Kidny

Kidny

கருப்பாடுகள் கவனத்துக்கு....சாய்ந்தமருது பிரதேச சபை பெற்றுக்கொள்வதற்காக ஊர்மக்கள் பலவகையிலும்
போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில் அதனை  மலினப்படுத்துமுகமாக பிறந்தமண்ணின் மைந்தர்கள் சிலர் மேற்கொண்டுவரும் விரும்பத்தகாத செயற்பாடுகள் கவலை தருவதாக உள்ளன.

ஒரு ஊரின் உரிமையை வெற்றிகொள்ள வேண்டுமெனில் அவ்ஊரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும் அதற்காக உழைப்பது கடமை.அவர் செய்யட்டும் ,இவர் செய்யட்டும்  என விட்டுவிட்டு நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.

 வெறும் நாற்சந்திக்குள் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று பல சவால்களையும்,தடைகளையும் தாண்டி முழு இலங்கைக்கும் ,சர்வதேசத்துக்கும் தமது செய்தியை சொல்லியிருக்கிறது என்றால் இதன்பின்னால் மிகப்பெரிய தியாகத்தை ஊர்மக்கள் செய்திருக்கிறார்கள்.

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தேவையென்பதை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பும் இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அதுதொடர்பில் பேசுவதற்காக பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரும் கரிசனை காட்டத் தொடங்கியுள்ளனர்.

இப்படி அனைத்து வழிகளும் எமக்குச் சார்பாக திறக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தங்களையும் ஊர்பற்றாளர்கள், போராளிகள்  என இனம் காட்டிக்கொண்டு  பிறந்தமண்ணுக்கு எந்தவித அரசியல் உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது  என்பதற்காக உள்ளரங்கத்தில் பரிமாறப்படும் தகவல்களை தடுக்கநினைக்கும் அரசியல் வாதிகளின்  காதுகளில் எத்திவைத்து  ஒருசிலர் தங்களை எட்டப்பர்களாக மக்கள்முன் அடையாளம் காட்டிக்கொண்டுள்ளனர்.

இவ்வளவு காலமும் மக்கள்    இவர்கள்மீது   வைத்திருந்த மதிப்பும் ,மரியாதையும்  ஒருகணப் பொழுதில்  இவர்கள் செய்த காரியத்தால்
சிதைந்துபோய் "துரோகிப்பட்டம்" சூட்ட ஏதுவாக அமைந்துள்ளது.

உண்மையில் ,  யாராக இருப்பினும் ஊருக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது தனது கட்சி நலன்களை உதறித்தள்ளிவிட்டு ,இலாபநட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு முன்நோக்கி வருபவரே உண்மையான சமூகப்பற்றாளராவார்.அதை செய்யாமல் போலியாக மக்கள் மத்தியில் தன்னை ஊர் அபிமானி என அடையாளப்படுத்திக்கொண்டு, விளம்பரம் தேடுவதற்காக வீதிகளில் மக்களோடு மக்களாக போராட்டங்களில்  கலந்துவிட்டு, தன்னைப் பற்றி  மக்கள் பேசவேண்டும் என்ற ஒரேயொரு குறுகிய சிந்தனையுடன் செயற்படுகின்றவர்களின் உள்மனம் எவ்வகையானது என்பதை இறைவன் வெளி்ப்படுத்திவிட்டான்.

உலகத்தில் பல போராட்டங்கள் தோல்வியில் முடிந்ததற்கும் ,பலவீனப்படுத்தப்பட்டதற்கும் கூடவே ஒன்றாக இருந்து நம்பிக்கை வைக்கப்பட்டவர்களின் காட்டிக் கொடுப்புக்களும், குழிபறிப்புக்களும் பிரதானமாக இருந்துவந்துள்ளதை நாம் அறிவோம்.

 ஆகவே தயவுசெய்து இனிமேலும் பிறர்போடும் பிச்சைக் காசுகளுக்காகவும்  குறுகிய சுயலாபங்களுக்காகவும் ஒரு பிரதேசத்தின் உரிமைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து கொச்சைப்படுத்தாதீர்கள்.

சமூகத்தில் மதிப்புமிக்க பட்டம் பதவிகளில் இருக்கக்கூடிய உங்களை கௌரவப்படுத்தி அழகுபார்ப்பதும் நீங்கள் துரோகம் செய்ய நினைக்கும் பிறந்த ஊர்தான் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
நாளை உங்கள் பிள்ளைகளும் ,அவர்களின் சந்ததிகளும் சுதந்திரமாக வாழப்போகும் இம்மண்ணிற்கு நீங்கள் போராடாவிட்டாலும் பரவாயில்லை.உபத்திரவம் செய்யாமல் இருங்கள் .
வரலாறு உங்களை மன்னிக்கும்.
   
A.B.M.Azeem
Sainthamaruthu.

கருப்பாடுகள் கவனத்துக்கு.... கருப்பாடுகள் கவனத்துக்கு.... Reviewed by Madawala News on 11/16/2017 01:34:00 PM Rating: 5