Ad Space Available here

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சாய்ந்தமருது பிரகடனம் முழு விபரம்.


சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்படும் வரை சாய்ந்தமருதில் அரசியல்
கட்சிகளின் செயற்பாடுகளுக்கு முற்றாக தடை விதிக்கப்படுவதுடன், எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் பெரிய பள்ளிவாசல் தலைமையின் கீழ் சுயேட்சைக் குழுவை களமிறக்குவது எனவும், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படும் தனி நபர்கள் அனைவரும் ஊர்த் துரோகிகளாக கருதப்படுவர் எனவும் வலியுறுத்தும் சாய்ந்தமருது பிரகடனம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஏகானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த மூன்று நாள் ஹர்த்தால், கடையடைப்பு, சாலை மறியல், சத்தியாக்கிரக போராட்டங்களின் இறுதி அங்கமாக நேற்று புதன்கிழமை மாலை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் முன்றலில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் சாய்ந்தமருது பிரகடன நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சலீம் ஷர்க்கியினால் ஒன்பது தீர்மானங்கள் அடங்கிய சாய்ந்தமருது பிரகடனம் வாசிக்கப்பட்டு, திரண்டிருந்த மக்களின் "நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர்" கோஷத்துடன் நிறைவேற்றப்பட்டது.

சாய்ந்தமருதின் மூன்று தசாப்த கால கோரிக்கையான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு, தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரூடாக உரிய கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அவர்களினால் நம்பிக்கையூட்டும் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு, துரோகமிழைக்கப்பட்டு ஒரு துர்ப்பாக்கியகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது மக்கள் உணர்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்வூரின் பொதுமக்கள் வீதிக்கு வந்து மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் விதமாக கட்சித்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பான அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுந்த பதிலை இதுவரை வழங்காததன் பின்னணியில், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைமையின் கீழ் உலமாக்களும், வர்த்தக சமூகமும், அனைத்து சிவில் மற்றும் இளைஞர் அமைப்புக்களும் பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சாய்ந்தமருதுப் பிரகடனம் நிறைவேற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன,

1. தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாட்டின் ஒற்றுமைக்கும், இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம் பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்வோம்

2. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதியாக தெளிவுபடுத்துகின்றோம்.

3. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படும் வரை சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களின் எல்லைக்குள் அனைத்து அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.

4. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, நடைபெறும் சகல தேர்தல்களிலும் பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.

5. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை சாய்ந்தமருது - மாளிகைக்காடு எல்லைக்குள் இடம்பெறுகின்ற எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.

6. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.

7. சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளூராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி கல்முனையை ஒரே நேரத்தில் நான்காகப் பிரித்தே சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.

8. இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.

9. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனி நபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.

இவ்வாறு சாய்ந்தமருது பிரகடன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சாய்ந்தமருது பிரகடனம் முழு விபரம். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சாய்ந்தமருது பிரகடனம் முழு விபரம். Reviewed by Madawala News on 11/02/2017 11:28:00 AM Rating: 5