Kidny

Kidny

எமது சமூகத்தில் உள்ள ஆளுமைகளின் மௌனமும், வெற்றிடமும்!


இலங்கையை பிறப்பிடமாகவும், எங்கோ ஒரு  ஊரினை வாழ்விடமாகவும் கொண்ட
மனிதர்களாகிய நாம், பல்வேறு இன மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறோம்.

பல தசாப்தங்களை இவ்வூரில் கடத்திக்கொண்டிருக்கும் நாம் நண்பர்களாக, சகோதரர்களாக, குடும்பங்களாக, அயலவர்களாக பல மக்களை உள்வாங்கி தனித்துவமான, தன்னிகரற்ற பல அம்சங்களையும், வளங்களையும் வரப்பிரசாதமாக அனுபவிப்பதில்  சந்தேகமில்லை. எமது முன்னோர்கள் அமைத்துத்தந்த இவ் வளங்களையும், வசதிகளையும், அவர்களின் ஆலோசனைகளும், நாம் அனுபவிக்கும் காலம் எல்லாம் அவை நன்மைகளாக மாற்றப்பட்டு அவர்களிற்கு கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


எங்களில் ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய ஆற்றல்கள், திறமைகள் வித்தியாசமானதே. தனக்குள் இருக்கும் திறமைகளை சிலர் இனங்கண்டு அதில் பயணிக்கின்ற போதும், பலரும் தம்மை இனங்காணாமல் தனக்கு கிடைத்த ஏதோ ஒரு வாய்ப்பை பயன்படுத்தி அதனை தனது வாழ்க்கை நிலைக்கு ஏற்றவாறும், குடும்ப சுமையினை இறக்கி வைப்பதில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள்.


எவ்வாறான சூழ்நிலைகள், கஷ்டங்கள், வறுமை, என்பன இருந்த போதும் தன்னுடைய ஆற்றலுக்கும், பேரார்வத்திற்கும் முன்னுரிமை வழங்கியதன் மூலமும், எல்லாவிதமான சவால்களையும் நேர முகாமைத்துவத்துடன் எதிர்கொண்டதன் விளைவாக சில ஆளுமைகளை எங்கள் பிரதேசம் அல்லது ஊர் கண்டுள்ளது. இவர்கள் உள்ளூரிலும், அல்லது தமது சேவை / வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து வெளியூர்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ் ஆளுமைகளின் அறிவுறுத்தல்கள், வாழ்க்கைப்பாடம் என்பன எங்களது ஊரின் இளைஞர் யுவதிகளிற்கு படிப்பினையாக அமைய வேண்டும். இதற்காக அவ் ஆளுமைகள் தம்மாலான செயற்பாடுகளையும், அறிவையும் வழங்கி எங்களை நெறிப்படுத்தி ஒரு சிறந்த பிரஜையாக எங்களை இந்த ஊரிற்கும், நாட்டிற்கும் சேவையாற்ற உருவாக்க வேண்டும்.


இன்றைய இளைஞர்கள், யுவதிகள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள், சவால்கள் எமக்கு தெரியாமலில்லை. இவர்கள் தங்களது வாழ்வில் பெரிதும் தோல்வியடைந்தவர்களாகவும், எந்தவொரு இலட்சியம் இல்லாமல் பயணித்து மனம் போனபோக்கில் வாழ்வதை தினமும் காண்கிறோம். அதேபோல், இன்றைய உலகமும், சூழலும் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தின் விளைவுகள் இளைஞர், யுவதிகளிற்கு அதிகம் கேடு விளைவிப்பதாகவே இருக்கின்றது. இவர்களை நெறிப்படுத்தவும், தேவையான அறிவுறுத்தல்களை, பயிற்சிகளை, ஊக்கங்களை வழங்குவதற்கு இந்த ஆளுமைகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். எல்லாப் பெற்றோர்களும் தமது பிள்ளையின் ஆற்றலை, திறமையினை, தேவையினை உணர்ந்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும் யுக்திகளை அறியாதவர்கள். அந்தப் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் எவ்வாறு வரவேண்டும், என்ன அடைவை, இலச்சியத்தினை அவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியாதவர்களே அதிகமாகும்.


