Kidny

Kidny

இலத்திரனியல் அடையாள அட்டையும் தனிநபர் விபரங்களின் கசிவு அபாயமும் .


டெய்லிமிரரில் வெளியான கட்டுரை. தமிழில்: ஹஸன் இக்பால் 

ஆட்பதிவுச் சட்டத்தின் அண்மைய திருத்தங்களின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள
இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை செயற்திட்டம் தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  


இலத்திரனியல் அடையாள அட்டை எனும் கவர்ச்சிகரமான திட்டம் அதன் கீழுள்ள பாரதூர பின்விளைவுகளை வெளிக்காட்டாது திசைதிருப்புவதாக அமைந்துள்ளது எனவும், சேகரிக்கப்படும் ‘தரவுத் தளம்’ (database) தொடர்பிலே பாரிய ஐயப்பாடுகள் நிலவுவதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலத்திரனியல் ஆள் அடையாள அட்டையை பெறும் பொருட்டு விண்ணப்பதாரர் தொடர்பிலான பெருமளவிலான தகவல்கள்   விண்ணப்ப படிவங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு தரவுத்தளங்களில் சேமிக்கப்படவுள்ளன. மேலும் குறித்த நபரொருவர் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் வகையில் எந்தவோர் அரசாங்க அதிகாரியும் குறித்த தரவுத் தளங்களை பார்வையிடக் கூடிய வகையில் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.


இலத்திரனியல் அடையாள அட்டையை பெறும் பொருட்டு பிரஜைகளின் தனிநபர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உருவாக்கப்படும் குறித்த தரவுத்தளமானது, சுயலாபங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக வெளிநபர்களால் ஹேக் செய்யப்பட்டு (சட்டவிரோதமாக இணையத்தில் உள்நுழைந்து தரவுகளைத் திருடுதல்) துஷ்பிரயோகப் பாவனைக்கு உள்ளாக்கப்படக் கூடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். இதன் பிரகாரம் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கைப் பிரஜைகள் அனைவரினதும் தனிநபர் விபரங்களை உள்ளடக்கிய ‘தேசிய ஆள் பதிவு’ எனும் பாரிய தரவுத்தளமொன்றை உருவாக்கும் வகையில் அனைத்து பிரஜைகளையும் மீள் பதிவுக்குட்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


தனிநபர் விபரங்கள் திரட்டப்பட்டு, பாரிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டு 2018 இன் இறுதியில் அல்லது 2019 இன் ஆரம்ப பகுதியில் ‘தேசிய இலத்திரனியல் ஆள் அடையாள அட்டை’ (e-NIC) விநியோகிக்கப்படும் வரைக்குமான இடைக்கால தீர்வாகவே கடந்த மாதம் 27 இல் ‘ஸ்மார்ட் அடையாள அட்டை’  (Smart ID)  அறிமுகப்படுத்தப்பட்டது.


ஸ்மார்ட் அடையாள அட்டையானது, குறித்த நபரின் பெயர், பிறந்த இடம், முகவரி மற்றும் பாலினம் போன்ற விபரங்களை மூன்று மொழிகளில் கொண்டிருக்கும். மேலும் பிரத்தியேகமான பட்டிக்குறி (barcode) மற்றும் சர்வதேச நியமத்துக்கு அமைவான நபரின் புகைப்படம் என்பவற்றைக் உள்ளடக்கியிருக்கும். கடந்த ஒக்டோபர் 27 இற்குப் பிறகு புதிதாக ஆள் அடையாள அட்டை பெறுபவர்கள் மற்றும் ஆள் அடையாள அட்டையை புதுப்பிப்பவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.


பொதுமக்கள் அரசாங்க சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளல், தேசிய பாதுகாப்புத் துறைக்கு உதவுதல் மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை முன்வைத்து கடந்த அரசாங்கத்தினால் இலத்திரனியல் அடையாள அட்டை செயற்திட்டமானது முன்மொழியப்பட்டிருந்தது.
 துஷ்பிரயோகப் பாவனைக்கு தயங்கும் அரச அதிகாரிகள் மற்றும் நேர்மையான அரசியல்வாதிகளைக் கொண்ட அரசாங்கம் ஆகியவற்றை கொண்டிருக்கும் பட்சத்தில் மாத்திரமே இச்செயற்திட்டம் வினைத்திறன் மிக்கதாக அமையும் என மனித உரிமைகள் சட்டத்தரணியொருவர் (பெயர் குறிப்பிடாத வகையில்) சுட்டிக்காட்டுகின்றார். “இச்செயற்திட்டம் தொடர்பில் பாவனைத் துஷ்பிரயோகம் இடம்பெறுமாயின், பாரிய பின்விளைவுகளை அது ஏற்படுத்தும். மோசடி முறைகேடுகள் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுமாயின் வணிகர்கள், தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் அச்சங்களைத் தோற்றுவித்து விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றுவதற்கு வழிகோலும்” என மேலும் தெரிவிக்கின்றார்.


ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வியானி குணதிலக இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்றபோது “1972 இல் இருந்து அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொண்டோர் தொடர்பில் அடிப்படையான தகவல்களைக் கொண்ட தரவுத்தளம் ஒன்று ஏற்கனவே இருந்து வருகின்றது. ஆனால், தற்போதைய எமது திட்டம் என்னவென்றால் நாட்டிலுள்ள 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகள் பற்றிய முழுமையான தனிநபர் விபரங்களை மீள சேமிப்பதே ஆகும். இதற்கு தேவையான வகையில் ஆள் பதிவுச் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரதும் சுயவிபரங்கள், கைரேகை பதிவுகள் மற்றும் நியமமான புகைப்படம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ள சட்ட அதிகாரத்தை கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.


ஆள்பதிவுச் சட்ட மூலத்தின் திருத்தங்கள் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு செப்டெம்பர் மாத வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமுலுக்கு வந்துள்ளது. இத்திருத்தச் சட்டமூலம் தொடர்பிலான ஆள் அடையாள அட்டை பெறுவதின் புதிய ஒழுங்குவிதிகளின் பிரதிகூலங்கள் குறித்து எம்.ஆர். ரத்னசபாபதி எனும் கணக்காளர் ஒருவரினால்   வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் நவம்பர் 23 இல் உயர் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு கொண்டு செல்லப்படும். குறித்த முறைப்பாட்டில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் குணதிலக மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக
 குறிப்பிடப்பட்டுள்ளனர்.


குடும்ப மற்றும் தனிப்பட்ட விபரங்கள் 

நடைமுறைக்கு வரவிருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையைப் பெறுவதற்கு குறித்த நபரின் பெற்றோர், சகோதரர்கள், துணை, பிள்ளைகள் பற்றிய விரிவான தகவல்கள்  உள்ளிட்ட குடும்ப விபரங்கள் கொண்ட பாரிய விஸ்தீரணமான தரவுத்தளம் உருவாக்கப்படவுள்ளது.


மனித உரிமைகள் சட்டத்தரணி இதுபற்றிக் குறிப்பிடுகையில் “இது ஓர் அநாவசியத் தலையீடு” என வர்ணித்துள்ளார்.

இலத்திரனியல் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒரு நபர் பிள்ளைப்பேறு, திருமணம், விவாகரத்து, குடும்ப உறுப்பினரின் தற்கால பிரிவு, ஒதுக்கி வைப்பு போன்ற சந்தர்ப்பங்களில் தனியான பிரத்தியேக விண்ணப்பப் படிவம் மூலம் குறித்த தகவல்களை வழங்க வேண்டும்.  விவாகரத்தின்போது விவாகரத்து வழக்கு எண், தீர்ப்பு வழங்கப்பட்ட திகதி, விவாகரத்து நீதிமன்றம் போன்ற தகவல்களை பிரத்தியேக விண்ணப்பப் படிவங்கள் மூலம் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு சமர்ப்பித்தாக வேண்டும் என கூறப்படுகிறது.
“விவாகரத்து தொடர்பான தகவல்களை ஆட்பதிவுத் திணைக்களத்தின் தரவுத்தளம் கொண்டிருப்பது முறையற்ற ஒன்றாகும்.

