூகத்தின் உரிமைகளை முன்னிலைப்படுத்தி, அழ்ழாஹ்வின் மீது "தவக்கல்" வைத்து நெஞ்சுறுதியுடன் செயற்படுகின்ற மிகச்சிலரில் இவரும் ஒருவர்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக அண்மையில் முஸ்லீம் காங்கிரஸின் தலைவரினால் இவர் நியமனம் பெற்றதற்கும் இதுவே முதன்மைக்காரணம் எனலாம். இத்தனைக்கும் இவரது அரசியல் பயணம் ஆரம்பித்து வெறும் ஐந்து வருடங்களே. இவருடைய இந்தக் குறுகியகால அரசியல் வாழ்க்கையில் இவர் சாதித்தது ஏராளம் என்றாலும் மிகையாகாது.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல சாதிக்க வேண்டும் என்று களமிறங்கிய ஒரு சாதனையாளனுக்கு சிறியதொரு சந்தர்ப்பம் போதுமானது. அந்த வகையில்தான் மிகவும் குறுகிய கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் தன்னுடைய மகத்தான மக்கள் சேவையின் பலனாக பன்னெடுங்கால வரலாறுகொண்ட அரசியல் ஜாம்பவான்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு மக்கள் மனதில் முக்காலமும் நீங்காத இடம்பிடித்த ஒரு சாதனையாளனாக பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கை குறிப்பிடலாம்.

பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய அரசியல் கலாச்சாரமானது எம் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முன்மாதிரி அரசியல் முறைமை எனலாம், இதுவே  இன்றைய இளைஞர்களை, மார்கப்பற்றார்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது மட்டுமன்றி இன்றைய நாட்களில் மக்களிடம் அதிகம் பேசப்படும் ஒரு பிரதான விடயமுமாகியுள்ளது . மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் என்ற பொறுப்புமிக்க ஒரு பதவியினை கட்சியின் தலைமை பீடமே இவருடைய காலடியில் தேடிவந்து வழங்குவதற்கும் இதுவே காரணமாகவும் அமைந்திருந்தது.

முகத்தை அழகுறவைக்கும் நிரந்தரமான புன்னகை, சிறியோர் முதல் பெரியோர் வரைக்கும் சக மனிதர்களுடன் சகஜமாகப் பேசிப்பழகும் குணாதிசயம் ஆகிய இவையிரண்டுமே இறைவனின் புறத்திலிருந்து இவருக்கு கிடைத்த அருட்கொடைகள் என்று சொல்லலாம். தனிப்பட்ட வாழ்க்கையில்கூட யாருடைய கோபத்தையோ, சாபத்தையோ சம்பாதிக்காத ஒரு நேர்மைமிக்க மனிதர் என்பதற்கு அவருடைய இஸ்லாமிய வழிகாட்டல்களோடு பின்னிப்பிணைந்த திறந்த புத்தகமான வாழ்க்கைநெறி நம் எல்லோருக்குமே நல்லதோர் சான்றாகும்.

உதவி என்று தன்னை நாடிவருகின்ற மக்களை எந்நேரத்திலும் மலர்ந்த முகத்துடன் வரவேற்று, உபசரித்து அம்மக்களுடைய தேவைகளை, பிரச்சனைகளை தன்னுடைய தேவையாக எண்ணி காது தாழ்த்திக்கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் ஊட்டி அனுப்புகின்ற அருங்குணம் வாய்ந்த ஒருவரே இந்த ஷிப்லி பாரூக் என்பது அவரோடு தொடர்பிலுள்ள அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

