Ad Space Available here

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்-ஜெம்சாத் இக்பால்-

 

மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளுமென்றும், அவ்வாறான முயற்சிக்கெதிரான எந்தவிதமான விமர்சனங்களுக்கும் முகம் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவே இருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

இரத்மலானையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைமை அலுவலகத்தில் புதிய பிரதான கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

 

புதிய சட்டதிட்டங்களை வகுக்க வேண்டிய தேவைப்பாட்டிற்கு மத்தியில், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருந்தபோதிலும், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையாக அது தொடர்பான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.

 

எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகின்ற ஒரு காலகட்டத்தில் இருக்கின்றோம். விலைவாசி அதிகரிப்புப் பற்றியும் குறிப்பாக தேங்காய்க்கான விலையேற்றம் பற்றியும் கூட பேசப்படுகின்ற காலமிது. கூட்டு எதிர்க்கட்சியினருக்கு பேசுவதற்கு இவற்றை விட்டால் வேறு எவையுமில்லை. இவ்வாறான சூழ்நிலையில் மக்களுக்கு போதிய தெளிவை வழங்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

 

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றிய கோரிக்கையை நாங்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றோம். ஏமது அமைச்சின் செயலாளரும் அவர்களது வேண்டுகோளை சாதகமாக பரிசீலித்து வருகின்றார்.

 

ஏனது வழிகாட்டலில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நாடளாவிய ரீதியில் அநேகமான அபிவிருத்தித்திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், அனர்த்தங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று நிவாரண நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவதற்காக பல்வேறு தரத்திலான 250 ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது அண்மையில் நடைபெற்ற அனர்த்தங்களின் போது நிரூபித்துக் காட்டப்பட்டது.

 

இந்த நாட்களில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. தரக்குறைவான எரிபொருளை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த கப்பல் திருப்பியனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை உக்கிரமைந்திருக்கின்றது. தட்டுப்பாடு ஏற்படுகின்ற காரணத்தினால் தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேகரித்து வைப்பதற்கு பாவனையாளர்கள் முண்டியடித்துக் கொள்வதாலேயே இது தீவிரமடைந்துள்ளது. அண்மையில் நான் பயணஞ் செய்த இரண்டு வாகனங்களுக்கு தரக்குறைவான எரிபொருள் நிரப்பப்பட்டதன் விளைவாக அவை பழுதடைந்ததால் செப்பனிடுவதற்கு மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டது என்றார்.

 

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உத்தேச பயிற்சி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் அமைச்சர் ஹக்கீம் பங்குபற்றினார். 280பேர்ச்சஸ் நிலப்பரப்பில் 9800 சதுர மீட்டரில் நிர்மாணிக்கப்படவுள்ள அந்த மூன்றுமாடிக் கட்டிடத்திற்கான 1218 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும், இலங்கை அரசாங்கமும் முன்வந்துள்ளன.

 

அத்துடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைமையகத்தில் குடிநீர்ப் பாவனையாளர்களின் நன்மை கருதி நவீனமயமான கட்டணம் செலுத்தும் நிலையத்தையும் அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷpனி பெர்ணான்டேபுள்ளே, அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிகச் செயலாளர் .சீ.எம்.நபீல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே..அன்சார், உப தலைவர் ஷபீக் ரஜாப்தீன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கு பற்றினர்.

புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும்  புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் Reviewed by Madawala News on 11/07/2017 01:36:00 AM Rating: 5