Ad Space Available here

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ் அதிகபடியான சபைகளை கைப்பற்றும்!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ் அதிகபடியான சபைகளை கைப்பற்றும் என அக்கட்சியின் கிழக்கு மாகாண கொள்கைப் பரப்பு செயலாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சபையாக மாறியிருக்கும் தற்போதைய பாராளுமன்றத்தில் தமிழ் தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தங்களுடைய நீண்ட கால அபிலாசைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்கள் இந்த அரசை கொண்டுவந்தனர். போலியான பிரச்சாரங்களையும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் மேலோங்கச் செய்து மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களை கூட்டுக்கழைத்து,
ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தங்களுடைய அபிலாசைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமகால அரசியல் நடவடிக்கைகள் அமைகின்றன. இதனால் நாட்டை மீண்டும் யுத்த பூமியாக மாற்றி முஸ்லிம் சமூகம் காரணமின்றி தண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவர்களின் இந்த நடவடிக்கைகளுக்கு நாடுகடந்த விடுதலைப் புலிகளுடைய அரசாங்கமும் அதற்கு நிதிவழங்கும் தமிழ் டயஸ்போரா மற்றும் அதநோடு சேர்ந்த சில வெளிநாட்டு சக்திகளும் ஒன்றுசேர்ந்து உதவி புரிவதுடன் நாட்டை துண்டாடுவதனூடாக சிறுபான்மையரான முஸ்லிம்களையும் அவர்களது அரசியல் அடையாளத்தையும் இல்லாமல் செய்வதையே நோக்காக கொண்டுள்ளனர். இவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற தற்போதைய ஆட்சியில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரவிருக்கும் எந்தவொரு தேர்தல் கோசமும் அல்லாத வகையிலேயே தேசிய காங்கிரஸ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்பிரச்சாரத்தினூடாக மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம், குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மற்றும் கொண்டுவரப்பட இருக்கும் அரசியலமைப்பு திருத்தம், ஜனாதிபதி அதிகார குறைப்பு யோசனை, வடகிழக்கு இணைப்பு, ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது  என்பது பற்றியான அரசாங்கத்தின் ஒருதலைபட்சமான நகர்வுகள் குறித்தான சாதகபாதகங்கள் அதனூடாக மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு மீண்டும் மீண்டும்  ஏமாற்றப்படுவதனை நாம் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

இதுதவிர, அரசாங்கம் தேர்தல்களை பிற்போடுவதுடன் கடந்த  காலங்களில் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்காமல் பாதுகாத்து வருவதனையும் இவ்வரசாங்கம் நாட்டையும் நாட்டின் இறைமை, சட்டம், நீதி, சுயாதீனம் என்பவற்றை குழிதோண்டிப் புதைக்கும் அதேவேளை நாட்டின் வளங்களை வேளிநாடுகளுக்கு விற்பனை செய்வதையும், இதனால் நாட்டு மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி கண்டுவருவதையும் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கு இருக்கிறது என்ற வகையில் நாம் அதனை பொறுப்புணர்ச்சியுடன் செய்து வருகிறோம்.

எமது இந்த தூய்மையான பணியை வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவிருக்கிறோம். எமது இந்த பிரச்சார நடவடிக்கையின் ஊடாக சிங்கள தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் பாரியளவிலான அரசியல் மாற்றத்தையும் இனமத பாகுபாடுகள் இல்லாத எமது பிரச்சாரம் மக்கள் மத்தியில் "தேசிய காங்கிரஸ்" மீதான பெருமளவிலான ஆதரவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இதனால் நாளுக்கு நாள் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அரசியல் தலைமைகளின் ஏமாற்று அரசியலில் இருந்து விடுபட்டு பெரும் வாரியான இளைஞர்கள் 
தேசிய காங்கிரஸின் கொள்கையை ஏற்று ஆதரவளிக்க முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இது எமது உண்மைக்கு கிடைத்த வெற்றியாக நாம் பார்க்கிறோம்.

தற்சமயம் உள்ளூராட்சி தேர்தல் ஒன்று எம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் தேர்தலை நடத்துமா என்கிற சந்தேகம் இன்னும் களையப்படவில்லை என்றாலும் நாம் எந்த ஒரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்.

எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறுமாக இருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகபடியான உள்ளூராட்சி சபைகளை தேசிய காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ் அதிகபடியான சபைகளை கைப்பற்றும்!  எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய காங்கிரஸ் அதிகபடியான சபைகளை கைப்பற்றும்! Reviewed by Madawala News on 11/08/2017 04:39:00 PM Rating: 5