இவை தவிர இன்றைய அரசியல் களத்தில் திரும்பும் பக்கமெல்லாம் குத்தும்வெட்டும் குழிபறிப்புக்களும் ஊழல், மோசடிகளும் பரவிக்கிடக்கும் முஸ்லீம் அரசியலில், மக்களின் பணத்திற்கு இச்சைப்படாத ஓர் நேர்மைமிக்க தலைவனாகவும் இந்த ஷிப்லி பாரூக்கை பார்க்க முடிகிறது. எங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து விடிவைப் பெற்றுத் தருவார்கள் என்று நாடாளுமன்றம் அனுப்பியவர்களெல்லாம் எம்மை ஏமாளிகளாக்கிவிட்டு பதவியில் சுகபோகம் அனுபவித்துத் திளைத்திருக்க, தன் சொந்த பணத்தில் வீதியை அமைத்துக்கொடுத்து மக்களுடன் மக்களாய் நின்ற ஓர் எளிமையான மனிதர் இவர். இதற்கு நல்லதொரு சான்றாக அமைந்தது கிழக்கு மாகாணசபைக்கு கடந்த ஐந்து வருட அமர்வுகளின் போது தன்னால் ஏற்பட்ட செலவினங்களை கணக்கறிந்து அந்த தொகையை அரசாங்கத்திற்கே மீள கொடுத்து விட்டு பதவியும் மக்கள் பணமும் அமானிதம் என அடுத்தவர்களுக்கும் உணர்த்திய தருணம்.

ஆதவன் பாடல், மலர் மாலை அணிவிப்பு, இசைநிகழ்ச்சிகள் என மூடச்சடங்குகள் எதுவுமின்றி முஸ்லிம் காங்கிரஸை முன்னேற்ற எத்தனிக்கும் இவரின் புதிய அரசியல் கலாச்சாரம் மக்களிடத்தில் எந்தளவு வெற்றிபெறும் என்பதனையும் அரசியல் அவதானிகள் உன்னிப்புடன் அவதானித்த வண்ணமே உள்ளனர். எதிர்வரும் காலங்களில் இடம்பெற இருக்கின்ற வட்டார முறைக்கான புதிய வியூகங்களையும், வேட்பாளர்களை இவர் தேர்வு செய்ய முற்படும் யுக்தியையும் ஏகப்பட்ட கட்சிகளின் தலைமைகள் வெகுவாகவே உற்றுநோக்குகின்றனர் எனலாம்.

ஏனென்றால் தெளிந்த மார்க்கப்  பின்னணி மற்றும் தனிமனித ஒழுக்க விழுமியங்களிலும் இவர் நேர்மையானவர் என மக்களால் ஏலவே இணங்காணப்பட்டுள்ளதால் எதிர்வரும் தேர்தலிலும் இவருடைய வேட்பாளர் தேர்வும் நேர்த்தியாகவே அமையும் என்பது மக்கள் கணிப்பு. அதை அண்மைய கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது வேட்பாளர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய இவரது நிலைப்பாடு பறைசாற்றியது எனலாம்,

இசை, பாடல்கள், இலவசங்கள், ஊழல் பணங்கள் என இவ்வளவு காலமும் எம் மக்களை அலங்கரித்து ஏமாற்றிவந்த வந்த தேர்தல் மேடைகள், இவை எதுவும் இன்றி, இதுவரை நடந்தேறிய சேவைகளை சாட்சிகளாகவும் இனி எதிர்காலத்து தேவைகளை வாக்குறுதிகளாகவும் கொண்டும் அலங்கரித்தல் என்பது பெரும் சவாலாகவே அமையும் இவர்களுக்கு.

மக்கள் மத்தியில் செல்வாக்குரீதியாக இவர் அங்கம் வகிக்கும் கட்சியும் பெரும்  சரிவை எதிர்கொண்டுள்ள போதிலும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் சேவைகள் என்பனவற்றை முதலீடாக்க்கொண்டே தன்னைச் சார்ந்தவர்களை களமிறக்கக் காத்திருக்கிறார் இந்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக். பொறுத்திருந்து பார்ப்போம் இறைவன் புறத்திலிருந்து இந்த நேர்மையாளனுக்கு கிடைக்கப்போகும் வெகுமானங்களையும் அதனால் நம் சமூகம் அடையப்போகும் நன்மைகளையும்...

(கட்டுரையாளர் காத்தான்குடி Feroz Mohamed )
ஆதவன் பாடல், மாலைஅணிவிப்பு, இசை நிகழ்ச்சி போன்ற மூடச்சடங்குகள் எதுவுமின்றி கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் களம் காணப்போகும் முதலாவது தேர்தல்.! ஆதவன் பாடல், மாலைஅணிவிப்பு, இசை நிகழ்ச்சி போன்ற  மூடச்சடங்குகள் எதுவுமின்றி கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் களம் காணப்போகும் முதலாவது தேர்தல்.! Reviewed by Madawala News on 10/18/2017 01:25:00 PM Rating: 5