ஏனெனில், இலங்கையில் பல விவாகரத்துக்கள் போலியான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே நடைபெறுகின்றன. இதன் மூலம் எந்தவோர் அரசாங்க அதிகாரியும் தனிநபர் தொடர்பில் விவாகரத்துக்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியுமாகிறது. தனிநபர் பற்றி வாழ்க்கைத் துணையால் சாட்டப்பட்டிருக்கும் அத்தனை விதமான முட்டாள்தனமான குற்றச்சாட்டுக்களையும் விவாகரத்து நீதிமன்றம் பதிவு செய்து வைத்திருக்கும். குறித்த நபர் அரசியல்வாதியாகவோ, அரசுக்கு எதிராக போராடுபவராகவோ இருக்கும் பட்சத்தில் பாரிய சவால்கள் தலைதூக்கக் கூடும்” என மனித உரிமைகள் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்ட பதிவாளரும் தமது பிரதேசத்தில் இடம்பெறும் பிறப்புக்கள், இறப்புக்கள், திருமணங்கள் தொடர்பிலான விபரமான அறிக்கையை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்பதிவு திருத்தச் சட்டமூலம் வலியுறுத்துகிறது. இவை மூலம் வம்சாவளி பற்றிய விபரமான தரவுத்தளம் ஒன்று கட்டியெழுப்பப்படும்.
அனைத்துப் பிரஜைகளினதும் வம்சாவளி, பரம்பரை தோற்றம் தொடர்பில் விபரங்கள் கோரப்பட்டு தரவுத்தளம் உருவாக்கப்படுவது எவ்வித நன்மைகளையும் விளைவிக்கப் போவதில்லை என குறித்த முறைப்பாட்டாளர் தனது முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 சுயலாபம் மற்றும் அரசியல் நோக்கங்களை கொண்ட வகையில் தனிநபர்களின் குடும்ப விபரங்கள் பாவனைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படும். தனிநபரின் முற்று முழுதான பரம்பரை வரலாற்று விபரங்கள் தொடர்பில் விரும்பிய எந்தவோர் அரசாங்க அதிகாரியும்அறிந்து கொள்ளக் கூடிய வழிவகைகளை குறித்த தரவுத்தள உருவாக்கம் ஏற்படுத்திக் கொடுத்து விடும். இவ்வாறு சேகரிக்கப்படும் தனிப்பட்டதும் இரகசியமானதுமான தகவல்களைக் கொண்ட தரவுத்தளம்,  மூன்றாம் நபருக்கு அடைய முடியாத வகையில் போதிய பாதுகாப்புக்களை கொண்டதல்ல.


பரம்பரை தொடர்பிலான தகவல்கள் சேகரிப்பின் அவசியம் குறித்து ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளரிடம் வினவப்பட்டபோது ஆள் அடையாள நோக்கங்களுக்காக பரம்பரை பற்றிய தகவல்கள் தேவைப்படும் பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

சேகரிக்கப்பட வேண்டிய விபரங்கள் வரையறுக்கப்படவில்லை
தனிநபர்களின் விபரங்களைத் திரட்டி ‘தேசிய ஆட்பதிவு’ எனும் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கிப் பராமரிக்குமாறு ஆட்பதிவுத் திருத்தச் சட்டமூலம் ஆட்பதிவு ஆணையாளருக்கு பணித்துள்ளது. எனினும் குறித்த ஆட்பதிவு திருத்தச் சட்டமூலம் தனிநபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட வேண்டிய தகவல்களை வரையறுக்கவில்லை. மாறாக, ஆட்பதிவு ஆணையாளர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் விரும்பும் எந்தவொரு தகவலையும் விண்ணப்பதாரர் வழங்கியாக வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு இது இட்டுச் செல்லும் என குறித்த முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

தனிநபர் விபரங்களை மையப்படுத்துதல் 

 பிரத்தியேக சுட்டிகளை உள்ளிடுவதன் மூலம் பிரதான தரவுத்தளத்திலிருந்து எந்தவொரு பிரஜையினதும் அல்லது குடும்பத்தினதும் முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தனித்தனி தரவுகள் இணைக்கப்படும் என முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டுகிறார்.


அதாவது, வாகன இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் வாகன உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான முற்று முழுதான விபரங்களை பெறக் கூடியதாக இருக்கும். அதே போன்று தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் நபரினது தனிப்பட்ட, குடும்ப விபரங்கள் அனைத்தும் பெறப்பட முடியும்.

தனிப்பட்ட விபரங்கள் கசியக் கூடும்

தரவுத்தளம் போதிய பாதுகாப்புக்களை கொண்டிராததால் இலகுவாக ஹேக் செய்யப்படக் கூடும். பாவனைத் துஷ்பிரயோகம் தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. தனிநபர் விபரங்கள் கசியவோ அல்லது ஹேக் செய்யப்படவோ பெருமளவிலான வாய்ப்புக்கள் உள்ளன. அரச அதிகாரியொருவருக்கு இலஞ்சம் வழங்கி, குறித்த நபர் தொடர்பிலான தனிப்பட்ட சொந்த விபரங்களை அவரது எதிரிகள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடும். உதாரணத்துக்கு காணி எல்லை விவகாரம் தொடர்பில் சணடையிட்டுக் கொண்டிருக்கும் இரு அயலவர்களைக் குறிப்பிட முடியும்.
நாட்டின் அத்தனை பிரஜைகளினதும் தனிநபர், சொந்த விபரங்களை உள்ளடக்கும் குறித்த தரவுத்தளம் மற்றும் அதற்கான மென்பொருள் எவராலும் ஊடுருவி ஹேக் செய்ய முடியாத வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.