5 வயது முதல் சரியாக பாடசாலைக்கு அனுப்பினால் போதும் என்று அவர்கள் நினைத்தாலும், குழந்தை எவ்வாறான செயற்பாடுகளில், விடயங்களில் அதிகம் திறமை கொண்டவர்களாக இருக்கின்றார்கள், அவர்களின் தேவை என்ன என்றும் அறிவுறுத்த தெரியாத பெற்றோர்களே எமது ஊர்களில் அதிகமாக இருக்கின்றார்கள். ஆகவே இவ் இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்துவதற்கு எமது ஆளுமைகளின் தேவை இன்றியமையாததாகும்.
இன்றைய இளைஞர் யுவதிகளும் தம்மால் முடிந்தவரை பாடசாலைக் கல்வியினை தொடர்ந்து விட்டு இப்போது என்ன செய்வது? எனது இலட்சியம், குறிக்கோள் என்ன? சிறந்த தகுதியான மனிதனாக எவ்வாறு வாழ்வது என்ற விடயங்களை அறிந்துகொள்ளாமல் விரக்த்தியில் வாழ்வதும், பல கெட்ட, தீய செயல்களில், வீணான காரியங்களில் அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் வாழ்க்கையினை போக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களிற்கான ஆலோசனைகள், வழங்கப்பட வேண்டும். மனதினை ஒரு நிலைப்படுத்தி எவ்வாறு திறமையான மனிதனாக, சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்ற படிப்பினைகள் வழங்கப்பட வேண்டும்.


இதன் ஒரு பகுதியாக, இன்று எமக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த சமூக வலைத்தளம் போன்ற  சேவைகளை குறிப்பிடலாம். முன்னைய காலங்களில் ஒரு விடயத்தினை பல பேருக்கு சொல்வதாக இருந்தால் ஒரு கூட்டம் கூட்ட வேண்டும் அல்லது Mass Medias (பத்திரிக்கை, ஒளி, ஒலி) மூலம் தோன்றி கருத்துக்களை சொல்லவேண்டும். அதேபோல் இவ்வாறான விடயங்களிற்கு பெருமளவு பணத்தினையும் செலவழிக்க வேண்டி இருக்கும். ஆனால் அந்நிலை இப்போது முற்றாக மாறியுள்ளது.

Computer, Smart Phones, Internet வசதிகள் மூலம் எமது எண்ணங்களையும், பதிவுகளையும் சில நொடிக்குள் பல ஆயிரம் மனிதர்களுக்கு மத்தியில் பகிர்ந்துகொள்ள முடியும். இன்றைய காலத்தில் Facebook, WhatsApp, YouTube, Websites பயன்படுத்தாத யாருமே இல்லை என்றே சொல்லலாம்.

குழந்தைகள் முதல் அனைவரும் தினந்தோறும் இதன் பயன்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான தொழிநுட்ப வளர்ச்சியின் பாதகமான, பிரயோசனமற்ற பக்கத்தினையே இன்றைய இளைஞர், யுவதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

* அரபு, இஸ்லாம் என்று கூறி கண்டவைகளையெல்லாம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

* தனது கண்ணுக்கு தெரிந்த அனைத்தையுமே share செய்வதில் பயனில்லை என்ற எண்ணம் அவர்களின் நினைவிற்கு வருவதே இல்லை.

* சினிமாப் பிரபலங்களையே அதிகமாக இன்றைய இளைஞர் யுவதிகள் நேசிப்பது பெரும் கவலையாக இருக்கின்றது. அவர்களிற்காக சண்டையிடுவதும், அர்ப்பணிப்புகளை இஸ்லாத்தினை மறந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

* படங்கள் மூலம் படிப்பினைகள் இருந்தாலும் அவை வெறும் மாயமே. எங்கோ ஒன்றிரண்டு உண்மைகள் இருப்பதற்காக அதனை மூச்சாக சுவாசிப்பதும், அதிலேயே எமது நேரத்தினை செலவழிப்பதில் இந்தப் பயனுமில்லை.

