Ad Space Available here

அரசமைப்புச் சபை செல்லுபடியற்றது அறிக்கையும் சட்டவிரோதமானது!

அரசமைப்பு நிர்ணய சபையானது செல்லுபடியற்றது என்றும், வழிநடத்தும் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது அரசமைப்புக்கு முரணானது என்றும் அறிவிக்குமாறும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியும் முன்னாள் நிதி அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ. இதற்கான காரணங்களை பட்டியலிட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று அவர் கடிதமொன்றை கையளித்தார்.


"மேற்படி கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆளுந்தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க, எதிர்க்கட்சி பிரதம கொறடா அநுரகுமார திஸாநாயக்க, கூட்டுஎதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும் அனுப்பட்டுள்ளன.


2015 ஜனவரியில் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசைக் கலைத்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கினார். அப்போது பிரதான எதிர்க்கட்சி பக்கம் 41 உறுப்பினர்களே இருந்தனர்.


அதன்பின்னர் ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தெரிவான 95 உறுப்பினர்களில் 43 பேரடங்கிய அணியொன்று புதிய அரசு உருவாக்கப்பட்டதிலிருந்து ஜனாதிபதியை ஆதரித்துவருகின்றது. எஞ்சிய 53 பேரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பக்கம் நிற்கின்றனர்.


எனவே, அமையப்பெற்ற அரசை தேசிய அரசு எனக் கூறமுடியாது. அதை கூட்டரசு என்றே அர்த்தப்படுத்தவேண்டும். இருந்தும் தேசிய அரசாக அது அடையாளப்படுத்தப்பட்டது என்றும் அந்தக் கடிதத்தில் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.


மிகையான நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படும். அரசமைப்புப் பேரவையும், சுயாதீன ஆணைக்குழுக்களும் அமைக்கப்படும். தொகுதிவாரியான தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக களமிறங்கியபோது உறுதியளித்திருந்தார்.

இதன்படி 2015 ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பிக்களின் ஆதரவுடன் 19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.


62 இலட்சம் மக்களால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய புதிய அரசமைப்பொன்றை அரசு நிறைவேற்றவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், அவ்வாறு கூறமுடியாது. கீழ்வரும் காரணங்களை அறிவதன்மூலம் இதை உணரலாம்.


1. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தின் தலைமையாக இருக்கின்றபோதிலும், அவர் சட்டவாக்கத்தின் தலைமை கிடையாது.


2. நாடாளுமன்றத்தின் தலைமையாக பிரதமர் இருக்கின்றபோதிலும், நாடாளுமன்ற அலுவல்களின் செயற்பாடுகள் மற்றும் நடத்துதலுக்கான அதிகாரங்கள் சபாநாயகருக்கே அளிக்கப்பட்டுள்ளன.


3. நாடாளுமன்றத்தில் அமர்வதற்கும் அவரது விருப்பத்தின்பேரில் பங்குகொள்வதற்கும் தகுதியுடையவராக இருக்கின்றபோதிலும் கூட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கிடையாது. அதேபோல், அவருக்கு வாக்களிக்கும் உரிமையும் கிடையாது.


4. மிக முக்கியமாக, தற்போதைய ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியினதும் தலைவராக களமிறங்கியிருக்கவில்லை. அவர் அரசியல் கட்சியொன்றின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகியிருந்த சாதாரண நபரொருவராகவே இருந்ததுடன், அந்த வகையில், அரசமைப்பு மாற்றங்களுக்கோ அல்லது சட்டத்திருத்தங்களுக்கோ ஆணை கோருவதற்கான உரிமை அவருக்குக் கிடையாது. அவரது உரிமையானது நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


5. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அவர் தலைவராகயிருந்தபோதிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியின் சார்பில் தெரிவான 95 உறுப்பினர்களில் 43 பேர் கொண்ட அணியொன்று மாத்திரமே அவருக்கு ஆதரவளித்திருந்தது.


6. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது .தே.. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட இரு விஞ்ஞாபனங்களும் திட்டவட்டமான உண்மையொன்றை எடுத்துரைக்கின்றன. அதாவது, இரு கட்சிகளினதும் கொள்கைகளானது ஒன்றுகொன்று முரணாகக் காணப்படுவதுடன், அவை இரண்டிற்கும் இடையிலான எந்தவொரு நல்லிணக்கத்தையும் முற்றாக நிராகரிப்பதாகவும் அமைந்துள்ளன.  எனவே, புதிய அரசமைப்பை உருவாக்க 6.2 மில்லியன் மக்களின் ஆணையுள்ளது எனக் கூறப்படுவது சிறுபிள்ளைத்தனமானதாகும்.


20 மில்லியன் பிரஜைகள் வாழும் நாடொன்றில் ஜனாதிபதிக்கு ஆணை வழங்கிய 6.2 மில்லியன் மக்களின் அபிலாஷையை பூர்த்திசெய்வதற்கு புதிய அரசமைப்பொன்று நிறைவேற்றப்படவேண்டும் என்று விவாதிப்பது அபத்தமானது என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் விஜயதாஸ ராஜபக்ஷ.


அதேவேளை, அரசமைப்புச் சபையானது சட்டவிரோதமானது என்பதற்குரிய விளக்கத்தையும் அவர் வழங்கியுள்ளார்.


1. அரசமைப்புச் சபைக்கான சட்டமூலமொன்றானது நாடாளுமன்றத்தில் சபைக்கு சமுகமளிக்காத உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களது ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும். அரசமைப்பின் 85ஆவது உறுப்புரைக்கமைய சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலமும் அங்கீகரிக்கப்படவும் வேண்டும்.


2. நாடாளுமன்றத்தின் சட்டவாக்க நடைமுறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையீடு செய்யக்கூடிய அல்லது செல்வாக்கு செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனம் அல்லது அதிகாரசபையின் உருவாக்கமொன்றை அரசமைப்பின் 76ஆவது உறுப்புரை திட்டவட்டமாகத் தடுக்கிறது.


3. அரசமைப்பின் ஏதேனுமொரு ஏற்பாட்டை யாதேனுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் மீறும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும்போது அளிக்கும் உறுதிமொழி மீதான மீறலாகவே அது கருதப்படும்புதிய அரசமைப்பொன்றை இயற்றுவதற்கு போதுமான ஏற்பாடுகளும் நடைமுறைகளும் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளபோதிலும், திட்டமிட்ட வகையில் அரசமைப்புக்கு முரணான வகையில் அரசமைப்புச் சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் குழப்பமானதும் அராஜகமானதுமான நிலைமையொன்றை ஏற்படுத்தியுள்ளது.இது தற்போதைய ஜனநாயகம் தொடர்பிலான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது.

இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் தனி நாடொன்றை உருவாக்குவதற்கு இலங்கைக்கு உள்ளோ அல்லது வெளியிலோ,நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரும் ஆதரவளிக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ அல்லது பரிந்து பேசவோ கூடாது என்று அரசமைப்பின் 157(1) உறுப்புரையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.


எனினும், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட வழிப்படுத்தும் குழுவின் அறிக்கையின் சில முன்மொழிவுகளானது இந்த நாட்டைப் பிளவுபடுத்த வழிவகுப்பதில் மறைமுகமாகவும் அதேபோல், நேரடியாகவும் கருவியாக அமையக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் கருதுகிறேன்.


மேற்படி சூழ்நிலைகளுக்கமைய, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நான் உள்ளிட்ட எம்.பிக்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த அரசமைப்புச் சபையை நாடாளுமன்றத்தினால் இழைக்கப்பட்ட நல்லெண்ண தவறொன்றென செல்லுபடியற்றதாக்குமாறோ அல்லது அறிவிக்குமாறோ வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதற்கமைய, வழிபடுத்தும் குழுவையும் அதன் அறிக்கைகளையும் அரசமைப்புக்கு முரணானது என்றும் செல்லுபடியற்றதென்றும் அறிவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சபை செல்லுபடியற்றது அறிக்கையும் சட்டவிரோதமானது!  அரசமைப்புச் சபை செல்லுபடியற்றது அறிக்கையும் சட்டவிரோதமானது! Reviewed by Madawala News on 11/15/2017 11:42:00 AM Rating: 5