“சட்டவிரோதமான முறையில் தரவுத்தளத்தின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையில் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் பலவற்றை உள்ளடக்கியதாக குறித்த மென்பொருள் வடிவமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க, குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் நோக்கங்களுக்காக எந்தவொரு பிரஜையினதும் தனிப்பட்ட விபரங்களை வெளிப்படுத்த ஆட்பதிவு ஆணையாளர் அதிகாரங்களைக் கொண்டுள்ளார் என ஆட்பதிவுத் திருத்தச்சட்டமூலம் தெரிவிக்கின்றது.


குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தனிநபர் விபரங்களை பகிரங்கப்படுத்துதல் தொடர்பில் நிலவும் சர்ச்சைகள் பற்றி மனித உரிமைகள் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். “குற்றத்தை தடுக்கும் நோக்கில் தனிநபர் விபரங்களை பகிரங்கப்படுத்துவதா? குற்றமொன்றை தடுக்கும் நோக்கில் குறித்த நபர்கள் தொடர்பில் தனிப்பட்ட விபரங்கள் வேண்டும் என பொலிசார் தெரிவிக்கலாம். குற்றம் நடைபெறாத சமயத்தில் கூட இவ்வாறான கோரிக்கையை பொலிசார் முன்வைக்கலாம். குற்றாவாளி அல்லது சந்தேக நபராகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டுப் பிரஜையின் தனிப்பட்ட விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு குறித்த பிரஜை குற்றவாளியாகவோ அல்லது சந்தேக நபராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

 குற்றம் ஒன்று நடக்கப் போகிறது; அதனைத் தடுத்து நிறுத்த இன்னார்களின் தனிப்பட்ட விபரங்கள் தேவை எனக் கூறி எந்தவொரு பிரஜையினதும் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படக் கூடும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.      
தகவல்கள் கோரப்படும் இடத்தில் மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் இல்லை.  “உதாரணமாக, ‘உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பில் மக்கள் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதில் இருந்து தடுக்க, வாகன உரிமையாளர்கள் மற்றும் அவர்களினால் செலுத்தப்படும் வரி வருமானங்கள் தொடர்பான விபரங்களை பொலிசார் கோரக் கூடும். இது ஏற்புடையதா?
ஆட்பதிவுத் திணைக்களம் என்பது பிரஜையின் அடிப்படை விபரங்களை வெளிக்காட்டும் வகையிலான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கென உருவாக்கப்பட்ட அரச திணைக்களமாகும். காத்திரமான எந்தவொரு நோக்கத்திற்காகவுமின்றி, ஏனையோருக்கு பகிரங்கப்படுத்தக் கூடிய அச்சுறுத்தல்களைக் கொண்ட வகையில் பிரஜையின் தனிப்பட்ட விபரங்களை சேகரிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தற்போது அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.


தசாப்த காலத்துக்கு முன் அனைத்து பிரஜைகளினதும் கைவிரல் அடையாளங்கள் சேகரிக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இருந்தது. எனினும், பிரஜைகளின் தனிநபர் உரிமை மீறலாக அது கருதப்பட்டமையால் நாம் அத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அடையாள அட்டை விண்ணப்பதாரியின் விருப்பத்திற்கு மாறாக தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட

மாட்டாது என ஆட்பதிவு ஆணையாளர் வியானி குணதிலக உறுதியளித்துள்ளார். தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களை விடுத்து பலபோது குறித்த நபர் தொடர்பான விடயங்களின் உத்தியோகபூர்வ தன்மை பற்றி உறுதிப்படுத்த மாத்திரமே தன்னால் முடியும் என கூறுகின்றார். “அரசாங்க அதிகாரியொருவர் ‘குறித்த அடையாள அட்டை இலக்கம் குறித்த நபருடையதா?’ என விசாரிக்கும்போது என்னால் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிப்பதற்கு மாத்திரமே அதிகாரம் உள்ளது” என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் வியனி குணதிலக விளக்குகின்றார்.

(விடிவெள்ளி 17.11.2017)

இலத்திரனியல் அடையாள அட்டையும் தனிநபர் விபரங்களின் கசிவு அபாயமும் . இலத்திரனியல் அடையாள அட்டையும்  தனிநபர் விபரங்களின் கசிவு அபாயமும் . Reviewed by Madawala News on 11/19/2017 08:27:00 PM Rating: 5