* அதேபோல் பாடல் / இசை என மூழ்கி மெய்மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றது ஒரு பெரிய கூட்டம்

* பெண்கள்/ வேறு பெயர்களிலும் போலி முகநூல், Twitter கணக்குகளை ஏற்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி சுகம் காண்கிறது ஒரு கூட்டம்.

* Like, Comment, Share வரவேண்டும் என்பதற்காக Selfie  மோகத்திலும் பலர் இருக்கின்றார்கள்

* இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத விடயங்களில் கரிசனை செலுத்துவது மட்டுமல்லாது, எங்கோ ஒரு பெயர் தாங்கி முஸ்லீம் தனது பிழைப்பிற்காக செய்யும் விடயங்களை இங்கே நாமும் சரிகண்டு அதில் ஊறிப்போயிருக்கின்றோம்.


 சமூக வலைத்தளங்களில் நடக்கும் அநியாயங்களை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.இவர்களை இதே Social மீடியாக்கள் மூலம் நெறிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளுமைகளின் பங்களிப்பும் உள்ளது.


ஆளுமைகள் தங்களின் வாழ்க்கையின் படிப்பினைகளையும், பல அறிவுறுத்தல்களை, ஆலோசனைகளை, தனது வாழ்வில் எதிர் நோக்கிய சவால்கள், இலட்சியங்கள் போன்ற விடயங்களை இக்கால இளைஞர்களிற்கும், யுவதிகளிற்குமான பதிவுகளாக, ஒளி, ஒலி வடிவங்களாக பகிர்ந்துகொள்ளலாம். இதன்மூலம், எமது ஊரில், எமது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் எவ்வாறு தன்னை இப்படியான ஒரு ஆளுமையாக மாற்றிக்கொண்டார்? எப்படியான வாழ்க்கைத் தத்துவங்களை அவர் ஏற்று இந்த நிலைக்கு வந்தார்? போன்ற குறிப்புகள், தகவல்கள் எமது ஊரில் வாழக்கூடிய இளம் சமுதாயத்தினருக்கு படிப்பினையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


அதேபோல் ஆளுமைகள் தேர்ச்சிபெற்ற துறைகளில் உள்ள அனுபவங்களையும், அதன் நிலவரங்களையும், இளைஞர், யுவதிகளிற்கு வழங்குவதன் மூலம், தங்களிற்கு பயணிக்க முடியுமான துறை என்ன? என்பதனை அவர்கள் விளங்கி பயணிக்க முடியுமாக இருக்கும். உலக தரத்தில் உள்ள சவால்களை எப்படி சமாளிப்பது, எதிர்கொள்வது என்ற போதனைகள் இவர்களிற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தகமில்லை. இஸ்லாத்தில் ஆகுமான எல்லாத்துறைகளையும் சேர்ந்த ஆளுமைகள் இதற்காக முன்வர வேண்டும்.


ஆளுமைகளே. தங்களுக்கு கிடைக்கக்கூடிய நேரங்களை இவ்வாறான பதிவுகளின் மூலம் எம்மில் இருக்கும் திறமைகளை வெளிக்கொனரவும், இந்த சமூகத்திற்குத் தேவையான பல்வேறுபட்ட ஆளுமைகளை உருவாக்குவதற்கான அடித்தளங்களை தயவு செய்து அதிகமாக்குங்கள். தேங்கிக்கிடக்கும், வழிதவற காத்திருக்கும் எம்மில் பலருக்கு உங்கள் வாழ்க்கை, கட்டளைகள் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

-Mihwar A. Mahroof -

எமது சமூகத்தில் உள்ள ஆளுமைகளின் மௌனமும், வெற்றிடமும்! எமது சமூகத்தில் உள்ள ஆளுமைகளின் மௌனமும், வெற்றிடமும்! Reviewed by Madawala News on 11/27/2017 08:47:00 PM Rating: 5