Kidny

Kidny

கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடம் என்ன?


காலி கிந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல் காரணமாக பலரது சொத்துக்களும்
உடைமைகளும் சேதமாக்கப்பட்டு முழு நாடும் பேசுகின்ற ஒரு விடயமாக இப்போது மாறியுள்ளது.

நல்லாட்சி அரசில் சிறுபான்மை சமூகமொன்று எதிர்பாராத மற்றறொரு தாக்குதலாக இந்த கலவரத்தை குறிப்பிடலாம்.

வழமையாக நடைபெறுகின்ற ஒரு விபத்தை பெரிதாக்கி இக்கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐம்பத்திற்கு மேற்பட்ட வீடுகள் வியாபார நிலையங்களும் வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

பல முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து வெளியேறி உயிர்களை பாதுகாத்துகொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த வன்செயல் இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஒரு வீதி விபத்தே இந்த கலவரத்துக்கு உடனடி காரணமாக இருக்கின்றது.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம் சுமுகமாக தீர்க்கப்பட்ட பின் மீண்டும் இது கலவரமாக மாறியது ஏன்? என்ற கேள்வி இப்போது பரவலாக கேட்கப்படுகின்றது.

 ஆரம்பசம்பவத்திற்கு பிறகு விசேட அதிரடி படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விசேட அதிரடி படையினரை அகற்றி சில மணி நேரங்களில் முஸ்லிம் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருந்தன.

இவ்வளவு அவசரமாக விசேட அதிரடி படையினர் அகற்றப்பட்டது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுப்பப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல மக்கள் தமது வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்படும் போது பொலிஸாரும் அதிரடி படையினரும் கைகட்டி பார்த்துகொண்டிருந்தனர் என்று அங்கு விஜயம் மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமன்றி சில வர்த்தக நிலையங்கள் வீடுகள் பாதுகாப்பு தரப்பினராலேயே தாக்குதலுக்கு உள்ளானதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்களவர் சிலரும் இதனை உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளனர். அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி இன மோதலை உருவாக்கி நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குவதே இந்த தாக்குதலின் பின்னணி என சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதேசத்திலுள்ள துபாராம விகாரையில் கூடியவர்களே கூடி தீர்மானம் எடுத்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இரண்டு பௌத்த பிக்குகள் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களாக இந்த விகாரையில் கூடி இவ்வாறானதொரு கலவரத்தை திட்டமிட்டிருப்பதாக பொலிஸ் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.


அவ்வாறாக இருந்தால் பொலிஸ் புலனாய்வு பிரிவு என்ன செய்தது என்ற கேள்வி இப்போது எழுப்பப்படுகின்றது. கடந்த நான்கு, ஐந்து நாட்களாக இரு சமூகங்களுக்கிடையே மனக்கசப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில் புலனாய்வுத்துறையினர் விழிப்பாக இருந்திருந்தால் இவ்வாறானதொரு கலவரம் ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். பாதுகாப்பு தரப்பினர் எதிர்காலத்திலாவது இவ்வாறான விடயத்தை விழிப்போடு செயற்படுவது அவசியம் என ட்டிக்காட்ட விரும்புகிறோம். இங்கு சுட்டிக்காட்டப்படும் மற்றொரு சம்பவம் இந்த சம்பவம் நடைபெற்ற போது கொழும்பிலிருந்து முஸ்லிம் தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக அங்கு சென்றனர்.


 மக்களுக்கு ஆறுதலையளிக்கும் ஒரு செயற்பாடாக இரு இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் இத்தலைவர்களது விஜயத்தை சந்தேகங்கொண்டு பார்க்கின்ற ஒரு நிலை ஜிந்தொட்டையில் உருவாகியிருந்தது. ஆளும் கட்சியின் முஸ்லிம் அமைச்சர்கள் அவ்வாறு செல்லும் போது தனித்து செல்லாது அப்பிரதேசங்களிலுள்ள ஆளும்கட்சி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்றிருக்கவேண்டும். எதிர்காலத்திலாவது இதுபற்றி சிந்தித்து செயற்படுவது அவசியமாகும்.

 நாட்டில் இனக்கலவரங்கள் நடக்கும் போது அவற்றை கையாள்வதற்கு பல இனத்தவர்களையும் கொண்ட ஒரு பொலிஸ் பிரிவின் தேவை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஜிந்தோட்டை சம்பவத்தின் போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு காரணம் இவ்வாறான ஒரு பொலிஸ் பிரிவு இல்லாமையாகும்.


இலங்கையில் நாம் அடிக்கடி சிங்கள, முஸ்லிம், சிங்கள, தமிழ் கலவரங்கள் நடைபெறுவதை கேட்டுள்ளோம். இது இன்றுடன் முடிந்துவிடும் விடயமாக இருக்காது. எதிர்காலத்தில் இதுபோன்ற கலவரங்களை கையாள்வதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய ஒரு விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்படவேண்டும்.


இவ்வாறான விடயங்களை கையாள்வதற்கான பயிற்சிகளுள் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இயங்கும் தேசிய ஒருங்கிணைப்பு குழுவும் இது குறித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு பொலிஸ் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை உருவாக்குவதற்கு ஆர்வம் காட்டவேண்டும். கிந்தொட்டையில் நீண்டகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இப்போது ஒரு கசப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்து வைப்பது குறித்து மதத்தலைவர்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்து முன்பிருந்த நிலையை மீண்டும் உருவாக்க முன்வரவேண்டும் என்று வேண்டுகின்றோம்.

- NM அமீன் ( நவமணி ஆசிரியர் கட்டுரை-
கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடம் என்ன? கிந்தோட்டை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் உணர்த்தும் பாடம் என்ன? Reviewed by Madawala News on 11/22/2017 01:59:00 PM Rating: 5